Header Ads



இன மத வேறுபாடின்றி இலங்கையரை பாதுகாப்பதே எனது நோக்கம், ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்


அரச தலைவர்களே, கௌரவத்துக்குரிய உறுப்பினர்களே, 

அனைவருக்கும் வணக்கம்..!

இன்று நடைபெறும் இந்த மாபெரும் மாநாட்டில், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திக் கலந்துகொள்ளக் கிடைத்தமையிட்டு, நான் பெருமையடைகிறேன். 

76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரின் அவைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) அவர்களுக்கு, என்னுடைய வாழ்த்துகளை முதற்கட்டமாகத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தலைவர் அவர்களே, நீங்கள் இலங்கையின் நீண்டகால நண்பராக இருக்கிறீர்கள். எதிர்வரும் காலங்களிலும், உங்களுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிப் பணியாற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். 

இதற்கு முன்னர் இடம்பெற்ற பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது, மேதகு வொல்கன் பொஸ்கீர் (Volkan Bozkir) அவர்கள் ஏற்றிருந்த பொறுப்புகளுக்குப் பாராட்டுத் தெரிவிப்பதோடு, இன்றைய இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பாகத் தமது தலைமைத்துவத்தை வழங்கி வரும் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டெரெஸ் அவர்களையும் பாராட்ட, இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்கிறேன். 

தலைவர் அவர்களே, 

கொவிட் – 19 தொற்றுப் பரவலானது, மானிட குலத்துக்கு, பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. தொற்றுப் பரவலால் தமக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ள அனைவருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார மற்றும் அத்தியாவசியச் சேவை ஊழியர்களின் அர்ப்பணிப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதோடு, இந்தப் பிரச்சினை தொடர்பில், உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கி வரும் ஒத்துழைப்புகளுக்கும் பாராட்டுத் தெரிவித்துக்கொள்கிறேன். 

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் இருந்தே, இலங்கையானது சர்வஜன வாக்குரிமையைப் பெற்றிருந்தது. ஜனநாயகக் கலாசாரம் என்பது, எமது வாழ்வியலில் மிக முக்கிய அங்கமாகக் காணப்படுகிறது. 

வளமானதும் நிலையானதுமான நாடொன்று உருவாக்கப்படுவதற்காகவும் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை உறுதிப்படுத்துவதற்காகவும், 2019ஆம் ஆண்டில் என்னை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கவும்  2020இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலின் ஊடாகப் புதிய அரசாங்கமொன்றை உருவாக்கவும், மாபெரும் மக்கள் ஆணையை இலங்கை மக்கள் வழங்கியுள்ளனர்.  

2019ஆம் ஆண்டில், அடிப்படைவாத மதவாதத் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களையும் இலங்கை எதிர்கொண்டது. 

அதற்கு முன்னர், அதாவது 2009ஆம் ஆண்டு வரையில், சுமார் 30 வருடங்களாக இலங்கையில் யுத்தம் நிலவியது. 

பயங்கரவாதம் என்பது, உலகளாவிய அச்சுறுத்தல் என்பதோடு, அதனை வெற்றிகொள்ள வேண்டுமாயின், விசேடமாகப் புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு, சர்வதேசத்தின் ஒத்துழைப்பு அத்தியாவசியமாகின்றது. 

கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில், இலங்கையில் ஆயிரக்கணக்கான உயிர்களும் பல தசாப்தங்களுக்குரிய செழிப்பும் இழக்கப்பட்டுள்ளது. 

இதுபோன்ற வன்முறைச் செயல்கள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசு உறுதியாக உள்ளது. அதனால், அவற்றின் பின்னால் காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். 

நீடித்த சமாதானத்தை நாட்டுக்குள் ஏற்படுத்திக்கொள்ள, தேசிய நிறுவனங்களினூடான பொறுப்புக்கூறல், மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. 

பொருளாதார அபிவிருத்தியின் பிரதிபலன்களுக்காக, நியாயமான பங்கேற்பை உறுதி செய்வதிலும் உண்மையாக இருக்க வேண்டும். 

இனப் பாகுபாடு,  மதம் மற்றும் பாலின வேறுபாடுகளின்றி, அனைத்து இலங்கையர்களுக்கும் வளமானதும் நிலையானதும் பாதுகாப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதே, என்னுடைய அரசாங்கத்தின் நோக்கமாகும். 

இந்தச் செயற்பாட்டுக்காக, அனைத்து உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து, சர்வதேசப் பங்குதாரர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள நாங்கள் தயார். 

எவ்வாறெனினும், மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் உள்ளூர் நிறுவனங்கள் மூலம் மட்டுமே நிலையான முடிவுகளைப் பெறமுடியுமென்பதை வரலாறு எடுத்துக்காட்டியுள்ளது. இலங்கையின் பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் சுயாதீன சட்டரீதியான அமைப்புகள், தங்கள் செயற்பாடுகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வரம்பற்ற இடத்தைக் கொண்டிருக்க வேண்டும்.

மதிப்புக்குரிய தலைவர் அவர்களே, உறுப்பினர்களே, இன்று நமது பொதுச் சபை விவாதத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப எங்கள் நம்பிக்கையின் மூலம் உண்மையான நெகிழ்ச்சியை உருவாக்க வேண்டுமாயின், நாங்கள் அனைவரும், பொது நலனைக் கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும். 

இறையாண்மையுடன் கூடிய அனைத்து அரசாங்கங்களினது அளவையும் வலிமையையும் பொருட்படுத்தாமல், நியாயமான முறையில் கருதி, அவர்களின் வழிமுறைகள் மற்றும் பாரம்பரியத்துக்கு உரிய மரியாதையுடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது, ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பாக இருக்கின்றது. 

ஆப்கானிஸ்தானில் பௌத்த உரிமைகளைப் பாதுகாத்து ஊக்குவிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபையிடமும் சர்வதேசத்திடமும் கேட்டுக்கொள்கிறேன். 

அனைத்து மனித குலத்துக்கும் சிறந்ததும் நிலையானதுமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக, உண்மையான ஒத்துழைப்புடனும் தியாக மனப்பான்மையுடனும், நல்லெண்ணம் மற்றும் பரஸ்பர மரியாதையுடன் ஒன்றாகப் பணியாற்றுவோம் என்று,  இந்த மாபெரும் சபையில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி..! 

3 comments:

  1. What a joke? First protect your minorities. Do not worry about Afghanistan

    ReplyDelete
  2. அவரையும் இவரையும் பாராட்டுவதும் அதனைக் கேட்கவும் ஐ.நா சபை தயாராக இல்லை. அ்து வெறுமனே காலநேர வீணடிப்பு.அது தவிர உலகம் ஒரு ​போதும் ஏற்காத சகல இனங்களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்த இவர் பாடுபடுவதாக உலக அரங்கில் இவ்வளவு பெரிய பொய்யை அம்பலப்படுத்துவதை அனைவரும் கேட்டு கொண்டிருந்தமை இந்த நாட்டுக்கு மிகப் பெரிய அபகீர்த்தியாகும். நாடு மேற்கொள்ளும் எந்த விதமான நீண்டகாலத்திட்டங்கள் பற்றியும் இங்கு பேசப்படவில்லை.இந்த பேச்சு ஒரு சர்வதேச அரங்கில் முன்வைப்பதற்கு எவ்வளவு தகுதியாக இருந்தது என்பது பற்றி பொதுமக்களின் கருத்துக்களை அறிய ஆவல்.

    ReplyDelete
  3. Ungaluku Naataye Kaapathe therilla adhukedaila Edhuku Afgan ku paairinga

    ReplyDelete

Powered by Blogger.