Header Ads



ராஜாங்க அமைச்சருக்கு எதிராக, திருமணத் தரகரின் விசித்திரமான முறைப்பாடு


கம்பஹா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜாங்க அமைச்சர் ஒருவரின் மகளுக்கு மணமகனை தேடிக்கொடுத்தமைக்கான கட்டணத்தை வழங்கவில்லை எனக் கூறி ஹங்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பியகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மகளுக்கு மணமகன் ஒருவரை தேடித்தருமாறு ராஜாங்க அமைச்சரின் மாமனார், தரகர் ஒருவரிடம் கேட்டுள்ளார்.

இந்த தரகர் கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் தொழிற்சாலை ஒன்றில் பதவி ஒன்றை வகித்து வருவதுடன் தரகரை அந்த தொழிற்சாலைக்கு அழைத்து இது சம்பந்தமாக பேசியுள்ளார்.

பொருத்தமான மணமகனை தேடித் தந்தால் தனக்கு வீடொன்றை வழங்குமாறு தரகர், கேட்டுள்ளதுடன் அதற்கு அமைச்சரின் மாமனார் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், தரகர் மிகவும் கஷ்டப்பட்டு மணமகன் ஒருவரை தேடிக்கொடுத்துள்ளதுடன் மணமகனுக்கு, மணமகளுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்துள்ளது.

கொழும்பில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற திருமண வைபவத்தில் ஜனாதிபதி மாத்திரமல்லாது, பிரதமரும் கலந்துக்கொண்டுள்ளார்.

இந்த திருமண வைபவத்திற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தரகர் கூறியுள்ளார்.

திருமணம் நடந்து சில மாதங்கள் கடந்த நிலையிலும் ராஜாங்க அமைச்சரின் மாமனார் வழங்கிய உறுதிமொழிக்கு அமைய கட்டணம் கிடைக்கவில்லை எனவும் அது குறித்து விசாரிக்கும் போது, அவ்வப்போது 5 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 30 ஆயிரம் ரூபாய் தனது கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாகவும் தரகர் குறிப்பிட்டுள்ளார்.

மகளுக்கு மணமகனை தேடிக்கொடுத்தது தான் என்பதை ராஜாங்க அமைச்சர் அறியாது இருக்கலாம் எனவும் அவரது மாமனார் வழங்கிய உறுதிமொழி நிறைவேற்றப்படாததால், தாம் தொடர்ந்தும் வாடகை வீட்டில் வசிக்க நேரிட்டுள்ளதாகவும் தரகர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தான் வசிக்கும் இடத்திற்குரிய ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றதாகவும் அவர்கள் வழங்கிய ஆலோசனைக்கு அமைய பியகமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தரகர் தெரிவித்துள்ளார். CIB 2/229/51 என்ற இலக்கத்தின் கீழ் அவர் கடந்த 7 ஆம் திகதி இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். Tamilw

No comments

Powered by Blogger.