Header Ads



சாணக்கியன் தொடர்பில் விசாரணை - பாரளுமன்றத்தில் உரையாற்ற அச்சப்படும் நிலை என்கிறார்

நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்படும் உரை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுக்கும் நிலையுள்ளதனால் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்திலும் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையேற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்
 (Shanakiya Rasamanickam) தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

களுவாஞ்சிகுடியில் உள்ள எனது அலுவலகத்தில் திருகோணமலையிலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் விசாரணைக்காக வருகை தந்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மண் அகழ்வு விடயமாகக் கேட்கவிரும்புவதாகக் கேட்டிருந்தார்.

அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருந்தேன். சரியான விடயத்தினை செய்யப் போகின்றார்கள் என்று நம்பியிருந்தேன். ஆனால் 10-09-2021 சிங்கள பத்திரிகையொன்றில் கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்த செய்தியொன்று வெளிவந்திருந்தது.

அதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்திலே நான் தெரிவித்த கருத்தினை வைத்து ஆளுநரினால் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரிடம் 09ம் திகதி ஒரு முறைப்பாட்டினை செய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரை என்ன என்பது கூட தெரியாமல் கிழக்கு மாகாண ஆளுநர் இவ்வாறாக நடந்துகொள்வது மிகவும் கவலையான விடயம். கிழக்கு மாகாண ஆளுநரைப் பொறுத்தவரையில் அவர் கிழக்கு மாகாணத்தில் முற்று முழுதாக தமிழ் பேசும் மக்களுடைய விடயங்களைச் சரியான வகையில் கையாலாதவராகவே இருந்துவருகின்றார்.

கடந்த காலத்தில் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை காணி விடயம் தொடர்பில் அவரின் செயற்பாடுகள், மண்மாபியாக்களை கட்டுப்படுத்துவதிலான அணுகுமுறைகள், மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் நடந்துகொள்ளும் விதங்களைப் பார்க்கும்போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காகக் கொண்டு செயற்படுகின்றார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் செயற்பாடுகள் பொலிஸாரையும் நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாகவேயுள்ளது. நாடாளுமன்றத்தில் நான் பேசிய ஒரு விடயத்தினை இவ்வாறு விசாரணை செய்யுமாறு கூறினால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையே ஏற்படும்.

கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத அரசியலைச் செய்கின்றது என்று அவர் ஊடகங்களுக்கு எனது பெயரைக் கூறி தெரிவித்தது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் என முறையிட்டபோதிலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.