Header Ads



சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு பிரதமர் தலைமையில் 10 நினைவு முத்திரைகள் வெளியீடு


சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் தெங்கு குழுமத்தினால் 1998ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 25ஆவது கூட்டத்தின் போது முதல் முறையாக செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி உலக தெங்கு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தென்னை பயிர்ச்செய்கைக்கான ஆராய்ச்சிக்காக 1929ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உலகின் ஒரே நிறுவனம் இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனமாகும். 

இம்முறை தெங்கு தினத்தை முன்னிட்டு இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டிருந்த பல வேலைத்திட்டங்களை கொவிட் தொற்று நிலைமை காரணமாக எதிர்காலத்தில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தபால் திணைக்களத்துடன் இணைந்து இவ்வாறு 10 விசேட நினைவு முத்திரைகளை வெளியிடுவது இலங்கை வரலாற்றில் முதல் முறையாகும். தென்னையுடன் தொடர்புடைய பல்வேறு உற்பத்திகள் பத்தினை சித்தரிக்கும் வகையில் இந்நினைவு முத்திரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

பதில் பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) திரு.துசித ஹூலங்கமுவ அவர்கள் முதல் நாள் உறை மற்றும் நினைவு முத்திரைகளை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் வழங்கினார்.

குறித்த நிகழ்வில் கௌரவ இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் திரு.கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு.திஸ்ஸ ஹேவாவிதான, மேலதிக செயலாளர் திரு.D.S.விஜேசேகர, தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் தொழில்நுட்ப பரிமாற்ற அதிகாரி திருமதி.ஹேமமாலா பொன்சேகா, பதில் பிரதி தபால்மா அதிபர் (செயற்பாடு) திரு.துசித ஹுலங்கமுவ, முத்திரை பணியகத்தின் பணிப்பாளர் திரு.சாந்த குமார மீகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பிரதமர் ஊடக பிரிவு

No comments

Powered by Blogger.