Header Ads



ஞானசாரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி, ஏன் அமைக்கப்பட வேண்டும்..? நளின் பண்டார Mp


இனவாதம் மற்றும் மதவாதத்தைக் கக்கி, மக்களைப் பிளவுபடுத்தி ஆட்சியைப் பிடித்த இந்த அரசு, தற்போது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், அதே பாணியைக் கையாள்கின்றது. இதற்காகவே ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி செயலணி அமைக்கப்பட்டுள்ளது."

- இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

"இனவாதம் பேசி, மதவாதத்தைக் கையில் எடுத்து, மக்களைப் பிளவுபடுத்தி, மோதல்களை ஏற்படுத்தியே இந்த அரசு ஆட்சிக்கு வந்தது. தற்போது எல்லா வழிகளிலும் தோல்வி கண்டுள்ளது. எனவே, ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக அன்று கையாண்ட யுக்திகளை கையாள முயற்சிக்கின்றார்.

ஞானசார தேரர் உள்ளிட்டவர்கள் இந்த அரசைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்தனர். ஞானசார தேரர் யார் என்பது அனைவருக்கும் தெரியும். ஊடகவியலாளர் என்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்தினார். நீதிமன்றத்தை அவமதித்தார். இனங்களை இலக்கு வைத்து பிரசாரம் முன்னெடுத்தார். இப்படியான ஒருவர் தலைமையில் ஒரே நாடு, ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணி ஏன் அமைக்கப்பட வேண்டும்? இதன் நோக்கம் தெளிவாகின்றது.

இனவாதம், மதவாதம் உள்ளிட்ட விடயங்களைக் கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துக்கு நீதி கோரிய அருட்தந்தையர்கள் தற்போது சி.ஐ.டிக்கு அழைக்கப்படுகின்றனர். இது நிறுத்தப்பட வேண்டும்" - என்றார்.

No comments

Powered by Blogger.