Header Ads



தற்பொழுது முஸ்லிம் விரோத கொள்கைகள் வெளிப்படுத்தப்பட்டு, பழைய விளையாட்டு தொடங்கப்பட்டுள்ளது - JVP


அரசாங்கம் மீண்டும் மதவாதத்தைத் தூண்டுகின்றது என ஜே.வி.பி கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற -27- செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

ஈஸ்டர் தாக்குதல் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத அரசாங்கம் மதவாதத்தைத் தூண்டத் தொடங்கியுள்ளது.

அரசாங்கத்திற்கு நெருக்கமான இனவாத அமைப்புக்களைக் கொண்டு, கர்தினால் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் அதிருப்தி அடைந்து வரும் நிலையில், பழைய விளையாட்டை அரசாங்கம் தொடங்கியுள்ளது.

இனவாத கருத்துக்களை வெளியிட்டு அதன் ஊடாக மக்களைத் திசை திருப்ப அரசாங்கம் முயற்சிக்கின்றது. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவும், 20ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு பெற்றுக் கொள்ளவும் முஸ்லிம்களின் உதவியை அரசாங்கம் பெற்றுக்கொண்டது.

எனினும் தற்பொழுது முஸ்லிம் விரோத கொள்கைகள் வெளிப்படுத்தப்படுகின்றது. அதிகாரத்திற்காகத் தமிழ் இனவாதம் தூண்டப்பட்டது, முஸ்லிம் இனவாதம் தூண்டப்பட்டது. இந்த இரண்டு சமூகங்களுடனும் விரோதம் பாராட்டப்பட்டுள்ளது.

தற்பொழுது கத்தோலிக்க சமூகத்துடனும் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயற்சிகின்றது.

மக்களுக்குச் சௌபாக்கியத்தைத் தருவதாகக் கூறிக் கொண்டு ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் இன்று மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வைக் கட்டுப்படுத்த முடியாது திண்டாடுகின்றது என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.  

No comments

Powered by Blogger.