Header Ads



கொழும்பில் டெல்டா கொரோனா, அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவுகிறது - Dr சந்திம ஜீவந்தர


நாட்டில் சமூகத்தினுள் டெல்டா கொவிட் திரிபு எந்தளவு வேகத்தில் பரவிவருகிறது என்பது தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக தெரிவித்துள்ளார். 

ஜூலை மாதத்தில் டெல்டா பரவல் தொடர்பான புள்ளிவிரத்தைக் காட்டும் வரைபை தனது ட்விட்டர் பதிவில் இணைத்துள்ள கலாநிதி சந்திமஜீவந்தர, தற்போது கொழும்பு நகரத்தினுள் டெல்டா கொவிட் திரிபு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பரவிவருவதாக தெரிவித்துள்ளார்.

ஜூலை முதல் வாரத்தில் கொழும்பில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 75 சதவீதத்துக்கும் அதிகமானோரின் மாதிரிகளில் அல்பா திரிபு கண்டறியப்பட்டிருந்ததுடன், 19.3 சதவீதமானோரிடையே டெல்டா திரிபு கண்டறிப்பட்டது. 

எனினும், ஜூலை 31 ஆம்திகதியாகும்போது, இந்த நிலைமை தலைகீழாக மாற்றமடைந்துள்ளதை ட்விட்டர் பதிவின் ஊடாக அவதானிக்க முடிகிறது.

நாட்டில் கொவிட் தொற்று நிலைமை மற்றும் பரவல் தொடர்பில் நம்பத்தகுந்த தகவல்களை வெளியிடும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரின் வெளிப்படுத்தலுக்கமைய, ஜூலை 31 ஆம் திகதிய நிலைமையின்படி, கொழும்பில் கொவிட் தொற்று உறுதியான 90 சதவீதத்துக்கு அதிகமானோரின் மாதிரிகளில் டெல்டா திரிபு கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயமானது மிகுந்த அவதானம் செலுத்த வேண்டியதொரு பாரதூரமான நிலைமையாகும் கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.


No comments

Powered by Blogger.