Header Ads



எம்மை பதவி நீக்கினால் பிரச்சினை இல்லை - அமைச்சு பதவியை விட நாடும், மக்களின் பாதுகாப்பும் முக்கியம்


தாம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாராயின் அதில் எந்த பிரச்சினையும் இல்லை என பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற நிலையிலும் யுகதனவி ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றதோடு அதற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்தமை தவறானதென ஜனாதிபதி தெரிவித்ததாக இன்று (28) செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த போதே அமைச்சர் உதய கம்மன்பில இதனை குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிக்கைகளின் செய்தி ஆசிரியர்களுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு கருத்துரைத்ததாக இன்றைய தேசிய நாளிதழ்களில் செய்தி வெளியிட்டப்பட்டன.

அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் அமைச்சுப் பதவியிலிருந்து விலகி அவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமைச்சர் உதய கம்மன்பில, தாம் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களும் யுகதனவி விடயத்தில் தவறிழைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தவறிழைத்திருந்தால் மாத்திரமே பதவியிலிருந்து விலக வேண்டும். 

அத்துடன் அமைச்சு பதவியை விட நாடும், நாட்டு மக்களின் பாதுகாப்பும் முக்கியமானதெனவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.