Header Ads



கிழக்கில் போலி ஆவணம் தயாரித்து சிங்களவர் குடியேற்றம், ஆளுநரின் 3 சதிகள் - தமிழ் பேசும் அதிகாரிகள் மௌனம்


எமது மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் கிழக்கை மீட்பவர்கள் என்று சொல்லுகின்றார். ஆனால், கிழக்கு பறிபோகின்ற விடயங்கள் இடம்பெறும்போது கிழக்கின் மீட்பர்கள் கொழும்பிலும், இந்தியாவிலும் என்கின்றார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காரமுனை காணிப் பிரச்சனை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட காரமுனை என்கின்ற தமிழ் பேசும் மக்களின் கிராமத்தில் திட்டமிட்ட அடிப்படையில் போலி ஆவணங்களைத் தயாரித்து பெரும்பான்மை இனத்தவர்களைக் குடியேற்றுவதற்காகக் கிழக்கு மாகாண காணி ஆணையாளர் மிகவும் இரகசியமான முறையில் நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றார்.

கிழக்கு மாகாணத்திலே ஏற்கனவே இவ்வாறான முறையில் இனப்பரம்பல் மாற்றப்பட்டு திருகோணமலை, அம்பாறை மாவட்டங்கள் பறிபோயிருக்கின்றன. இருப்பது மட்டக்களப்பு மட்டும் தான்.

இங்கும் பெரும்பான்மை இனத்தவர்களைத் திட்டமிட்டுக் குடியேற்றி இங்கும் எதிர்காலத்தில் நாங்கள் சிறுபான்மை சமூகமாக வாழ்வதை நோக்காகக் கொண்டு நீண்டகால அடிப்படையில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.

எமது அதிகாரிகள் பலர் இது தொடர்பில் எங்களிடம் வேதனைப்படுகின்றார்கள். ஆனால், இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் உயரதிகாரிகள் சிலர் தங்களது பதவிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக இந்த விடயங்களைப் பரமரகசியமாக வைத்துப் பாதுகாக்கின்றார்கள்.

எமது மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுத் தலைவர் எப்போதும் கிழக்கு மீட்பர், கிழக்கைப் பாதுகாப்பவர், கிழக்கின் இரட்சகர் போன்று பேசிக்கொண்டிருக்கின்றார். அதேபோல் எமது இராஜாங்க அமைச்சரும் கிழக்கைப் பாதுகாப்பதென்று சொல்லுகின்றார்.

ஆனால் கிழக்கு பறிபோகின்ற போராட்டங்கள் வருகின்ற போது இவர்கள் கொழும்பிலும், இந்தியாவிலும் தங்கியிருந்து தாங்கள் இங்கில்லை என்று சொல்லுகின்றார்கள். இந்த விடயங்களை நாங்கள் தட்டிக் கேட்காமல் விடுகின்ற போது எமது நிலங்கள் எல்லாம் தட்டிப் பறிக்கப்படுகின்றன.

ஒரு காலத்தில் அம்பாறையில் கல்லோயக் குடியேற்றம், திருகோணமலையில் கந்தளாய் குடியேற்றம் என்பன வந்து அங்கெல்லாம் நாங்கள் அடிபட்டு வந்ததைப் போன்று மட்டக்களப்பிலும் அடிபட வேண்டிய நிலையே ஏற்படும்.

நாங்கள் இனவிரோதிகளும் அல்ல, இனவாதிகளும் அல்ல. ஆனால், எமது மண்ணில் எமது மக்கள் குடியிருப்பதற்கு நீங்கள் வழிவிடுங்கள். அயல் மாவட்ட, மாகாணங்களுக்கு அப்பாற்பட்டு நீங்கள் குடியேறுகின்ற விடயத்தைச் சட்டவிரோதமான செயற்பாடாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

இங்கு இவர்கள் காண்பிக்கின்ற ஆவணங்கள் போலியாகச் செய்யப்பட்டிருக்கின்றன. ஏனெனில் சிங்களத்தில் தட்டச்சு செய்த ஆவணங்கள் எமது மாவட்டத்தில் கொடுக்கப்படவே இல்லை. மின்சாரக் கட்டணங்கள் வழங்கப்பட்டதாகக் கூட போலி ஆவணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர்கள் இல்லை. எனவே இவை திட்டமிட்ட அடிப்படையில் ஆளுநர் செய்கின்ற செயற்பாடுகளாகும். ஆளுநர் ஜகம்பத் பல்லினத்திற்கான ஆளுநராக இல்லாமல் தனிப்பட்ட ஒரு இனத்தின் ஆளுநராகவே செயற்படுகின்றார். அவர் மூன்று விடயங்களையே செய்து கொண்டிருக்கின்றார்.

பெரும்பான்மை மக்களை எமது மக்களின் நிலங்கள், மேய்ச்சற்தரைகள் போன்றனவற்றில் குடியமர்த்தி இனக்கலவரத்தை ஏற்படுத்த முனைகின்றார். இரண்டாவது, தமிழ் பேசும் உயர் அதிகாரிகள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது அந்த உயர் நிர்வாகங்களில் சிங்களவரை நியமிக்கின்றார்.

மூன்றாவது, ஒழுங்கான முறையில் இயங்கிக் கொண்டிருக்கும் உள்ளுராட்சி சபைகளைக் கலைப்பதற்காக தங்கள் அடிவருடிகளை இங்கு அனுப்பி அந்தச் சபைகளைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.

இவற்றையே அவர் செவ்வனே செய்துகொண்டிருக்கிறார். நாங்கள் விழிப்பாக இல்லாது விட்டால் எங்கள் வீட்டுக் கதவுகளும் குடியேறுவதற்குத் தட்டப்படும் நிலையே உருவாகும். வழிப்புடன், அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவதன் மூலம் நாங்கள் எங்கள் உரிமையைப் பாதுகாப்போம்.

நாங்கள் யாருக்கும் எதிரிகள் அல்ல. எமது மண்ணைப் பாதுகாப்பதற்காகவே நாங்கள் கஷ்டப்படுகின்றோம்.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல நாங்கள் எங்களுக்குள் பிளவு பட்டால் கூத்தாடிகள் கூரையைப் பிரித்துக் கொண்டு இங்கு குடியேறுவதற்கு வருவார்கள். எனவே இந்த விடயத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. கிழக்கு ஆளுநராக ஹிஸ்புல்லாஹ் என்கிற முஸ்லிம் மனிதர் நியமிக்கப்பட்டதிற்காக ஹர்த்தால் செய்த இனவாதிகள் இன்று தமிழ் பேசும் மக்களென்று முதலை கண்ணீர் வடிக்கிறார்கள். இலங்கையில் எந்த மாவட்டத்திலும் ஒரு இனத்தின் ஆதிக்கத்தின் கீழ் செயற்படுவது ஆபத்தானது. மட்டக்களப்பு மாவட்டத்தில் குடிசன பரம்பலில் மற்றம் வேண்டும் அப்பொழுது தான் கிழக்கில் மூவினங்களும் அமைதியாக வாழ முடியும்

    ReplyDelete

Powered by Blogger.