Header Ads



வெளிநாட்டுக்கு செல்ல றிசாத்திற்கு தடை, 2 வாரங்களுக்கு ஒருமுறை CID யில் ஆஜராக வேண்டும் - 60 இலட்சம் ரூபா பிணை


பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இன்று -14- பிணை வழங்கப்பட்டுள்ளது.

இருவேறு வழக்குகளில் தனித்தனியாக அவருக்கு இன்று -14- பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பிலான வழக்கில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அவர் ஐந்தாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீன் வௌிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு மேலதிக நீதவான் தடை விதித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பிலான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன மன்றில் இன்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ரிஷாட் பதியுதீனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்று பிரதிவாதி தரப்பினர் முன்வைத்த பிணைக் கோரிக்கைக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் எதிர்ப்பு தெரிவிக்காததால், நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.