Header Ads



இலங்கை முஸ்லிம்களை 2 பிரிவாக வேறுபடுத்த முயற்சி, அலி சப்ரி தடுமாற்றம், சாலியின் நீதிமன்றத் தீர்ப்பு கன்னத்தில் அறைந்துள்ளது - ஹக்கீம்


இந்நாட்டு  முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்கு  சிலர் முயற்சித்துக்கொண்டி ருக்கின்றார்கள். அதற்காகத்தான் “ஒரு நாடு ஒரு  சட்டம்” என்ற செயலணியொன்றை அமைத்துக் கொண்டு மாவட்டம் மாவட்டமாக கூட்டம் நடத்தி திரிகின்றார்கள். இந்த விவகாரம் பெரும்பான்மை சமூகத்தவரிடத்திலும் கூட பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கலாபூஷணம் நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் எழுதிய, இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளா்கள் பற்றிய ஆய்வு நூலான 'திதுலன தாரக்கா' (மின்னும் தாரகை), சனிக்கிழமை (04) , கொழும்பு அல்–ஹிதாயா தேசியப் பாடசாலை பஹார்தீன் கேட்போர் கூடத்தில் வெளியிட்டு வைக்கப்பட்ட போது , பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அங்கு  உரையாற்றும் போது மேலும் தெரிவித்ததாவது,

 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் எமது இந்தச் சமூகம் தீவிரவாத்திற்கு உடந்தையான சமூகம் என்று நிறுவுவதற்கு காத்துக்கொண்டிருக்கும் பலருக்கு துரும்பாக அமையக் கூடிய விடயங்கள் தான் இவ்வாறான விவகாரங்களாகும். இத்தகைய சமூக கட்டமைப்புக்குள் இருக்கின்ற சீரழிவிலிருந்து எவ்வாறு எமது சமூகத்தை காத்துக்கொள்வது என்ற பெரிய சிக்கலுக்குள் நாங்கள் இருக்கின்றோம்.

  நான் உலமாக்களை குறை கூறவில்லை. அண்மையில் தன்னை ஆலீம் என்று சொல்லிக்கொண்டு ஒருவர், முக நூலில் படுமோசமான பதிவொன்றையிட்டிருந்தார். அதாவது, சமூக வலைத்தளங்களில் பெண்கள் தமது படங்களை பதிவிட்டால் அத்தகையவர்களுக்கு  நிச்சயமாக நரகம்தான் கிடைக்கும் என அவர் பதிவிட்டிருந்தார்

அதற்கு பதிலடிக் கொடுக்கும் விதத்தில் எனது உறவினரொருவர் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றுகின்ற எழுத்தாளரும், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் புலமை வாய்ந்தவருமான லரீனா ஹக் என்பவர் விசனமடைந்து, நறுக்கென பேச்சு வழக்கில் நாட்டுப்புறப் பாணியில் அழகாக பதிவொன்றையிட்டுவிட்டார். நான் அதனைப் பார்த்துவிட்டு, அதற்கு கருத்துக் கூறினால் இந்தச் சமூகத்தில் உள்ள சிலர் என்னுடன் வரிந்துகட்டிக்கொண்டு வம்புக்கு வந்துவிடுவார்கள் என்றெண்ணி, "லைக் "மட்டும் கொடுத்துவிட்டு கருத்துக்கள் எதுவும் கூறாமல் மௌனித்து விட்டேன். 

உடனே அவர், என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்விடயம் தொடர்பில் ஆத்திரம் பொங்க கதைத்தார். நான் பொறுமையாக செவிசாய்த்து விட்டு, "இதன் பிறகு எதுவித அசம்பாவிதங்களும் உங்களை வந்தடையாமல்  காத்துக்கொள்ளுங்கள் " என்று கூறினேன். ஏனெனில், இன்று இத்தகைய விவகாரங்கள் மிக மோசமான திக்குகளிலே போய்க்கொண்டிருக்கின்றன.  முஸ்லிம் சமூகத்திற்குள் எங்கெங்கெல்லாம் பிழைகளை கண்டுபிடிக்கலாமென ஓடித்திரிகின்ற கூட்டமொன்று உலாவரும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.  பாராளுமன்றத்திலும் பெண்கள் சம்பந்தமாக நிறையப் புரளிகள் அவ்வப்போது கிளப்பப்படுகின்றன.

 மாத்தளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான ரோஹினி கவிரத்தினவின் தந்தை மற்றும் கணவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்களாவர். அவர் பெண் என்ற ரீதியில் பல விடயங்களை மிகவும் துணிகரமாக பேசுபவர். அண்மையில் அவ்வாறு பாராளுமன்றத்தில் எழுந்து நின்று பேசுகையில், எங்களது புதிதாக வந்த இளம் உறுப்பினரொருவர் தலையிட்டுச்  சொன்ன விவகாரம் இன்று மிகப் பெரிய பூதாகரமாக வெடித்துள்ளது. 

சிலேடையாக அவர் கூறிய விடயம் இன்று பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அந்த விவகாரம் பெண்களுக்கு மிக ஆத்திரத்தை ஏற்படுத்துகின்ற விடயமாக மாறி, விஷயம் தெரியாமல் உளரிக் கொட்டிய அந்த பாராளுமன்ற உறுப்பினரை சமூக வலைத்தளங்களில் கிழித்து வாங்குகின்றார்கள். 

பெண்கள் மீது பிரயோகிக்கும் தேவையற்ற வசனங்கள் என்ற விவகாரம் மிகவும் கண்டனத்திற்குரிய விடயமாக மாறியுள்ளது. இவ்வாறாக இந்த நிலைமை இலங்கைப் பாராளுமன்றத்திற்குள்ளும் காணப்படுகின்றது.

 இவ்விடயத்திற்காக நான் குறித்த பாராளுமன்ற உறுப்பினரை மன்னிப்புக் கேட்க சொல்ல வேண்டுமென சபாநாயகரிடம் சொன்னேன். சம்பந்தப்பட்டவர் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். நான் சில வருட காலம் அந்த சபைக்குத் தலைமை தாங்கியவன் என்ற அடிப்படையில் , "குறைந்த பட்சம் உங்களுக்குள்ள சிறப்பு  அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை ஒரு நாளைக்காவது பாராளுமன்றத்திற்கு வருகை தராமல் செய்து அடையாள ரீதியான தண்டனையையாவது வழங்குங்கள்" எனக் கூறினேன். அதையும் அவர் செய்யவில்லை.  பெண்களுக்கு மத்தியில் இவ்விடயம் பேசுபொருளாக ஓங்கியுள்ளது. 

இப்போது நாங்கள் செய்யத் தவறிய ஒரு விடயத்தை வைத்துக் கொண்டு, இன்றைய ஆட்சியாளர்கள் வேண்டுமென்று இந்நாட்டில் இடம்பெறக் கூடிய சகல விதமான தீவிரவாதத்திற்கும் காரணம் முஸ்லிம்களது தனியார் சட்டமெனச் சொல்கின்றார்கள். முஸ்லிம்களது விவாக, விவாகரத்து சட்டத்தை திருத்துகின்ற விவகாரத்தில் தேவையில்லாமல் ஆன்மீக மற்றும் அரசியல் தலைமைகளும் இழுத்தடிப்புச் செய்தமையே இன்று "குரங்கின் கையில் பூமாலை"யாக மாறியுள்ளது. இப்போது ஆட்சியாளர்கள்  தமக்கேற்றவாறு தயார்படுத்தவும், திரிபுபடுத்தவும் எமது குறைகளை அலசி ஆராய்கின்றனர்.

  நீதி அமைச்சரும் பெரும் தடுமாற்றத்தில் இருக்கின்றார். அவரை குறை சொல்லவும் முடியாது. நானும் நீதி அமைச்சராக இருந்தவன் என்ற அடிப்படையில் என்னுடைய அமைச்சு காலத்திலும் கூட அதனை சரிசெய்ய முற்பட்டோம். பிரதம நீதியரசருடன் இணைந்து குழுவொன்று நியமித்து , அதற்கான இறுதி அறிக்கையை தயாரித்த போது ஆதரவாகவும், எதிராகவும் ஒன்பதுக்கு ஒன்பதாக இரண்டாகப் பிரிந்து விட்டார்கள். அதை வைத்துக்கொண்டு அவ்விவகாரம் இழுபறியானது. இடையில் சஹ்ரான் செய்த நாசகாரச் செயலால் இன்று நிலைமை தலைகீழாகியுள்ளது. அதனை இலகுவாக விட்டுக்கொடுக்கவும் முடியாது. போராடத்தான் வேண்டும்.

ஆனால், இதில் எங்கு பிழை இருக்கின்றது என்று பார்த்தால், எங்களது தேவையற்ற இழுபறிகள் காரணமாகத் தான் இதனைச் சரி செய்ய முடியாதுள்ளது. சில விடயங்களை பொறுத்தமட்டில் கட்டாய விட்டுக்கொடுப்புக்களைச் செய்து தான் ஆகவேண்டியுள்ளது. இப்போது எல்லோரும் வந்து மூக்கு நுழைக்கின்ற விடயமாக நாங்களாகவே இதனை ஆக்கிவிட்டோம். இப்போது இருக்கின்றதையும் பறிகொடுக்கக் கூடிய நிலைமை வந்துவிடாமல் எப்படியாவது எங்களுடைய தனியார் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டும். 

மத்ரஸா பாடத்திட்டத்திலும் திருத்தங்களை மேற்கொள்ள முற்படுகின்றார்கள். 

முஸ்லிம்கள் மத்தியில் ஒவ்வொரு விதமான சிந்தனா வட்டங்கள் இருக்கின்றன. விதவிதமான கொள்கைகளின் அடிப்படையில் மேற்கொண்ட பாட விதானங்களை ஒருசேர அமைக்க வேண்டுமென நீண்ட காலமாக முஸ்லிம் சமய,கலாசார விவகாரத் திணைக்களம் ஈடுபட்டிருக்கின்றது. அதற்கான நல்ல பரிந்துரைகளை செய்தும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் எழுந்தன. அவ்வாறிருக்க, இப்பொழுது அரபு மதரஸாக்களுக்கு மூடு விழா நடத்துவதற்கு அரசாங்கம் எத்தனித்து வருகின்றது.

வெளிநாட்டிலிருந்து பயங்கரவாதத்தை ஆய்வு செய்வதற்கென பேராசிரியர்கள் சிலரை இங்கு வரவழைத்துள்ளனர். ஜாமிஆ நளீமிய்யா தொடர்பிலும் கூட தேடிப் பார்க்கின்றனர். தேவையற்ற விபரீதங்களை இன்று முஸ்லிம்களுக்கு மேல் கொண்டுவருவதற்கான எத்தனங்கள் நடந்துக்கொண்டு இருக்கின்றன. இவற்றிலிருந்து மீள்வதற்கு எங்களுக்கு மத்தியிலும் மிக பக்குவமாகவும் நேர்மையாகவும் வாதாடிப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றை பயன்படுத்தி இன்றிருக்கின்ற சூழலில் சில சக்திகள் முரண்டுபிடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களை பாரம்பரிய முஸ்லிம்கள், பாரம்பரியமற்ற முஸ்லிம்கள் என இரண்டு பிரிவாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக ஒருசிலர் முயற்சித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அதற்காகத் தான் “ஒரு நாடு ஒ ரு சட்டம்” செயலணியொன்றை அமைத்துக் கொண்டு மாவட்டம் மாவட்டமாக கூட்டம் நடத்தி திரிகின்றார்கள். இந்த விவகாரம் பெரும்பான்மை சமூகத்தவரிடத்திலும் கூட பலத்த கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது.

அண்மைக்காலமாக இடம்பெற்று வரக் கூடிய சம்பவங்கள் தொடர்பில் சற்று ஆறுதலளிக்கின்ற வகையில் அசாத் சாலியின் விடுதலை அமைந்துள்ளது. மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் நேர்மையாக அமைந்திருந்தது. முஸ்லிம்களை பழிவாங்குவதற்காக மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்காக நாங்கள் செல்ல இருக்கின்ற ஒரே இடம் தான் நீதிமன்றம். இன்று முதுகெலும்புள்ள நீதிபதிகளும் இருக்கின்றார்கள். 

அசாத் சாலியின் வழக்கில் மேல்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பு கன்னத்தில் அறைந்தததைப் போன்று சொல்லப்பட்டிருந்தது. அவருடைய ஆறுதலுக்காக நான் இரண்டு நாட்கள் வழக்காடுகின்ற இடத்தில் போய் அமர்ந்து விசாரணையைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சாட்சியங்களை நெறிப்படுத்துகின்ற போது நீதிபதி இதிலுள்ள உள்நோக்கங்கள் வேறு என்பதை உணர்ந்துக்கொண்டார் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. தீர்ப்பைப் பார்த்த போது மிகவும் சந்தோஷப்பட்டேன். 

இந்த விவகாரத்தில் பொய் குற்றச்சாட்டைக் கொண்டு வந்தவர்களை நீதிமன்றம் விசாரணைக்கு அழைத்துள்ளது.

வெறுப்பு பேச்சை குற்றமாகச் செய்ய சட்டமூலம் கொண்டுவந்த நோக்கம் வேறு. அதனை இவர்கள் பிரயோகிக்கும் முறை வேறு. அசாத் சாலி கூறியதை வைத்து இனங்களுக்கிடையில் பிரிவினையை கொண்டுவருகின்றார் என வியாக்கியானம் கொடுத்து அவரைத் தண்டிக்க முற்பட்டார்கள். அதற்கு நீதிமன்றம் இடமளிக்கவில்லை என்றார்.

2 comments:

  1. May Allah bless you.and be unity with muslims group do positive things with sake of Allah

    ReplyDelete
  2. முரண்பாடுகள் தந்த வினை என்பது மிகவும் தெளிவான உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.