Header Ads



இஸ்லாத்திற்கு எதிராக பிரியந்த செயற்படுவதாக கூறி, தொழிற்சாலை ஊழியர்கள் செய்த ஆர்ப்பாட்டமே படுகொலையில் முடிந்துள்ளது - பஞ்சாப் காவல்துறை பிரதானி


பாகிஸ்தானில் இலங்கையரான பிரியந்த குமார தியவடன தாக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பில் மேலும் சில தகவல்களை பஞ்சாப் காவல்துறை பிரதானி சர்மார் அலி கான் நேற்று (04) வெளியிட்டுள்ளார்.

சம்பவம் ஏற்பட்ட தொழிற்சாலைக்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் குழு வரவுள்ளமையினால் அங்குள்ள இயந்திரங்களில் ஒட்டப்பட்டிருந்த மதம் சார்ந்த பதாகைகளை அகற்றுமாறு முகாமையாளரான பிரியந்த குமார தியவடனவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சாலையில் பணியாளர்கள், பிரியந்த குமார தியவடன இஸ்லாம் மதத்திற்கு எதிராக செயற்படுவதாக தெரிவித்து அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பின்னர் அவரை தாக்கிய பணியாளர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்று வீதியில் வைத்து மீண்டும் தாக்குதல் நடத்தி கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேக நபர்களான ஃபர்ஹான் இத்ரீஸ் மற்றும் உஸ்மான் ரஷீட் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் காவல்துறை பிரதானி தெரிவித்துள்ளார்.

கைதானவர்களில் 13 பேர் பிரதான சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக 160 சிசிரீவி காணொளி காட்சிகள் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டுள்ளதோடு, தொலைபேசி தரவுகள் ஆராயப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை முற்பகல் 10.02 அளவில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதோடு 10.45 அளவில் பிரியந்த குமார தியவடன தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முற்பகல் 11.05 அளவில் அவர் உயிரிழந்ததாகவும் 11.28 அளவில் தகவல் கிடைத்து 11.45 அளவில் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும் காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த பகுதியில் காவல்துறையினரும் இருந்தமை காணொளி காட்சிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.