Header Ads



ஈஸ்டர் தாக்குதலை 8 பயங்கரவாதிகளால் செய்ய முடியாது, விசாரணைகளை மூடிமறைக்க பாரிய முயற்சி


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள், தற்போதைய ஆட்சியாளர்களால் செயற்படுத்த முடியாதென்பது தெளிவாகி உள்ளதாக பேராயர் ரஞ்சித் மெல்கம் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் 30 மாதங்கள் நிறைவு தினத்தை நினைவுகூர்ந்து கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று (21) விசேட ஆராதனைகள் இடம்பெற்றன.

இந்த விசேட ஆராதனைகளில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் (நேற்று 21ஆம் திகதி) 30 மாதங்கள் கடந்தாலும் இதன் பிரதான சூத்திரதாரியை பகிரங்கப்படுத்த முடியாமல் போயுள்ளது.

இந்த சம்பவம் பாரியளவில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சம்பவம் என்றும் இதனை 7- 8 பயங்கரவாதிகளால் செய்ய முடியாதென்றம் அதனை விட நீண்ட திட்டமே இந்தத் தாக்குதலின் பின்னால் இருப்பதாக இந்த வருடம் மார்ச் 8ஆம் திகதி, தன்னை சந்திப்பதற்காக வருகைத் தந்த சட்டமா அதிபர், தன்னிடம் தெரிவித்ததாக பேராயர் தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை சட்டமா அதிபரிடம் கையளித்து 9 மாதங்கள் ஆகியுள்ளன. அதில் பகிரங்கப்படுத்தப்பட்ட பிரிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளில் மிக குறைந்த பரிந்துரைகளே செயற்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

விசேடமாக பாதுகாப்பு பிரிவுகளின் உயர் அதிகாரிகளின் விசாரணைகளை மூடி மறைக்க பாரிய முயற்சி எடுக்கப்படுவதாக எமக்கு தெரியவந்துள்ளது. ஒரே நாடு ஒரே சட்டம் என வாக்குறுதி வழங்கினாலும் தமக்கு வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு வேறொரு சட்டமும் செயற்படுத்தப்படுகின்றது.

சட்டத்துக்கு பொறுப்பானவர்களே இந்த சதியின் பங்குதாரர்களாக மாறியுள்ளனர் என தெரிவித்த அவர், இந்த நிலைமையில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணை

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு எமக்கு இந்த ஆட்சியின் கீழ் வாய்ப்பு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது என்றார்.

No comments

Powered by Blogger.