November 14, 2021

முஸ்லிம் சமூக இயங்கியலை முன்னெடுத்த, அறப்போராளியொருவரை சமூகம் இழந்துவிட்டது - ஹக்கீம் அனுதாபம்


முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலின் அவசியம் குறித்துச் சிந்தித்துச் செயலாற்றியவர்களில் மறைந்த  எம்.ஐ.எம்.முஹைதீனும் முக்கியமான ஒருவர் என     அவரது மறைவையிட்டு வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான  ரவூப் ஹக்கீம்   குறிப்பிட்டுள்ளார். 

அந்த அனுதாபச் செய்தியில் மு.கா தலைவர் ஹக்கீம்  மேலும்  தெரிவித்துள்ளதாவது,

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி யின் ஸ்தாபகரும்,அதன் செயலாளர் நாயகமாக இருந்தவருமான எம்.ஐ.எம். முஹைதீன்  காலமான செய்தி எனக்கு  மனவேதனையையும்  கவலையையும் ஏற்படுத்தியது.

 சேர்வேயர்  (நில அளவையாளர்) முஹைதீன் என  அறியப்பட்டிருந்த அவர், தனது துறையில் மட்டுமல்லாது கட்டிடக்கலையிலும் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். அவ்வாறிருக்க, , முஸ்லிம்களின் சமூக, பொருளாதார, அரசியல், வரலாறு என்பன தொடர்பில் 148 ஆக்கங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் அவர் எழுதியுள்ளார். கணிதத்துறை மாணவராக இருந்தபோதிலும் கூட முஸ்லிம் சமூகம் தொடர்பான சமூகவியல் ஆய்வுக் கட்டுரைகளை அவர் எழுதியுள்ளமை அவரது பல்துறை ஆளுமைக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்

  சர்வதேச  அங்கீகாரம் பெற்ற ஆய்விதழ்களில் அவரது பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. குறிப்பாக நமது  துறைசார் அறிஞர்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இருப்பு தொடர்பான பிரச்சினைகளை சர்வதேசத் தரநிர்ணயம் வாய்ந்த சஞ்சிகைகளில் அரிதாகவே எழுதி வெளியிட்டுள்ளனர். அதிலும் எமது இனப்பிரச்சினை கூர்மையடைந்து, சர்வதேச அரங்குகளில் பேசப்பட்டபோது இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளை 1980 களில் சர்வதேச ஆய்வேடுகளில் நண்பர்  முஹைதீன்  எழுதியுள்ளார். இந்த ஆய்வுகளை உரிய முறையில் இலத்திரனியல் பதிவுகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகம் ஆவணப்படுத்திவைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக, வடக்கிலிருந்து 1990களில் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பிலான ஆய்வுபூர்மான ஆவணம் ஒன்றைத் தயாரித்து வரலாற்றைப் பதிவு செய்த அவரின் சமூக உணர்வு சாமானியமானதன்று. அந்த ஆவணம் சர்வதேச அரங்கில் ஒரு முன்னணி ஆவணமாகவும், அது தொடர்பான மேலதிகமான ஆய்வுகளுக்கான முதலாம்தர நிலைச் சான்றாதாரமாகவும் காணப்படுகிறது. 

இன்று அத்தகைய ஆய்வுகள்  சிறந்த பொருளாதார வருவாய் தரும் தேடல் முயற்சியாக உள்ளன.அதற்கான பொருளாதார அனுசரணையை வழங்க உலகெங்கனும் நூற்றுக்கணக்கான அனுசரணையாளர்கள் உள்ளனர். ஆனால், மர்ஹூம் எம்.ஐ.எம்.முஹைதீன்  அத்தகைய சிரமமான ஆய்வை தனது செலவிலேயே மேற்கொண்டிருந்தார்.

1980களில் முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியல் அமைப்பின் அவசியம் பற்றி சிந்தித்த  அறிஞர்களுள் முஹைதீனும்  முன்னணியில் இருந்தார்.

  முஸ்லிம்களுக்காக தனியான அரசியல் கட்சியாகத் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  நாட்டில்  பற்றி எரிந்துகொண்டிருந்த ஊழித்தீ க்கு தாக்குப் பிடிக்குமா? என்று சந்தேகப்பட்டவராகவே ஆரம்பத்தில் முஹைதீன் காணப்பட்டார். எனவே, முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற மாற்றரசியல் கருதுகோளுடனான ஓர் அமைப்பை அவர் நிறுவிச் செயற்பட்டுவந்தார். அதுமட்டுமன்றி, பிராந்திய அரசியலின் நெளிவு சுழிவுகளை உற்றுணர்ந்து இந்தியாவுக்குச்சென்று, அங்கு கிட்டு முதலானவர்களைச்  சந்தித்து ,முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் பற்றிய அழுத்தமான பதிவுகளை ஏற்படுத்தினார். 1983 ஜூலை கலவரத்தின் பின்னர் தமிழ்ஈழம் என்ற தனிநாட்டுக்கான முன்னெடுப்பு வெகுஜனப் போராட்டமாகவும் அதேவேளை, சர்வதேச இராஜதந்திர மட்டத்திலான காய்நகர்த்தலாகவும் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது அதன் இறுதிக்கட்டம் வடக்குக் கிழக்கு இணைப்பாக வரலாம்  என்பதை முன்கூட்டியே கணித்தவர்களுள் முஹைதீன் முக்கியமானவர்.

 எமது மறைந்த தலைவர் அஷ்ரப் நிபந்தனையுடன் கூடிய வடக்குக் கிழக்கு இணைப்புக்கான முஸ்லிம்களின் ஆதரவு என்ற எண்ணக்கருவை முன்வைத்து அதற்கான தீர்வாக நிலத்தொடர்பற்ற முஸ்லிம் மாகாணம் என்ற கோரிக்கையை முன்னெடுத்தார். அக்கோரிக்கையின் அரசியல் உருவத்தை வரைந்தவர் பெருந் தலைவர் அஷ்ரப் என்றால் அதற்கான புவியியல் வரைபைத் தந்தவர் நண்பர் முஹைதீன் ஆவார். முசலி முதல் பொத்துவில் வரையிலான முஸ்லிம்களின் நிலத்தொடர்பற்ற மாகாணம் என்பதற்கான வரைபடத்தை அவர் தயாரித்தளித்தார். 

எனினும், 1994இல் தலைவர் அஷ்ரபின் ஆளுமையை சரிகண்டவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் அவர் இணைந்துகொண்டார். அதனால் கட்சியின்  ஒருங்கிணைப்பாளர் பதவி அன்னாருக்கு வழங்கப்பட்டது.

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மாணவர்கள் பிரச்சினை 1994இல் பூதாகாரமாக உருவெடுத்தபோது, அதற்கான உகந்த தீர்வாக தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கல்லூரி உருவாகியது. ஆனால், பல்கலைக்கழகத்துக்கான அமைப்பு வேலைகளைத் துரித கதியில் நிறைவேற்ற விஷேச செயலணி ஒன்றை தலைவர் அஷ்ரப் உருவாக்கி அதற்கான நிலத்தைப் பெற்றுக்கொண்டு, அதன் உள்ளக கட்டமைப்பை வரைந்தளிக்கும் பாரிய பொறுப்பை எம்.ஐ.எம். முஹைதீனிடம் ஒப்படைத்தார். அதற்காக ஒலுவில் கிராமத்தின் அரச காணிகளையும் தனியார் வளவுகளையும் பல்கலைக்கழகத்தின் சொத்தாக்குவதில் பாரிய நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் தாங்கி அதை திறம்பட ஒரு செயற்திட்டமாக முஹைதீன்  வடிவமைத்துக்கொடுத்தார். காணிகளுக்கான உரித்தாவணங்களையும் உத்தரவாதங்களையும்  பெற்றுக்கொள்வதில் அன்னாரின்  பங்களிப்பு அளப்பரியதாகும்.

தேர்தல் எல்லை நிர்ணயங்கள் தொடர்பில் நாட்டின் பல்வேறு கிராமங்கள் தோறும் சென்று அவற்றின் வரையறைகளை யும்,உரிய கணிப்புகளை யும் அவர் மிகச் சிறப்பாக மேற்கொண்டிருந்தார்.தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பிலும் சில காத்திரமான கருத்துக்களை அவர்  முன்வைத்திருந்தார்.

இவ்வாறாக அறிவியல் ரீதியாகவும், செயற்பாட்டு ரீதியாகவும் முஸ்லிம் சமூகத்துக்கான இயங்கியலை முன்னெடுத்துச்சென்ற  அறப்போராளியொருவரை இந்த சமூகம் இப்பொழுது  இழந்து  விட்டது. அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு மறுமையில் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவன வாழ்வை வழங்குவானாக.

1 கருத்துரைகள்:

முஸ்லிகளின் ஒப்பாரும் மிகாருமில்லாத மாபெரும் ஆய்வறிஞர் எம்.ஐ.எம். முஹைதீன் அவர்கள் இலங்கை தமிழ்பேசும் மக்கள் மனசில் என்றும் வாழ்வார்.தோழர் ரவூப் ஹக்கீம் அவர்களோடு சேர்ந்து எங்கள் முன்னோடி அறிஞரின் நினைவை அஞ்சலிக்கிறேன். நாம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருக்கவில்லை. எனினும் 1980பதுகளில் எனது ”தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்” நூல்மூலம் அறிஞர் எனக்கு அறிமுகமானார்.என் நூல்மூலம் தோழர்கள் அஸ்ரப் மற்றும் தோழர் முகைதீன் எனும் இரண்டு மாமனிதர்களின் நட்பும் பாராட்டுகளும் க்கிடைத்தது என் பாக்கியம்.அம்பாறை மாவட்டம் பற்றிய தோழர் முகைதீனின் ஆய்வுநூல் முஸ்லிம் அறிவியல் வரலாற்றின் முதன்மை நூலாகும். கொண்டாடப்படவேண்டிய ஒரு அறிஞரை முஸ்லிம் மக்கள் இனியாவது கண்டுகொள்ளவேண்டும்.- வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

Post a Comment