Header Ads



மன விரக்தியடைந்தவர் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டம்


- எம்.றொசாந்த்  -

வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் காவலாளியான இராதாகிருஷ்ணன் சிவகுமார் என்பவர், பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இன்று (02)  ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

“நிரந்தர ஊழியரான என்னை, 2015ஆம் ஆண்டு பணி இடைநீக்கம் செய்தனர். 15 மாதங்களின் பின்னர் விசாரணைகள் எதுவுமின்றி, என்னை மீண்டும் வேலையில் இணைத்தனர்.

“அதன் பின்னர் நான் மது போதையில் கடமையில் இருந்ததாகக் கூறி, 2018ஆம் ஆண்டு மீண்டு வேலையில் இருந்து பணிநீக்கம் செய்தனர்.

“இது தொடர்பாக நான் பிரதேச சபையுடன் முரண்பட்ட போது,  வட்டுக்கோட்டை பொலிஸார் என்னை அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். அதன்பின்னர் பொலிஸார் என்னை நீதிமன்றத்தை நாடுமாறு கூறினர்.

“நான், நீதிமன்றத்தை நாடிய போதும் பிரதேச சபை நீதிமன்றத்துக்கு சரியான முறையில் சமுகமளிப்பதில்லை. இதனால் நான், பிரதேச சபையின் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்கள் அல்லது சட்டத்தரணிகள் அல்லது சமாதான நீதவான் முன்னிலையில் எனது பிரச்சினைகளை விசாரணை செய்யுமாறு கூறினேன். ஆனால், பிரதேசசபை அந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

“2018ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மூன்று வருடங்கள் நான் விசாரணைகள் எதுவுமில்லாமல் வேலையும் இல்லாத நிலையில் இருக்கின்றேன்.

“இந்த நிலையில் மன விரக்தியடைந்த நான், எனக்கான நீதியை வேண்டி, பிரதேச சபையின் முன்னால் சவப்பெட்டியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்

No comments

Powered by Blogger.