November 22, 2021

கிழக்கு முஸ்லிம் எம்.பிக்கள் பட்ஜட்டை ஆதரிக்க வேண்டும் : கல்முனை பள்ளிவாசல்கள், பொது நிறுவனங்கள் கூட்டாக வேண்டுகோள்


நூருல் ஹுதா உமர் 

இன்றைய வரவுசெலவுத்திட்டம் தொடர்பில்  முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நண்பகல் கல்முனை முஹையதீன் ஜும்மாப்பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.  இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை கிளை செயலாளர் மௌலவி ஏ. எல்.எம்.நாஸர், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் எம்.எஸ்.எம். நஸீர், கல்முனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தேசமான்ய ஜௌபர், சுன்னத்துவல் ஜமாத் பேரவை தலைவரும், கல்முனை பல்நோக்கு கூட்டுறவு சங்க தலைவருமான ஏ.எம். ஹனீபா, கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் ஆகியோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.  

இங்கு கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், பல நூற்றாண்டு காலமாக நல்லிணக்கத்துடன் வாழ்ந்துவந்த முஸ்லிம் சமூகம் இந்த நாட்டில் ஆட்சிபீடமேறிய  சகல அரசாங்கத்துடனும் நெருக்கமான உறவை வளர்த்து வந்துள்ளது.  துரதிஷ்டவசமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தில் முஸ்லிங்களின் பக்கம் மிகவும் பலவீனமாக உள்ளது. மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் இந்த அரசில் பலவீனமாக உள்ளார்கள். இந்த காலகட்டத்தில் பல்வேறு சிக்கல்களை முஸ்லிங்கள் சந்தித்து வருகிறார்கள். வடகிழக்கில் ஏனைய சமூகங்களை சேர்ந்த பல்வேறு சக்திமிக்க  அரசியல்வாதிகள் அரசாங்கத்தினுள் இருக்கத்தக்கதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று வரவுசெலவு வாக்கெடுப்பில் எதிர்த்து நின்று அரசுடன் முட்டிமோதுவது அரசை முஸ்லிங்கள் விடயத்தில் பிழையான தீர்மானங்களை எடுக்க வழிவகுக்கும். கல்முனையை துண்டாடவும், ஏனைய மாவட்டங்களிலுள்ள முஸ்லிங்களின் காணிகளை தமக்கு பெற்றுக்கொள்ளவும் முஸ்லிங்களுக்கு எதிராக பல்வேறு திட்டமிடல்களை செய்து கொண்டிருக்கும் அரசியல் வாதிகளும்,  அரசியல் கட்சிகளும், சில இனவாத பொது இயக்கங்களும் பகிரங்கமாகவே முஸ்லிங்களுக்கு எதிராக செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவு திட்ட விவகாரத்தில் அரசை பகிரங்கமாக பகைத்துக் கொண்டு எதிரணியில் அமர்ந்து கொண்டு எதையும் சாதிக்க முடியாது. 


கல்முனை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அடங்களாக ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிங்களின் கிராமங்கள், காணிப்புலங்கள், உரிமை சார் பிரச்சினைகள், எல்லைநிர்ணய ஆணைக்குழு என்று பல்வேறு விடயங்ககளை ஆராயவேண்டியவர்களாக உள்ளார்கள். எனவே கிழக்கு மாகாணத்தை சேர்ந்த சகல கட்சி எம்.பிக்களிடமும் நாங்கள் கேட்பது அரசிடம் மோதிக் கொள்ளாமல் தந்திரோபாய வியூகங்களை கையாண்டு பறிபோகும் நிலையிலுள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் என்பதே என்றார் 


தொடர்ந்தும் இங்கு கருத்து தெரிவித்தவர்கள், ஜனாதிபதி நியமித்த ஆணைக்குழுவுக்கு ஞாசாராவின் நியமனம் தொடர்பிலான முரண்பாடுகள் உள்ள நிலையில், முஸ்லிம் தனியார் சட்ட பிரச்சினைகள், காணிப்பிரச்சினைகள், உரிமைசார்ந்த தேவைகளை எதிரணியில் இருந்துகொண்டு கூச்சலிட்டு எதிர்த்து சண்டையிட்டு பெறமுடியாது. ஆளும் அரசாங்கத்துடன் ஒன்றித்துச் சென்று பேசி இணக்கப்பாட்டுடன் நடந்து சாதிக்க வேண்டும். கல்முனை மக்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் மு .கா வுக்கு ஆதரவளிப்பவர்கள். அதனால் மு.காவை மக்களின் தேவைகளின் பால் வழிநடத்தும் தேவை கல்முனையில் உள்ள மக்களுக்கு உள்ளது. அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் பிரச்சினைகளை பற்றி பேச காங்கேசன்துறையில் ஆரம்பித்து ஹட்டன் வரையான தமிழ் எம்.பிக்களும் தயாராக உள்ளார்கள். ஆனால் கல்முனையை பற்றி பேச ஒருசிலரை தவிர வேறுயாரும் தயாராக இல்லை என்பதே கவலையான விடயம். மீனவர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், இளைஞர்களின் தேவைகளை பிரச்சினைகளை தீர்க்க பெரும்பான்மை பலத்துடன் உள்ள அரசுடன் இணைந்து செல்ல வேண்டும். அதுவே எதிர்காலத்தை நோக்கிய புத்திசாலித்தமான நகர்வாக இருக்கும்.

இந்த வரவுசெலவுதிட்டம் தோற்குமாக இருந்தால் நாம் எதிர்ப்பது பற்றி சிந்திக்கமுடியும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட இந்த அரசாங்கத்தின் வரவுசெலவு திட்டம் தோற்க வாய்ப்பில்லை. அதனால் ஆதரவாக வாக்களித்து அரசின் இணக்கத்தை பெற்று சமூக தேவைகளை வெல்ல வேண்டும். நாம் அதிகமாக வாக்களித்து நாம் உருவாக்கிய கடந்த நல்லாட்சியில் நாம் எதையும் சாதிக்கவில்லை. பலத்த சங்கடங்களை கடந்து  வந்துள்ளோம். அதனால் இந்த வரவுசெலவுத்திட்டத்திற்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமானவர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இல்லாது வரவுசெலவுதிட்டத்திற்கு  ஹரீஸ் எம்.பி எதிராக வாக்களித்து அதன்மூலம் கல்முனைக்கு எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பாதிப்புக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ், மு.கா தலைவர் ஹக்கீம், மு.கா உயர்பீடமே பதில் கூறவேண்டும் என்றதுடன் இங்கு கலந்துகொண்டிருந்த சகலரும் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம். நிஸார், ஏ.சி.ஏ. சத்தார், ஏ.எம். பைரூஸ், கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன பிரதிநிதிகள், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனை கிளை தலைவர் மௌலவி பீ .எம்.எம். ஜலீல், அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், கல்முனை பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர் மற்றும் விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள், கல்முனை மாநகர பொதுச்சந்தை வர்த்தக சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

4 கருத்துரைகள்:

Panatthai kandaal pinamum wai thirakkum.soniki sollawa wenum panam patthi

சுயநலம் தான் முஸ்லீம்களை இந்தளவு இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது என்பதை இவர்கள் எப்போது உணரப்போகிறார்கள்?

எவ்வளவு அடி வாங்கினாலும் இவர்களின் அடிமை புத்தி விட்டுப்போகாது

Post a Comment