September 13, 2021

தேச ஒற்றுமை, சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது, நல்லிணக்கம் காலத்தின் முக்கியமான தேவை – பிரதமர் மஹிந்த


பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

இத்தாலியின் போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான (12) முதலாவது அமர்வில் உரையாற்றிய போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஜி20 அரச தலைவர்களின் மாநாடு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30-31 ஆகிய இரு தினங்கள் இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறவுள்ள நிலையில் அதனை முன்னிட்டு ஜி20 சர்வமத மாநாடு இடம்பெறுகிறது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்றினார்.

ஜி20 சர்வமத மாநாட்டில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

'கலாசாரங்களுக்கிடையே சமாதானம், மதங்களிடையே புரிதல்' எனும் தொனிப்பொருளில் வரலாற்று சிறப்புமிக்க போலோக்னா நகரில் நடைபெறும் ஜி20 சர்வமத மாநாட்டில் உரையாற்ற கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

இம்மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டமை தொடர்பில் இத்தாலி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் பேராசிரியர் அல்படோ மெலொனி உள்ளிட்ட ஏற்பாட்டு குழுவினருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாநாட்டின் தொனிப்பொருள் குறிப்பாக எனது நாடான இலங்கைக்கும் தெற்காசியாவின் புவியியல் வலயத்திற்கும் பொருத்தமானதாக காணப்படுவதால் இச்சந்தர்ப்பத்தை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.

இன, மத மற்றும் கலாசார பன்முகத்தன்மை என்பன எமது பிராந்தியத்தின் முக்கிய அம்சமாகும். எமது நாடுகளில் பல்வேறு இன, மத மற்றும் கலாசார பின்னணிகளை கொண்ட மக்கள் வசிக்கின்றனர்.

எனினும், இவ்வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து, பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்து, முதிர்நிலை தேசம் என்ற உணர்வை கட்டியெழுப்பும் சவாலுக்கு நாம் பதிலளித்துள்ளோம்.

பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும் போது பெரும்பாலும் எமது எதிர்காலம் ஒரு தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது.

தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன நமது யுகத்தின் மிக முக்கியமான சவால்களாகும். சரியாக இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் சோகமான சம்பவங்களை இங்கே நாம் நினைவுகூர வேண்டும். அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாம் அத்துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் மற்றும் அவர்களினால் கூறப்படும் நோக்கம் என்னவாக இருப்பினும் இச்சம்பவம் அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது.

இத்தகைய ஒரு தனித்துவமான தொனிப்பொருளில் ஒரு மாநாட்டை நடத்துவதற்கு கலை மற்றும் அறிவுபூர்வமான செயற்பாடுகளுக்கு அனைத்து வகையிலும் புகழ் மிக்க உலக மட்டத்தில் கலாசாரத்திற்கு தலைமையான வரலாற்று சிறப்புமிக்க போலோக்னா நகரம் மிகவும் பொருத்தமானதாகும்.

மனதை கவரும் இந்நகரம் இத்தாலியின் மறுமலர்ச்சி மற்றும் நாகரிக வளர்ச்சியை நிரூபிப்பதுடன், உலகின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்திய இத்தாலிய எஜமானர்களின் திறமை மற்றும் படைப்பாற்றலையும் பிரதிபலிக்கிறது.

எமது காலத்தின் கலாசாரத்திற்குள் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் துறைகள் குறித்து நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளீர்கள் என்பது மிகவும் தெளிவாக தயாரிக்கப்பட்டுள்ள இம்மாநாட்டின் ஆவணங்களின் மூலம் நான் புரிந்துக் கொணடேன்.

இத்துறைகளில் கல்வியை மிக முக்கிய துறையாக அடையாளம் காண்பதற்கு நான் ஒருபோதும் தயங்கமாட்டேன். குழந்தை பருவத்தின்போதே சரியான அணுகுமுறைகளை போதிப்பதற்கும், மதிப்பை மேம்படுத்துவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. வெவ்வேறு மதங்களின் சாராம்சத்தில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படினும், அனைத்து மதங்களினதும் நம்பிக்கை பொதுவானதாகும்.

எமது பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளின் ஊடாக வேறுபாட்டினை ஏற்படுத்தும் விடயங்களை விட, ஒருமைப்பாடுள்ள சகல மதங்களினதும் பொது விடயங்கள் தொடர்பில் வலியுறுத்துவதே கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்களின் கடமையாக அமைய வேண்டும்.

நல்லிணக்கம் என்பது நம் காலத்தின் முக்கியமான தேவையாகும். மோதல்களும் நம்மைச் சுற்றி அதிகரித்து வரும் இடையூறுகளும் பொதுவானவை. எங்களுடன் வலுவாக உடன்படாதவர்கள் உட்பட நம் நாடுகளில் வாழும் அனைவருடனுமான சிறந்த உறவின் மூலமே சமாதானமும், ஸ்திரத்தன்மையும் ஏற்படுகிறது.

வெறுப்பை வெறுப்பால் அல்ல அன்பினால் மட்டுமே வெல்ல முடியும் என்றே நம் மதம் நமக்கு போதிக்கிறது.

கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். நாம் சகோதரத்துவம் மற்றும் புரிதலின் ஊடாக உறவுகளை வளர்த்துக் கொண்டால் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அற்புதமான புதிய எல்லையை அடையலாம்.

ஐரோப்பாவின் பழமையான கற்றல் மையமான போலோக்னாவில் நடைபெறும் இந்த உற்சாகமூட்டும் மாநாடு அதற்கு மதிப்புமிக்க பங்களிப்பை அளிக்கிறது. ஏழு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜி 20 சர்வமத மாநாடு, கலாசாரம் தொடர்பான கலந்துரையாடலுக்கான ஒரு அரிய வாய்ப்பாகும்.

இந்த மதிப்புமிக்க மாநாட்டின் ஆரம்ப அமர்வில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்து நீங்கள் எனக்கு அளித்த கௌரவத்தை நான் நன்றியுடன் நினைவுகூருகின்றேன். பேராசிரியர் மெலானி மற்றும் அவரது ஏற்பாட்டு குழுவினருக்கும் நன்றி தெரிவிப்பதுடன், நீங்கள் முன்னெடுக்கும் இந்த மதிப்புமிக்க கலந்துரையாடல் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

0 கருத்துரைகள்:

Post a Comment