Header Ads



மிக அநாகரிகமாக செயற்பட்ட ரணில், எனது சிறப்புரிமையை புரிந்து கொள்ளாத பைத்தியக்காரன் - வடிவேல் சுரேஷ்


மலையக மக்களின் சொத்தாகிய இராஜகிரியவில் உள்ள இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க தலைமையகத்தை ஸ்ரீகொத்தவுக்கோ அல்லது ரணில் விக்கிரமசிங்கவுக்கோ தாரை வார்க்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அந்த சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

வஞ்சகமாக அதனை அபகரிக்க முற்பட்டால் அதற்கு எதிராக முழு மலையகத்தையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

யாப்புக்கு இணங்க நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது மேற்படி தலைமையகம் மலையக மக்களுக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

அதனை மக்களிடமிருந்து பலாத்காரமாக அபகரிக்க முற்பட்டால் மலையகத்தை ஒன்றுதிரட்டி கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவும் தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் மிக அநாகரிகமாக செயற்பட்டதை குறிப்பிட்ட வடிவேல் சுரேஷ் எம்பி, கடந்த காலத்தில் அவர் செய்த சூழ்ச்சியே மலையக மக்களின் பாரிய பின்னடைவுக்கு காரணம் என்றும் 1000 ரூபா சம்பள பிரச்சனை இழுத்தடிப்புக்கும் இன்று மலையகத்தில் தமிழ் அமைச்சர் ஒருவர் இல்லாத நிலைக்கும் ரணில் விக்கிரமசிங்கவே அடிப்படை காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தாம் தமது சிறப்புரிமையை பாதுகாக்கும் வகையில் சபாநாயகரிடம் வேண்டுகோள் முன் வைத்ததாகவும் அதன்போது ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்ட வகையில் தமக்கு எதிராக குரல் எழுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.

இராஜகிரியில் உள்ள தலைமையகமானது ரணில் விக்கிரமசிங்கவின் சொத்தோ அல்லது சிறிகொத்தவின் சொத்தோ அல்ல. எவ்வாறெனினும் அந்த தலைமையகம் கை மாறவேண்டுமானால் அது வருடாந்த மாநாடு நடத்தப்பட்டு தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்:

சில தினங்களுக்கு முன் கடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் எம்பிக்கள் என சிலர் மேற்படி தலைமையகத்துக்கு வந்து கட்டிடத்தை சேதப்படுத்தி ஊழியர்களையும் தாக்கியுள்ளனர். அத்துடன் எனக்கும் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.

அந்தக் குழுவில் முன்னாள் அமைச்சர்களான சாகல ரத்நாயக்க, நவீன் திசாநாயக்க, இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ருவன் விஜேவர்தன, ஆர்.யோகராஜன், சமன் ரத்னபிரிய போன்றவர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

அவர்களுடன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களும் வந்திருந்தனர். அவர்கள் மிக மோசமாக நடந்து கொண்டதைக் குறிப்பிட வேண்டும்.

அதனையடுத்து எனது சிறப்புரிமையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் நான் பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை எழுப்பினேன். அதன்போதே என்னை பைத்தியக்காரன் என்று கூறி எனக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க குரல் கொடுத்தார்.

தேசியப்பட்டியலில் வந்தவரை விட மக்கள் வாக்குகளினால் பாராளுமன்றம் வந்துள்ள எனக்கு எனது சிறப்புரிமை பற்றி பேச அதிகம் உரிமை உள்ளது. அதனை புரிந்து கொள்ளாத ரணில் விக்கிரமசிங்கவே பைத்தியக்காரன்.

எவ்வாறெனினும் இராஜகிரியில் உள்ள மேற்படி தலைமையகம் நீதிமன்ற தீர்ப்பின் படி மலையக தொழிலாளர்களுக்கும் அதன் நம்பிக்கை சபைக்குமே சொந்தமானது.

அதனை அபகரிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலை காரணமாக எதிர்காலத்தில் அது தொடர்பில் முழு மலையகத்தையும் ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments

Powered by Blogger.