Header Ads



மதகுருமாரின் வெறுப்பு பேச்சுக்களை கட்டுப்படுத்தி அவர்களுக்கு அனுசரணை வழங்குவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும்


மனித உரிமை பாதுகாப்பது தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் திருப்திகரமானதாக இல்லை. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு வுக்கு எடுத்துக் கூறினோமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு நேற்று (28) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் சந்தித்து கலந்துரையாடியது.

கலந்துரையாடலை தொடர்ந்து இது தொடர்பான ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எமது தரப்பின் கருத்துக்களை கேட்டறிந்து கொள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு நேற்று எம்மை சந்தித்து கலந்துரையாடியது. எம்மை பொறுத்தவரையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் அரசியல் ரீதியாக பலரை பழிவாங்கும் முயற்சி வெளிப்படையாக இடம்பெறுகின்றது என்பதை நாங்கள் எடுத்துரைத்தோம்.

குறிப்பாக சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் போன்றவர்கள் தகுந்த காரணமின்றி, சோடிக்கப்பட்ட காரணங்களை காட்டி சுமார் ஒன்றரை வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். சட்டத்தரணி ஒருவரை இவ்வளவு காலம் தடுத்துவைத்திருப்பது ஒரு பழிவாங்கும் முயற்சியென ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஒன்று தொடர்பாகவும் தெரிவித்தோம்.

மேலும் முஸ்லிம் சமய விவாக விவாகரத்து சட்டம் தொடர்பான சர்ச்சை சமூகத்தில் முழுமையாக தீர்க்கப்பட்டிருந்ததுடன், அரசாங்கம் முஸ்லிம்களுக்குள்ள தனியான சட்ட முறைமைகளை இல்லாமல் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற விடயத்தில் நாங்கள் தெளிவாகவுள்ளோம். அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முயற்சிக்கிறது. அதனால் சிறுபான்மை மக்களின் உரிமைகளை பறிக்கின்ற விடயத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் இடமளிக்கக் கூடாதென்ற விடயத்தையும் தெரிவித்தோம் என்றார்.

No comments

Powered by Blogger.