Header Ads



இன, மத கட்சிகளை இடைநிறுத்துக, மாகாணத் தேர்தலை இரத்துச் செய் - விமல் அணி வலியுறுத்து


ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் முறையே 70 சதவீதம் மற்றும் 30 சதவீதம் என்றடிப்படையில் பகிரப்படும் முறையை பின்பற்றுவது பொருத்தமானது என பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

பிரதேசசபை மட்டத்தில் முடிந்தளவு நிறைவேற்று அதிகாரத்தை பரவலாக்கல் மற்றும் தொகுதி மட்டத்தில் மக்கள் சபைகளை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் அண்மையில் கூடியபோதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார். புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சிமன்ற தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் உள்ளூராட்சிமன்ற பிரதானிகளின் மாகாண சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்ற வேண்டும். அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்புடைய அதிகாரங்களை மாத்திரம் வழங்குவது பொருத்தமானது எனவும், அதன் மூலம் மாகாண சபை தேர்தலை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியது.

இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை இரண்டு வாக்குச்சீட்டுக்கள் மூலம் ஒரே சந்தர்ப்பத்தில் நடத்துதல் மற்றும் அந்த தேர்தல்களை காபந்து அரசின் கீழ் நடத்துதல், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அனைத்து தேர்தல்களுக்கும் தேர்தல் நடத்தும்

காலப்பகுதியை சட்டத்தின் மூலம் குறிப்பிடுதல் மற்றும் அரசியல் தீர்மானங்கள் மூலம் அவற்றை மாற்றுவதற்கு இடமளிக்காமை போன்ற பிரேரணைகள் தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சமர்ப்பித்த பிரேரணைகளில் உள்ளடங்குகின்றன.

No comments

Powered by Blogger.