September 01, 2021

தாலிபான்களின் காட்டு ஆட்சி, மாற்று சமூகத்தவர் மனதில் நம் மூதாதையர் கட்டிய சகோதரத்துவத்தை சின்னாபின்னமாக்கியது


- Rauf Hazeer -

'80 களில் சோவியத் ரஷ்யாவை ஆப்கானில் இருந்து துரத்த முஜாஹிதீன்கள் மூர்க்கமாக போராடிக் கொண்டிருந்தபோது இலங்கையில் நடந்த  தலைநகர  பேரணிகளின் ஆஸ்தானக் கவிஞனாக நான் முழங்கிக் கொண்டிருந்தேன்.

"முஜாஹிதீன்" என்ற வார்த்தை என் கவிதைகளின் முத்திரை வசனமாய் ஜொலித்ததுக் கொண்டிருந்தது.

ஒரு கிலாபத்தை கனவு கண்டுகொண்டு பதாகைகள் சுமந்து , கோஷங்கள் முழங்க கண்ணீர்புகை குண்டுகளையும் , ரப்பர் தோட்டாக்களையும் ஒரு பொருட்டாக கருதாத போராளிகள் படை , தலைநகர தெருக்களை இடைக்கிடை ஆக்ரமித்தது.           

அப்படி ஒரு காலம் இருந்தது. 

அன்று சோவியத் ரஷ்யாவின் பெரும்படை , முஜாஹிதீன்களால் துவைத்து துவம்சம் செய்யப்பட்டது.

நாங்கள் கல்புக்குள் சுமந்த  " கிலாபத் " கனவை கபுருக்கள்  அடக்கிவிட்டு  " அய்யாமுல்ஜாஹிலியா " ஆட்சிபீடமேறியது. 

வருடங்கள் கழிந்தன....

பின்னர் தாலிபான்களை துரத்திவிட்டு ஜனநாயக முகமூடியோடு அமெரிக்க அலிபபா நாற்பது திருடர்களோடு ஆப்கானை ஆக்ரமித்தது. 

காலம் ஓடியது...

இப்போது வியட்நாமில் போலல்லாது , விசித்திரமான பாணியில் மிக வேகமாக அலிபபாவின் திருடர்கள்  வெளியேறி இருக்கிறார்கள்.

ஆப்கான் மீண்டும் தாலிபான்களின் தர்பார் ஆகி இருக்கிறது.     

அல்லாஹ் தாலிபான்களுக்கு சரியான வழியை காட்டுவானாக.

ஆப்கானிஸ்தானில் கிலாபத் ஆட்சி மலரட்டும் .

ஷரீயா அவர்களின் சட்டமாக ஆகட்டும்.

அமெரிக்காவும் நேச நாடுகளும் அவர்களின் ஆட்சியை அங்கீகரித்து பொருளாதார உறவுகளை வலுப்படுத்தட்டும்.

இப்போது நம்முள் சிலர் தாலிபான்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கட்டுரை , கட்டுரைகளாக எழுதித்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

அல்ஹம்துலில்லாஹ். 

அவர்களின் கனவு நனவாகட்டும். 

ஆமீன்  !  

ஆனாலும்......

அமெரிக்க எதிர்ப்புணர்வு காரணமாக நாமும் , நம்முள் பலரும் தாலிபான்களின் மீள் எழுச்சியை வரவேற்றாலும் , அவர்களின் கடந்த கால வரலாற்றுத் தவறுகளை மறந்துவிட வில்லை.

மறந்துவிடவும் முடியாது !

அன்று -

ஆட்சியாளர்களை தூக்கி எறிந்துவிட்டு ஆப்கானில்  காட்டு தர்பார் நடத்திய தாலிபான் ஆட்சியாளர்களின் தாக்கம் , இலங்கையில் உள்ள மாற்று சமூகத்தவர்களின் மனதில் நம் மூதாதையர் கட்டியெழுப்பி இருந்த சகோதரத்துவத்தை சிதைத்து சின்னாபின்னம் ஆக்கியது.

இங்கே ஓர் இஸ்லாமிய எதிர்ப்பு அலை சுனாமியாகியதற்கு தாலிபான்களின் அன்றைய  ஜாஹிலியா சொரூபமே காரணம் என்பேன் நான்.

ஷாவின் சர்வாதிகாரத்தை தகர்த்த ஈரானிய புரட்சி இலங்கை முஸ்லிம்களால் வரவேற்கப்பட்டபோது , இங்குள்ள மாற்று மத சமூகத்தவர்கள் கலக்கமடையவில்லை .

முஜாஹிதீன்களாக நாங்கள் கொழும்புத் தெருக்களை முற்றுகையிட்டபோது , இன்று பிக்குகளையும் , மூதாட்டிகளையும்  மூட்டை கட்டி ஏற்றுகிற போலிஸ் லொரி வரவில்லை.      

கடாபியின் ஆட்சியை நாம் கொண்டாடியபோது , பல மாற்று மத வீடுகளின் சுவர்களில் கடாபியின்  இராணுவ  பதக்கங்கள் மின்னும் சீருடை தரித்த புகைப் படங்கள் கண்ணாடிச் சட்டங்களுக்குள்ளே இருந்து கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

பலஸ்தீனுக்காக

பல சிங்கள - தமிழ் இயக்கங்கள் பகிரங்க மேடைகட்டி ஒலிபெருக்கிகளில் முழங்கிக்கொண்டிருந்தார்கள்.  

ஈராக் - குவைத் போரில் சதாம் ஹுஸைனை நாம் கதாநாயகன் அந்தஸ்துக்கு உயர்த்திவைத்து பிரார்த்தனைகள் செய்தபோது

நம்மோடு சேர்ந்து அவர்களும் 

சதாமை வீர புருஷன் என்றார்கள்.  

மத்திய கிழக்கில் இருந்து தினார்களோடும் ரியால்களோடும் திரும்பி வந்த பல மாற்று மத இளைஞர்களின் டீ சேர்ட்டுகளில் ஒசாமாபின்லாடன் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்தார்.    

நாங்கள் ஈத் பிறைக்காக வானத்தை பாத்திருந்த போது ,

அன்னிய சமூகத்தவர்கள் வட்டிலாப்ப கோப்பைக்காக வாசல் கதவுகளை திறந்து காத்திருந்தார்கள்.

ராஸீக்பரீடை , ஜாயாவை , மாக்கான் மாக்காரை ,  டொக்டர் கலீலை , பதியுதீன் மஹ்மூதை , காரியப்பர் குடும்பத்தை மட்டும் அல்ல   பாக்கீர் மாக்காரை , ஏ.ஸீ.எஸ் . ஹமீதை....... இனவாதிகளாக எவரும்  ( 99 % த்தினர் )  இனம்காணவில்லை

அஷ்ரப் , சிங்கள - தமிழ் பிரதேசங்களுக்குபோனபோது மாலை அணிவித்து அணிவகுப்பு நடத்தினார்கள்.

நியாஸ் மௌலவி ,

பௌத்த சமூகத்தவர்களின் பிரித் வைபவங்களின் பிரதம பேச்சாளராகி , நக்கல் ; நையாண்டி  ; நகைச்சுவை என கலக்கிக் கொண்டிருந்தார்.

அப்படி இந்த நாட்டில் நாம் வாழ்ந்த பொற்காலமொன்று இருந்தது.  அது பலநூறு வருடங்களுக்கு முன்னர் அல்ல  , '90 களின் அந்திம காலம் வரை அப்படித்தான் இந்த நாடு அழகாக இருந்தது. 

டோராபோரா மலைக்குகைகளை  அமெரிக்க குண்டுமழையால் தகர்க்க முடியாது போனாலும் ,  இங்கே மாற்று சமூகத்தவர்களின் மனக்குகைகளுள் வாழ்ந்த நம் சமூகத்தை , தாலிபான்களின் காட்டு ஆட்சி போட்டுத்தள்ளியது என்பதே உண்மை.

அங்கே உருவச்சிலை களை தகர்த்தார்கள்.

இங்கே நம் முன்னோர்கள் உருவாக்கிவைத்திருந்த பிம்பங்களை சிதைத்தார்கள். 

அதன் பிறகுதான் அல்கொய்தா , ஐ.எஸ்.ஐ.எஸ் , ஜிஹாத்படை என்கிற பூதங்கள் - பேய்கள் - பிசாசுகள் மாற்று மதத்தவர் மனங்களிலும் மூளைகளிலும் குடிகொள்ள ஆரம்பித்தன.

தப்லீகையும் , தௌஹீதையும் , ஜமாஅத்தே  யையும் கண்டுகொள்ளாமல் முஸ்லிம்களை மட்டுமே அவற்றுள் பார்த்தவர்கள் 

வஹாபிகளையும் , சுன்னத்து ஜமா அத்தையும் , தரீக்காக்களையும் காணத்தொடங்கினர்.  

இனிமேல் ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் அங்கே பூலோக சுவர்க்கத்தை உருவாக்கினாலும் ,  இங்கே இந்த நரகக் குழியின் தீ அணையப் போவதில்லை. 

அல்லாஹ்வே யாவும் அறிந்தவன்.அவனின்றி அணுவும் அசைவதில்லை.  ஈமான் மட்டுமே நமது கவசம்.

இரும்பையே உருக்கும்  தீக்குழியுள் உருகாமல் கிடந்ததல்லவா ஈமான் .    


" விசுவாசிகளுக்கு அவன் நல்லதை அன்றி,  நாடமாட்டான்."

0 கருத்துரைகள்:

Post a Comment