Header Ads



தொழிற்சங்கங்கள் முன் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை, வென்றெடுப்பதற்கு ஒத்துழைப்பதாக ஹக்கீம் அறிவிப்பு


ஒன்றிணைந்த தொழிற் சங்கங்கள் முன் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு கட்சி மட்டத்தில் கலந்துரையாடி பாராளுமன்றத்தில் குரல் கொடுப்பதாகவும், அவற்றிற்கு ஒத்துழைப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்த ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.

துறைமுக,மின்சக்தி,பெற்றோலிய ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் முக்கிய பிரதிநிதிகள் , முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் "தாருஸ்ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்து தங்களது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினர்.அதன்போது கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் தொழிற்சங்க இணைப்பாளர் மஹிலால்  த சில்வா ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

 முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம்,ஒன்றிணைந்த பிரஸ்தாப தொழிற்சங்க முக்கியஸ்தர்களிடம் அவர்களின் கோரிக்கைகளையும், அவற்றிற்கான விளக்கங்களையும் கேட்டறிந்த பின்னர் அங்கு வந்திருந்த ஊடகங்களுக்கு   தெரிவித்ததாவது,

 மின் சக்தி, துறைமுகம், பெற்றோலியம் போன்ற பொருளாதார ரீதியான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அரச நிறுவனங்களின் கூட்டு தொழிற் சங்க பிரதிநிதிகள் எங்களை வந்து சந்தித்து அண்மைக் காலமாக இந்த நிறுவனங்களின் சொத்துக்களை பாராதீனப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்து வருகின்ற முயற்சிகள் சம்பந்தமாக தங்களுடைய பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். அவர்கள் கூட்டு தொழிற் சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத்  தயாராகி வருவதாகவும் கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பில்  உரிய விளக்கங்களைத்  தருவதற்காவே அவர்கள் எங்களை வந்து சந்தித்தனர்.

அவர்கள் எங்களிடம் கூறியதிலிருந்து , இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம் தேர்தல் காலங்களில்   மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அப்பட்டமாக மீறி இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இது குறித்து பல விதமான காரணங்களைச் சொல்லி, தனியார் மயப்படுத்தல் ஊடாக பாவனையாளர்களுடைய செலவினங்களை பொருத்தமான முறையில் கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு விசித்திரமான சித்தாந்தத்தையும் அவர்கள் முன்வைக்கின்றனர்.


 அதேவேளை, உபாய ரீதியாக நாட்டில் சர்வதேச சக்திகளுக்கு இடையில் இருக்கின்ற முரண்பாடுகளுக்கு நடுநிலையான அடிப்படையில் நாங்கள் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற புரிதலையும் நாம் உள்வாங்க வேண்டும்

 உலக வல்லரசுகளுக்கு மத்தியில் நடக்கின்ற போட்டா போட்டியில் நாங்கள் ஒரு சமநிலையில் இருந்து, எங்களுடைய பொருளாதாரத்தை வழிநடத்த வேண்டும். தனியார் மயப்படுத்தளுக்கான முயற்சிகளில் ஈடுபடும் போது குறைந்தபட்சம் வெளிப்படைத் தன்மை சரிவரப் பேணப்பட வேண்டும்.  

அவ்வாறன்றி, உரிய கேள்விப் பத்திரங்கள் கோரப்படாமல்  மூடு மந்திரமாக வைக்கப்படிருந்து செய்யப்படும் விவகாரத்தினால் தான் இன்று தொழிற் சங்கங்தினர் வன்மையான எதிர்ப்புக்களைத் தெரிவித்து வருகிறார்கள். பொருளாதார ரீதியாக நாட்டுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த சேவைகள் என்ற காரணத்தினால் இவற்றை இவ்வாறு பாராதீனப்படுத்துவதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் வரும்.அத்துடன் பாவனையாளர்களுக்கும் தேவையற்ற சிக்கல்கள்களை உருவாக்கலாம். 

எதிர் காலத்தில் வெளிநாட்டவர்கள்,  ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு  இவ்வாறான விடயங்களை தங்களுடைய கையில் எடுத்து சில விடயங்களை சாதித்து விடலாம் என்ற அபாயம் இருக்கின்றது என்றெல்லாம் பல காரணங்களை  தொழிற்சங்கப் பிரமுகர்கள் முன் வைத்தனர். 

இந்த விவகாரமாக இதே அரசாங்கம் எதிர் கட்சியில் இருந்த போது இல்லாத பொல்லாத விஷயங்களை சொல்லி இவற்றை எல்லாம் நாங்கள் செய்யவோ செய்ய விடவோ மாட்டோம். மிக வெளிப்படைத் தன்மையோடு நடந்துகொள்ளுவோம் என்று சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் இப்போது காற்றில் பறந்து போய் விட்டன. எனவே இந்த நிலையில் பல தொழிற் சங்கங்கத்தினர் என்ன காரணத்திற்காக இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு தங்களுடைய ஆதரவை வழங்கினர்களோ அவையெல்லாம் இப்பொழுது தலை கீழாக மாறி சர்வாதிகாரப் போக்கோடு இந்த அரசாங்கம் நடந்து கொள்கிறது என்று குற்றம் சுமத்தினர். அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பது எங்களுக்குத் தெளிவாக விளங்குகிறது.

 இவ்விடயம் சம்பந்தமான தங்களுடைய போராட்டங்களுக்கு நாங்கள் எவ்வாறான ஆதரவை வழங்கலாம் என்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் ஆராய்ந்து அதனை முடிவெடுப்போம். இது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் விவாதங்கள் வருகின்ற போது எங்களுடைய நிலைப்பாடுகளை மிகவும் காத்திரமாகவும்,தெளிவாகவும் முன்வைப்போம்.

 பால் மா விடயத்தில் அடிக்கடி வர்த்தமானி அறிவித்தல்களை அர்த்தமற்ற முறையில் வெளியிட்டு கட்டுப்பாடுகளை விதித்தாலும் ஒன்றுமே சாத்தியமாக வில்லை. இப்பொழுது முழுமையாக தனியார் கம்பனிகளிடமும்,தனியார் ஆலை சொந்தக்காரர்களிடமும் பாவனையாளர்களுக்கான விலையை கட்டுப்படுத்துகின்ற அதிகாரத்தை அரசாங்கம் கொடுத்து விட்டு மக்களை நடுத்தெருவில் விட்டிருக்கிறது. இதன் மூலம் இன்னுமொரு முறை அரசாங்கம் முழுமையாக தவறிழைத்து விட்டது என்றார்.

1 comment:

  1. After long sleep just he wakes up to cheat people in the name of Allah.

    ReplyDelete

Powered by Blogger.