September 29, 2021

இனச் சுத்திகரிப்பால் பாதிக்கப்பட்ட ஒஸ்மானியாவும், ஹதீஜாவும் யாழ்ப்பாணத்தில் கல்வியில் மீண்டெழுந்தன


- M.S. Mohamed -

1990 ஆம் ஆண்டு இனச்சுத்திகரிப்புச் செய்யப் பட்டு  பகல் கொள்ளையடிக்கப் பட்டு முழுச் சொத்துக்கள் பணம் நகை என்பவற்றை பறிகொடுத்த  நிலையில் வெளியேற்றப் பட்ட  யாழ்ப்பாண முஸ்லிம்கள் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக மீளக்குடியேறி வருகின்றனர். 

முஸ்லிம்கள் மீளக்குடியேற ஆரம்பித்த காலப்பகுதியில்  பாடசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் வீடுகள் எல்லாம்  உடைக்கப் பட்டே காணப்பட்டன.  

இன்நிலையில் உடைக்கப் பட்டிருந்த பாடசாலையின் கட்டிடங்களை துப்பரவாக்கி ஒஸ்மானியாக் கல்லூரி ஆரம்பிக்கப் பட்டது. ஆரம்பத்தில் 35 மாணவர்களுடன் கலவன் பாடசாலையாக தொடங்கப் பட்ட ஒஸ்மானியா கல்லூரி படிப்படியாக வளர்ச்சியுற்று 450 மாணவர்களைக் கொண்ட பாடசாலையாக மாறிய பொழுது பெண்களுக்கான தனியான பாடசாலையான ஹதீஜா கல்லூரி மீண்டும் ஒஸ்மானியவின் கட்டிடம் ஒன்றில் ஆரம்பிக்கப் பட்டது.  

முப்பதுக்கும் குறைவான மாணவிகளுடன் ஆரம்பிக்கப் பட்ட ஹதீஜா 2019 ஆகும் பொழுது நூறு மாணவிகளை கொண்டு செயற்பட்டது.  2020 இல் ஹதீஜாவின் உடைத்து அழிக்கப் பட்ட கட்டிடத்துக்கு  பதிலாக புதிய கட்டிடம் திறக்கப் பட்டு  ஹதீஜா கல்லூரி பழைய காணியில் இயங்க ஆரம்பித்தது. 

ஹதீஜாவின் அதிபராக அப்துல் கபூர் ஜன்சி  அவர்கள் செயற்படுகின்றார்.  கல்லூரி ஆரம்பிக்கப் பட்டு மூன்று மாதத்திலேயே கொரோனா தொற்று நோய் காரணமாக பாடசாலை மூடப்பட்டது. 2020 டிசம்பரில் இடம்பெற வேண்டிய கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சை 2021 மார்ச் மாதம் இடம்பெற்றது. தொடராக கல்வி நடவடிக்கைகள் இடம்பெறாத நிலையில் ஒன்லைன் மூல கற்கை நெறிகளுக்கு தொலைபேசி இன்டர்னெட் வசதிகளின்றி மாணவ மாணவிகள் மிகவும்  சிரமத்துக்கு உள்ளாகினர். இதே நிலமைதான் ஒஸ்மானியாவிலும் காணப் பட்டது. 

சுயகற்றல் ஒன்றே இம்மாணவர்களுக்கு ஒரே வழியாக இருந்தது.  இவ்வாறான சூழலில் 1976 குழுமம் மற்றும் மக்கள் பணிமனை என்பன பிரத்தியேக வகுப்புகளை நடத்தின. ஹதீஜா ஏற்கனவே ஆசிரியர் பற்றாக் குறை உள்ள பாடசாலை, இஸ்லாம் கற்பிக்க அந்தத் துறையில் ஒரு ஆசிரியையை இதுவரை யாழ் கல்வி வலயம் வழங்காத நிலையில்  ஒரு ஆசிரியை முன்வந்து இஸ்லாம் பாடத்தை கற்பித்திருந்தார். அந்த பாடத்தின் பிரத்தியேக வகுப்புக்களை மக்கள் பணிமனை நடத்தியிருந்தது. அந்த பாடத்தில் ஹதீஜா சிறந்த ஏ, பி சித்திகளை வெளியாக்கியுள்ளது ஆச்சரியமான விடயம். 

ஹதீஜா கல்லூரியின் பெறுபேறுகளை நோக்கும் போது எம்.மின்ஹா 2 ஏ, 2பி, 3சி, எஸ். ரக்சானா ஏ, 2 பி, 3 சி, எம்.எஸ்.சிப்கா 2பி 6 சி, எம்.என்.சன்ஹா பி, 5 சி, என்.இஸ்ரத் பி, 3 சி  என சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். வெளியேற்றப் பட்டு முப்பது வருட இடைவெளியின் பின்னர் முதல் பிரவேசத்திலேயே பதினாறு மாணவர்களில் 9 பேர் உயர்தரம் கற்க தகுதிபெற்று 56 விழுக்காடு சித்தி  என்ற நிலையை அடைந்து சமூகத்தை இமையை உயர்த்த வைத்துள்ளது ஹதீஜா. 

இவரக்ள் சுயகற்றல் மூலம் தமது இலக்குகளை அடைந்தார்கள் என்று அதிபர் குறிப்பிட்டார். இருந்த போதிலும் பிரத்தியேக மற்றும் விசேட வகுப்புக்கள் மற்றும் விரிவுரைகளை 76 குழுமம் மற்றும் மக்கள் பணிமனை நடத்தியது இந்த வெற்றிக்கு மிகப் பெரிய பங்களிப்பைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேவேளை ஒஸ்மானியா கல்லூரியின் கற்றல் செயல்பாடுகள் பாதிக்கப் பட்டிருந்தாலும் அவர்களுக்கான விசேட வகுப்புகளை நடத்துவதிலும் வீடுகளுக்கு சென்று மாணவர்களை உற்சாகப் படுத்துவதிலும் முன்னாள் அதிபர் சேகு ராஜிது அவர்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது. 

ஒஸ்மானியாவின் பெறுபேறைப் பார்க்கும் போது எம்.எம்.அக்ரம் 2ஏ, 3பி, 3 சி, ஆர்.எம்.கைஸ் ஏ, 3 பி, 4 சி, ஆர்.ரிகாஸ் ஏ, 2பி, 4 சி, ஆர். இப்ரத் ஏ,பி, 6 சி, எம்.ஏ.சசான் ஏ, பி, 4 சி,  எஸ்.சமி 4 பி 4 சி போன்ற பெறுபேறுகளைப் பெற்று  மொத்தமாக 18 மாணவர்களில் 7 பேர் உயர்தர கல்வி கற்க தகுதி பெற்றுள்ளனர். 

இது மீளக் குடியேறி வரும் ஓர் ஊர் என்ற வகையிலும் யுத்தத்தால்  மிகவும் பாதிக்கப் பட்ட பாடசாலைகள் என்ற வகையிலும் இந்தப் பெறுபேறுகள் மூலமாக மீண்டும் இந்த பாடசாலைகளில் உயர்தரவகுப்பு ஆரம்பிக்க தகுதி பெற்றுள்ளமையாலும்  மிகச் சிறந்த பெறுபேறாக அவை இல்லாவிட்டாலும்  அந்த அடைவுகள் ஒரு சாதனையாக பார்க்கப் படுகின்றது. 

இந்த வெற்றிக்காக  இரண்டு பாடசாலைகளினதும்  அதிபர்கள், ஆசிரியர் குழாம், 76 குழுமம், மக்கள் பணிமனை மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் சமூகம் நன்றிக்கடன் பட்டுள்ளது. 

1990 இனச்சுத்திகரிப்புக்கு முற்பட்ட ஹதீஜாவும் ஒஸ்மானியாவும்  உயர்தர வகுப்புகளைக் கொண்டிருந்ததுடன் 1985 ஆம் ஆண்டின் பின்னர் ஒஸ்மானியா வருடா வருடம் சில மாணவர்களை பல்கலைக் கழகத்துக்கு தகுதி பெற வைத்திருந்தது.  இதைப் பற்றி தெரிவித்த ஒருவர் 1982 ஆம் ஆண்டு தான் ஒஸ்மானியாவில் சேருவதற்காக முயற்சித்துக்கொண்டிருந்த போது சிலர் தன்னை அனுகி ஒஸ்மானியாவில் சேராதே தமிழ் பாடசாலைகளில் படி என்பதாக வற்புறுத்தியிருந்தனர்.

 இவ்வளவு எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் தங்களுடைய வகுப்பின் க.பொ.த சாதாரணதர பெறுபேறு வெளியாகிய சந்தர்ப்பத்தில்  ஊரே மகிழ்ச்சியடைந்திருந்தது என்று குறிப்பிட்டார். இஸ்லாம் பாடத்தில் மட்டும் அப்போது 50 விகிதமானவர்கள் விஷேட சித்தியை பெற்றிருந்தனர். முதல் முதாலாக பதினைந்து மாணவர்கள் நேரடியாக உயர்தர வகுப்புக்கு தகுதி பெற்றிருந்தனர் என்றும் இதைப் பார்த்த முன்னர் ஆலோசனை வழங்கியவர்கள் தங்கள் பிள்ளைகளை ஒஸ்மானியாவில் சேர்க்கலாமா என்று விசாரித்ததுடன் பலர் தங்கள் பிள்ளைகளை ஒஸ்மானியாவில் சேர்த்ததை தான் கண்டதாகவும் தெரிவித்தார். 

அவ்வாறு தற்போதும் ஏறக் குறைய 15 மாணவர்கள் உயர்தரம் கற்க இரண்டு பாடசாலைகளிலும் தெரிவு செய்யப் பட்டுள்ளமை மகிழ்ச்சியான ஒரு செய்தியாக இருந்தாலும் இப்பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்க கல்வி வலயம் அனுமதிக்குமா என்ற கேள்வி இருக்கின்றது. 

ஒஸ்மானியாவும் ஹதீஜாவும் அவ்வாறு அனுமதி பெற்று வேறு வேறாக தங்கள் பாடசாலைகளில் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிப்பதா அல்லது இரண்டு பாடசாலைகளையும் சேர்த்து ஒஸ்மானியாவில் உயர்தர வகுப்பு ஆரம்ப்பிப்பதா என்பதை சமூகமும் பாடசாலை அதிபர்களும் தீர்மானிக்க வேண்டிய ஒன்று. 

உயர்தர வகுப்புக்கு மாணவர்களை முஸ்லிம் பாடசாலைகளிலேயே தொடர்ந்து உள்வாங்கி கற்பிப்பதாயின் அம்மாணவர்களுக்கு முஸ்லிம் பாடசாலையில் கற்றால் புலமைப் பரிசில் நிதி கிடைக்கும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் மாணவர்கள் வேறு பாடசாலைகளுக்குச் செல்வதை தடுக்க முடியும். 

என்ன தான் ஓர் ஊரில் பாடசாலைகள் இருந்தாலும் அதன் கல்விச் சாதனை என்ன என்ற கேள்வி எழும் பொழுது அந்த பாடசாலை எத்தனை மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்பியுள்ளது என்பதை வைத்தே கணிக்கப் படும் என்பதாக 2013 ஆம் ஆண்டு ஒஸ்மானியாக் கல்லூரியில் இடம்பெற்ற 50 ஆவது ஆண்டு விழாவின் மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்திருந்ததை இங்கு ஞாபகப் படுத்துகின்றோம்.

இம்முறை உயர் கல்வி கற்க தேவையான ஆகக் குறைந்த மாணவர் எண்ணிக்கையை விட அதிகமானவர்கள்  இரண்டு பாடசாலைகளிலும் சித்தியடைந்துள்ளனர்.  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப் பட்டால் மீள்குடியேற்றத்தை பெரிதும் அது ஊக்குவிக்கும்.

முஸ்லிம் பாடசாலைகளில் உயர்தரம் கற்பிக்கும் தகுதி கிடைத்தும் அதனை நமது சமூகம் மற்றும் தனவந்தர்கள் பயன் படுத்திக் கொள்வார்களா அல்லது வழமை போன்று யாராவது செய்யட்டும் நமக்கென்ன என்ற நிலைப்பாட்டில் 18 வருட உழைப்பில் கிடைத்த பிரதிபலனை தூக்கி எறிவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.

0 கருத்துரைகள்:

Post a Comment