Header Ads



கண்டி - கொழும்பு பிரதான வீதிக்கு - மாற்று வழிகள் அறிவிப்பு


மண்சரிவு அச்சுறுத்தல் காரணமாக நேற்றிரவு 10 மணி முதல் கீழ் கடுகண்ணாவ பிரதேசத்துடன் மூடப்பட்டுள்ள, கொழும்பு – கண்டி பிரதான வீதியை மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். 

இதன்காரணமாக கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணிக்கும் பேருந்து உள்ளிட்ட  அனைத்து வாகனங்களும், அம்பேபுஸ்ஸ சந்தியில் திரும்பி, குருணாகல் - மாவத்தகம கலகெதர, கட்டுகஸ்தோட்டை வழியாக கண்டிக்கு பயணிக்க முடியும் என காவல்துறை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மேற்படி வீதியை பயன்படுத்த முடியும். 

இதேவேளை, அம்பேபுஸ்ஸ -  கீழ் கடுகண்ணாவவுக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் வசிப்பவர்கள், மாவனெல்ல எஸ்.ஓ.எஸ் சந்தியில் திரும்பி, ஹெம்மாத்தகம வீதியில், ஹெம்மாத்தகம, அம்புலுவாவ, கம்பளை, பேராதனை வழியாக கண்டி நோக்கி பயணிக்க முடியும். 

அவ்வாறே, கம்பளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிப்பவர்கள் மேற்படி வீதியூடாக மாவனெல்ல நகரை அடைந்து கொழும்பு வீதியை அண்மிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, சீரற்ற காலநிலை குறைவடையும் வரையில் அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு காவல்துறையினர் பொதுமக்களை கோரியுள்ளனர்.

No comments

Powered by Blogger.