Header Ads



3 சிறுமிகள் வழங்கியுள்ள வாக்குமூலம், பொலிஸ் ஊடக பேச்சாளர் தகவல் - சஜித் பிரேமதாசவிடமும் உதவிபெறச் சென்றனர்


கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் காணாமல் போன சம்பவத்தில் சிறுமிகள் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான தகவலை பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்த்துவ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் Tamilwin செய்தி சேவைக்கு பிரத்தியேகமாக அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 8ஆம் திகதி 15, 13 வயதிற்குட்பட்ட 3 சிறுமிகளை காணவில்லையென வாழைத்தோட்டம் பொலிஸாருக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்க பெற்றுள்ளது. அவர்களுடைய பெற்றோர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த நிலையில் நேற்று இரவு குறித்த 3 சிறுமியர்களும் வீடு திரும்பினர்.

தொடர்ந்து அந்த சிறுமிகளை மேலதிக விசாரணை செய்யும் போது, குறித்த மூன்று சிறுமிகளும் அவர்களுடைய தாயின் தொலைபேசியை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து அதிகாலையில் வெளியேறியதாகவும், அவர்களிடம் பணம் இல்லாத காரணத்தினால் அவர்கள் கையில் இருந்த 2 மோதிரங்களை விற்று பணம் பெற்று பின்னர் அவர்கள் கொழும்பில் பிரபல ஆடை விற்பனை நிலையத்திற்குச் சென்று நவீன ஆடை மற்றும் பிற சாதாரண உடைகள் போன்ற ஆடைகளை வாங்கியுள்ளனர்.

ஏனென்றால், அவர்கள் அணிந்திருந்த உடையை அணிந்துகொண்டு நடனக் குழுவில் அல்லது வகுப்பில் சேர வாய்ப்பில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். குறித்த சிறுமிகள் அவர்களுடைய உடைகளை மாற்றி கொண்டு அனுராதபுரம் நோக்கி செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர்.

அந்த பேருந்து நடத்துனர் குறித்த சிறுமிகளையும் கொழும்பு நோக்கி வரும் பேருந்தில் ஏற்றியுள்ளார். பின்னர் 3 சிறுமிகளும் கொழும்பிற்கு வந்துள்ளனர். குறித்த 3 சிறுமிகளும் நடனம் மற்றும் இசைக்கு விருப்பமுள்ளவர்கள்.

அதேபோல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடன, இசை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் விருப்பத்துடன் பார்த்துள்ளார்கள். அவர்களுக்கும் அவ்வாறு நடனம் ஆட வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்குள் உருவாகியுள்ளது.

இருப்பினும் அவர்களுடைய வீட்டில் அவற்றுக்கு அனுமதி இல்லாத காரணத்தினால் இணையத்தினூடாக இவர்கள் இங்குள்ள நடன வகுப்புக்களை தேடி பார்த்துள்ளார்கள்.

நடன வகுப்புக்களுக்கு சென்று தாங்களும் நடனம் பயில வேண்டும் என்ற கனவுகள் மற்றும் இலட்சியத்தின் அடிப்படையில் தான் இவ்வாறு அவர்கள் வீட்டிலிருந்து சென்றுள்ளார்கள். இருப்பினும் அவர்கள் நினைத்ததை போல் அவர்களுக்கு முதல் நாளில் செய்யமுடியாமல் போயுள்ளது.

அவர்கள் ஆடைகளை மாற்றியவுடன், வத்தளையில் உள்ள நடனக் குழுவில் சேர முயற்சித்துள்ளார்கள். அந்த முயற்சி தோல்வியடைந்ததால், 3 சிறுமிகளும் அனுராதபுரம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளனர். பின்னர் கொழும்பிற்கு வந்த சிறுமிகள் மீண்டும் கண்டி நோக்கி சென்றுள்ளனர்.

அங்கு காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மீண்டும் கொழும்பு நோக்கி வந்துள்ளனர். இந்தநிலையில், நடனக் குழுவில் இணைவதற்காக, சிறுமிகள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் உதவி பெறுவதற்காக அவருடைய காரியாலயத்திற்கு சென்றுள்ளனர்.

இருப்பினும் அந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அங்கு யாரும் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு அதிகாரிகளால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தினூடாக ஒரு விடயத்தை நாம் கருத்தில் கொள்ள வேண்டும், இப்படியான இளம் வயதினர் நடனம், இசை, நாகரிக உடைகளுக்கு ஆசைப்படுகிறார்கள்.

ஆனாலும் வீடுகளில் அவற்றுக்கு அனுமதிகள் இல்லாத காரணத்தினால் தான் இந்த சிறுமிகளும் வீட்டை விட்டு சென்றுள்ளார்கள் என்பது அவர்களுடைய வாக்குமூலங்களில் தெரியவருகின்றது என சுட்டிக்காட்டியுள்ளார். 

1 comment:

Powered by Blogger.