Header Ads



ஈஸ்டர் தாக்குதல் - ரிஷாத் சார்பில் 7 ஆம் திகதி நீதிமன்றில் சிறப்பு வாதத்தை முன்வைக்கவுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா


உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சார்பில் விஷேட வாதங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி முன் வைக்கப்படவுள்ளன.

இதற்கான அனுமதியை நேற்று கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே வழங்கினார்.  அதன்படி எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா சிறப்பு வாதங்களை முன் வைக்கவுள்ளார்.

இதற்கிடையே  நாளை வெள்ளிக்கிழமை, இது தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை மன்றில் முன் வைக்கவும் திட்டமிடப்ப்ட்டுள்ளது.  

கோட்டை நீதிவான் நீதிமன்றில் விசாரணையின் கீழ் உள்ள, கடந்த 2019  ஏப்ரல் 21 ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் குறித்த வழக்குக் கோவை நேற்று மீள விசாரணைக்கு வந்தது.

அதில் 7 சந்தேக நபர்கள் பெயரிடப்ப்ட்டுள்ள நிலையில், அவர்களில் ஹிஜாஸ் ஹிச்புல்லாஹ் உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக ஏற்கனவே வேறு குற்றச்சாட்டில் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில் நேற்றைய தினம் 7 ஆவது சந்தேக நபரான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி  ருஷ்தி ஹபீப் ஆஜரானார். 5,6 ஆம் சந்தேக நபர்களான  26,27 வயதுகளை உடைய  மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம்,  மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகிய இளம் மெளலவி ஆசிரியர்கள் சார்பிலும் சட்டத்தரணி ஒருவர் பிரசன்னமானார்.

கொவிட் நிலைமை காரணமாக சந்தேக நபர்கள் எவரும் மன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சந்தேக நபர்களை நீதிவான் மேற்பார்வை செய்தார்.

சந்தேக நபர்களின் விளக்கமறியல்  நீடிப்புக்காக இந்த வழக்கு  நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 7 ஆம் திகதிவரை நீடித்து  கோட்டை நீதிவான் பீரயந்த லியனகே உத்தரவிட்டார்.

அன்றைய தினமே ரிஷாத் பதியுதீன் சார்பில் வாதங்களை முன் வைக்கவும் நீதிவான்  அனுமதியளித்தார். வீரகேசரி

No comments

Powered by Blogger.