Header Ads



சஜித் தலைமையிலான அரசொன்றை உருவாக்க, கடனுள்ள நாட்டை வழங்க மாட்டோம் - முன்னேற்றியே நாட்டையே வழங்குவோம் - பசில்


எமக்கு ஒத்துழைக்க தயாரென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தாலும் இங்கு வந்துள்ள சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கு சந்திக்க அவர் இதுவரை நேரம் வழங்கவில்லெயன நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழைக்குமாறு கோரிய அவர் சஜித் தலைமையிலான அரசொன்றை உருவாக்குவதாக எதிரணி கூறியது . நாம் வழங்குவதானால் நாட்டை முன்னேற்றியே வழங்குவோம். கடனுள்ள நாட்டை வழங்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது.

டுபாயும் மாலைதீவும் அச்சமின்றி சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறந்துள்ளன. சுற்றுலா அமைச்சர் அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். சேவைத் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கப்பற்துறையில் அதிக முதலீடு செய்யப்பட்டுள்ளது. எமது நாட்டின் அமைவிடம் காரணமாக விமான சேவை வாயிலாகவும் அதிக வருமானம் பெற முடியும். தகவல் தொழில் நுட்ப கம்பனிகள் எமது நாட்டுக்கு வந்துள்ளன. 2,000 இளைஞர்களை அதிக சம்பளத்துக்கு நியமித்துள்ளனர். 5,000 பேருக்கு வரை தொழில் கிடைக்க இருக்கிறது.

அந்நிய செலாவணி நெருக்கடி உள்ளது. அதனை மறைக்கத் தேவையில்லை. இது இன்று நேற்று ஏற்பட்டதல்ல. சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது புதிய விடயமல்ல. 1961 இலும் அங்கு சென்றுள்ளனர். யுத்தம் நிறைவடைந்தவுடன் நான் கப்ராலுடன் சென்றேன்.

அனைத்திற்கும் உதவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறினார். சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர்.

வருடாந்தம் அவர்கள் இங்கு வருவர். நாம் அங்கு செல்லத் தேவையில்லை. ஆனால் சர்வதேச நாணய நிதி அதிகாரிகளை சந்திக்க அவர் நேரம் வழங்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் பற்றி எதிரணி தெரிவித்தாலும் எமக்கு நம்பிக்கை கிடையாது.

உலக வங்கி இதுவரை ஒருநாட்டுக்கு வழங்கிய அதிக நிதியான 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியது.

கடந்த வருடம் செலுத்த வேண்டியிருந்த கடனை வழங்கினோம். எமக்கே உரிய கையிருப்பை நாம் பேணுவோம். உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்த அதிக நிதி ஓதுக்கப்பட்டுள்ளது. கைத்தொழிற்துறை மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கடன் பெற்று ஏன் வீதி அமைக்கிறீர்கள் என்று வினவுகின்றனர். கைத்தொழில் துறை முன்னேற்றத்திற்கு வீதி அபிவிருத்தி பிரதானமானது. மின்சாரத் துறை மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் முன்னேற்றப்பட்டது.ஒவ்வொரு அங்குல நிலத்திற்கும் நீர் வழங்குவோம். பலமான நாடொன்றை உருவாக்க ஒத்துழையுங்கள்.

குறைந்த பட்சம் 25 வருடங்கள் நீடித்த அதிபர், ஆசிரியர் சம்பள பிரச்சினை தீர்ப்பதற்கு நிதி ஒதுக்கியதை எதிர்ப்பதாக இருந்தால் எதிராக வாக்களியுங்கள். எம்.பிக்களின் சிறப்புரிமைகளை குறைப்பதாக இருந்தால் எதிராக வாக்களியுங்கள்.

எம்.பிக்களுக்கு கிராமங்களுக்கு சென்று சேவை செய்ய 15 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்த தொகை தேவையில்லை என்றால் சொல்லுங்கள். அந்த செலவை குறைத்துக் கொள்ளலாம். பட்டதாரிகளை நிரந்தரமாக்குவதை எதிர்ப்பதாக இருந்தால் எதிராக வாக்களியுங்கள். பிணைமுறி மோசடி பணத்தை அரசுக்கு எடுப்பதை எதிர்ப்பதாக இருந்தால் எதிர்த்து வாக்களியுங்கள் என அவர் எதிரணியினரை பார்த்து கூறினார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

1 comment:

  1. பச்சைப் பொய்யை பச்சையாகப் புழுகுவதற்கும் ஓர் அளவிருக்கின்றது அப்பா?

    ReplyDelete

Powered by Blogger.