September 03, 2021

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடம் அமைப்பதே, எனது இலட்சியமாகும் - உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்


(சுலைமான் றாபி)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், எதிர்காலத்தில் வைத்திய பீடம் அமைப்பதே தன்னுடைய இலட்சியமாகும் என, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் (01) மாலை நிந்தவூர் பிரதேச இளைஞர் தன்னார்வ அணியினர், உபவேந்தருடன் கல்வி அபிவிருத்தி முறைபற்றி கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ;

தற்பொழுது கிழக்கு மாகாண ஆயுர்வேத திணைக்கள வைத்தியர்கள் தன்னை சந்தித்து, இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் யுனானி மருத்துவ டிகிரி கற்கை நெறியினை ஆரம்பிப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளனர். இது உண்மையில் வரவேற்கத்தக்கக்கூடிய விடயமொன்றாகும். இது ஒரு வித்தியாசமான சிந்தனையும் புதிய முயற்சியும் ஆகும். அந்த அடிப்படையில் இவர்களால் முன்மொழியப்பட்ட முன்மொழிவுகளை பெரிதும் மதிக்கின்றேன். எதிர்காலத்தில் இவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு  நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இருந்தபோதும், என்னுடைய காலத்திற்குள் இந்த பல்கலைக்கழகத்தில் வைத்தியபீடமொன்றினை உருவாக்குவதே எனது இலட்சியமாகும். அதனை நிறைவேற்றுவதற்கு சகல வழிகளிலும் முயற்சிகளை எடுக்க உள்ளேன். அந்த அடிப்படையில், ஜனாதிபதி அவர்களினதும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்பும், கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் ஒத்துழைப்புகள் கட்டாயம் பெறப்படவேண்டும். 

பல்கலைக்கழகங்கள் என்பது விரிவுரையாளர்களுக்கும், மாணவர்களுக்கும் மட்டுமே உரித்துடையது என்ற மாயையை நீக்கி, அதனை சமூக பிணைப்பாக கொண்டுவர தீர்மானித்துள்ளேன். கிராமங்கள் தோறும், நகரங்கள் தோறும் பல்கலைக்கழகத்தின் பணிகளை அடி மட்டம் வரைக்கும் கொண்டு செல்வது தற்போதைய காலத்தின் தேவையாக உள்ளது. அதனை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளோம். 

சர்வதேச அளவில் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக பேசப்படும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகமானது, மக்கள் மத்தியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இங்கு நாம் சுட்டிக்காட்ட வேண்டும். பொதுவாக அது பல்கலைக்கழகமாக மட்டும் இயங்காமல், மக்களின் அன்றாட விடயங்களிலும் அது கூடுதல் செல்வாக்குச் செலுத்தி, மக்களும் பல்கலைக்கழகமும் ஒன்று என்ற ரீதியில் அங்கு சமனிலை பேணப்படுகிறது. தற்போது அந்த பல்கலைக் கழகத்தினால் கொவிட் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டு உலகத்தில் அது செலுத்தப்படுகிறது. இவ்வாறானதொரு செயற்பாட்டு வடிவத்தையே பல்கலைக்கழகத்தில் உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

அத்துடன் உயர்தர வகுப்புக்கள் காணப்படும் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு, எமது பல்கலைக்கழகத்தில் காணப்படும் திறமையான மாணவர்களைக் கொண்டு, இம் மாணவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளேன். கொவிட் நிலைமைகள் சீராகி பாடசாலைகள் இயங்கும்போது, இவைகளை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளேன். 

அத்துடன் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்குத் தேவையான ஆங்கில அறிவு, தொழில்நுட்ப அறிவு போன்ற கல்வி செயற்பாடுகளையும் எமது பல்கலைக்கழகத்தின் ஊடாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளேன். அதற்காக ஒவ்வொரு பாடசாலைகளும் இப்பொழுது தங்களை தயார்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.

இதில் இளைஞர் தன்னார்வ அணையினர் உப வேந்தருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், இந்த நிகழ்வில் பிரதான செயற்பாட்டாளர் ஆசிரியர் ஐ.எல்.ஏ. சலாம், உறுப்பினர்களான எம்.எம். அப்றத், என். இஸ்மத், எஸ்.எல்.எம். நாசிறூன் ஆகியோர்களும் கலந்துகொண்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment