Header Ads



இந்தியா - திரிபுராவில் பள்ளிவாசல்கள் மீதும் முஸ்லிம்களின் சொத்துகளைக் குறிவைத்தும் தாக்குதல்


திரிபுராவில் முஸ்லிம்களின் சொத்துகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான மசூதிகள் மற்றும் சொத்துக்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்துக் குழுக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து வன்முறை ஏற்பட்டது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்கள்களைக் கண்டித்து பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து இந்த குழுக்கள் போராட்டம் நடத்தின.

இம்மாத தொடக்கத்தில் வங்கதேசத்தில் ஆண்டுதோறும் நடக்கும் துர்கா பூஜைக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பந்தலில் குரான் அவமதிக்கப்பட்டதாக வதந்தி பரவியதை அடுத்து குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன, நூற்றுக்கணக்கான இந்துக்களின் வீடுகள் மற்றும் கடைகள் தீக்கிரையாக்கப்பட்டன.

திரிபுரா மூன்று பக்கங்களிலும் வங்கதேசத்தால் சூழப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான அஸ்ஸாமுடன் ஒரு குறுகிய சாலையால் இணைக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட் ஆட்சிக்குப் பிறகு 2018 முதல் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி திரிபுராவில் நடைபெற்று வருகிறது.

வடக்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களில் 10க்கும் மேற்பட்ட மத அடிப்படையிலான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

எல்லையோர நகரமான பனிசாகரில் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த வன்முறையில் ஒரு மசூதியும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கடைகளும் சேதப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் பெரிய கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்தனர்.

வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறையைத் தொடர்ந்து திரிபுராவில் இந்து அமைப்புகள் பேரணி நடத்தின

பாஜகவின் நெருங்கிய கூட்டாளியும் கடும்போக்கு இந்து அமைப்புமான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) நடத்திய பேரணியைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் நடந்தன.

இந்த பேரணியில் சுமார் 3,500 பேர் பங்கேற்றதாக பனிசாகரில் உள்ள மூத்த காவல் அதிகாரி சௌபிக் டே தெரிவித்தார்.

"பேரணியில் பங்கேற்றவர்கள் சாம்தில்லா பகுதியில் உள்ள ஒரு மசூதியை அடித்து நொறுக்கினர். பின்னர், மூன்று வீடுகள் மற்றும் மூன்று கடைகள் சூறையாடப்பட்டன. அங்கிருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள ரோவா பஜார் பகுதியில் இரண்டு கடைகள் தீவைக்கப்பட்டன" என்று சௌபிக் டே கூறினார். .

சூறையாடப்பட்ட கடைகள் மற்றும் வீடுகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானவை என்றும் அவர்களில் ஒருவரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மற்றொரு கடும்போக்கு இந்து அமைப்பான பஜ்ரங் தளத்தின் உள்ளூர் தலைவரான நாராயண் தாஸ், மசூதியின் முன் சில இளைஞர்கள் தங்களைத் தூற்றியதாகவும் வாள்களைக் காட்டி மிரட்டியதாகவும் சுயாதீனமாக சரிபார்க்க முடியாத குற்றச்சாட்டைக் கூறியிருக்கிறார்.

"சிலர் வதந்திகளைப் பரப்புகிறார்கள். சமூக ஊடகங்களில் கோபமூட்டும் செய்திகளைப் பரப்புகிறார்கள்" என்று ட்வீட் செய்திருக்கும் திரிபுரா காவல்துறை அமைதியைக் காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த வாரம் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் கும்பல்கள் தாக்குதல் நடத்தியதாக, ஜமியத் உலமா-இ-ஹிந்த் என்ற முஸ்லிம் அமைப்பின் மாநில பிரிவு குற்றம் சாட்டியது. திரிபுரா மாநிலத்தில் உள்ள 150க்கும் மேற்பட்ட மசூதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வருவதாக திரிபுரா காவல்துறையினர் கூறுகின்றனர்.

"திரிபுராவின் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய வங்கதேசத்தில் இருந்து வந்த இந்து அகதிகள் என்றாலும், இதற்கு முன் வங்கதேசத்தில் மத வன்முறைகள் நடந்தபோது இங்கு எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை" என்று திரிபுராவைச் சேர்ந்த எழுத்தாளர் பிகாச் சவுத்ரி கூறினார்.

பெரும்பாலும் வங்கதேசத்தை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் வன்முறை நடந்திருக்கிறது

முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு பா.ஜ.க.வுக்கு நெருக்கமான "அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்கள்" காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

திரிபுராவில் வரும் நவம்பரில் நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களைத் தூண்டுவதற்காக சமீபத்திய வன்முறையை பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்த முயற்சிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுஷ்மிதா தேவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

திரிபுராவின் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ரத்தன்லால் நாத் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்கவில்லை.

இருப்பினும் ஆனால், ஊடகங்களுக்குப் பேச அதிகாரம் இல்லாததால், பெயர் வெளியிட விரும்பாத பாஜக தலைவர் ஒருவர் பிபிசியிடம் பேசினார்.

"வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிர்வினையாக, சில ஆங்காங்கே நடக்கும் சம்பவங்களில் இருந்து அரசியல் ஆதாயத்தைப் பெற எதிர்க்கட்சிகள் முயற்சிக்கக் கூடாது." என்று அவர் கூறினார்.

நிலைமையைக் கட்டுப்படுத்தத் தேவையானதை மாநில அரசு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். BBC

No comments

Powered by Blogger.