Header Ads



லிபியாவில் ஜனாதிபதி, பாராளுமன்றத் தேர்தல் - கண்காணிக்க வரும்படி இலங்கையிடம் கோரிக்கை


இலங்கையிலுள்ள லிபிய அரசின் தூதரகத்தின் பொறுப்பாளர் அமர் ஏ.எம். முப்தா, வெளிநாட்டு அமைச்சில் வைத்து சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், இரு  நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளிலான பரஸ்பர நலன்கள் குறித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் பீரிஸ் அண்மையில் புதிதாக வெளிநாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக, லிபிய வெளிநாட்டு  அமைச்சரின் பாராட்டுக்களை லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சரிடம் தெரிவித்தார்.

லிபியாவின் தற்போதைய நிலைமை, குறிப்பாக மார்ச் 2021 முதல் பதவியில் இருக்கும் இடைக்கால அரசாங்கத்தின்  வகிபாகம் குறித்து லிபியாவின் தூதரகப் பொறுப்பாளர் அமைச்சருக்கு விளக்கினார். 2021 டிசம்பர் 24ஆந் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தங்கள் குறித்து அவர் விளக்கமளித்ததுடன், தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்றை இலங்கை அனுப்பி வைப்பது குறித்து பரிசீலிக்குமாறு கோரிக்கை விடுத்தார். சுதந்திரத்திற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர் 1931ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் உலகளாவிய வாக்குரிமையை அனுபவித்து வருவதனை வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நினைவு கூர்ந்தார். ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும் லிபியாவின் முயற்சிகளுக்கு ஜனநாயக நாடாக இலங்கை ஆதரவளிப்பதாகவும், இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதனூடாகவும், ஆபிரிக்கப் பிராந்தியத்தில் ஏற்றுமதி சந்தையை விரிவுபடுத்துவதனூடாகவும் அரசாங்கம் பொருளாதார இராஜதந்திரத்தில் கவனம் செலுத்தி வருவதாக வெளிநாட்டு அமைச்சர் எடுத்துரைத்தார். தேயிலை, இரத்தினம் மற்றும் ஆபரணங்கள் மற்றும் சுற்றுலாத் துறைகளில் லிபியாவுடனான இலங்கையின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்களைத் தொடர்வதற்கு இதன்போது  ஒப்புக்கொள்ளப்பட்டது.

இலங்கையின் பிராந்திய மற்றும் பல்தரப்பு ஈடுபாடுகள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் லிபியத் தூதுவருக்கு  அறிவித்ததுடன், சர்வதேச அளவில் நெருக்கமான ஒத்துழைப்பைத் தொடர்வதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

வெளிநாட்டு அமைச்சு

No comments

Powered by Blogger.