Header Ads



ஒரு வார்த்தையிலேனும் அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்துவோம்


வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட சில ஆசிரியர்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரிப்பது தொடர்பாக சில தரப்பினர் தன் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுகளை, கடுமையாக மறுப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட செவ்வி ஒன்றை நேற்று (22) வழங்கிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார். 

ஆசிரியர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடாமல் மெய்நிகர் முறையில் கற்பிக்கும் ஆசிரியர்களை, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் அச்சுறுத்தியாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றினை முன்வைத்தது, வேலை நிறுத்தத்திற்கு எதிரான ஆசிரியர்கள் எனவும் அவ்விடயத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை எனவும் அமைச்சர் அதன் போது தெரிவித்தார். 

வேலை நிறுத்தங்களில் ஈடுபடுவது பொதுமக்களின் ஜனநாயக உரிமையாக காணப்பட்டாலும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் இணைந்து கொண்டிருப்பது அவர்களின் விருப்பத்துக்கன்று கட்டாயப்படுத்தலுக்கே என சுட்டிக்காட்டிய வீரசேகர, அழைப்புகளை மேற்கொண்டு ஆசிரியர்கள் தனக்கு அது தொடர்பில் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். 

´வட, கிழக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் சர்வதேச மற்றும் தனியார் பாடசாலைகளிலும் கற்பித்தல் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று தெற்கிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் கற்கும் மாணவர்கள் மாத்திரமே அநாதரவாக உள்ளனர். இது மிகவும் துரதிஷ்டவசமான நிலமையாகும். அதனால் மாணவர்களின் எதிர்காலத்தினை கவனத்திற் கொண்டு கற்பித்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நான் ஆசிரியர்களை அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.´ என்று அமைச்சர் தெரிவித்தார். 

அரச ஊழியர்களின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது பாரதூரமான குற்றமாகும் என மேலும் சுட்டிக்காட்டிய அமைச்சர் சரத் வீரசேகர, வேலை நிறுத்தத்தினை கருத்திற் கொள்ளாது கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களை ஒரு வார்த்தையிலேனும் அச்சுறுத்தினால், அவர்களுக்கு எதிராக சட்டத்தினை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக சுட்டிக்காட்டினார்.

No comments

Powered by Blogger.