August 19, 2021

திருகோணமலையிலும், ஓட்டமாவடியின் மற்றுமொரு பகுதியிலும் கொரோனா உடல்களை அடக்கம்செய்வது பற்றி ஆராய்வு


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சூடுபத்தினசேனையில் கொரோனாவினால் மரணமடைவோரின் உடல்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்நோக்கப்படுகின்ற காணிப் பற்றாக்குறை தொடர்பாகவும், உடல்களை அடக்கம் செய்யும் நடவடிக்கைகளை வேறு மாவட்டங்களுக்கு மாற்றம் செய்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காகவும்  நாவலடி இராணுவ முகாமில் விஷேட சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜயசூரிய, 23வது படைப்பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதித் தவிசாளர் ஏ.ஜீ.எம்.அமீர் ஆசிரியர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.எச்.எம்.தாரிக், பிரதேச சபை உறுப்பினர்கள், கல்குடா உலமா சபையின் பிரிதிநிதிகள், பள்ளிவாயல் நிர்வாகிகள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர்கள், ஏறாவூர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள், முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனப் பிரிதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இவ்விசேட கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.

தற்போது கொரோனாவினால் மரணமடைவோரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தினால் ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கர் காணியில் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலையுள்ளதால் கொவிட் காரணமாக மரணமடைவோரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக வேறு மாவட்டங்களை அல்லது பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பில்லாமல் மரணமடைந்தோரின் சடலங்களை நீதிமன்ற கட்டளைக்கமைய இங்கு அடக்கம் செய்ய கொண்டு வருவதைத் தவிர்த்து, அவற்றை வேறு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென அங்கு வலியுறுத்தப்பட்டது.

மேற்படி விடயங்கள் அனைத்தும் விரிவாக ஆராயப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி கருத்துத் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில் கொவிட் பாதிப்பில் மரணமடைவோரின் உடல்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

கொவிட் பாதிப்பில்லாமல் மரணமடைவோரின் உடல்களை இங்கு அடக்கம் செய்ய கொண்டு வராது அவற்றை வேறு பொருத்தமான இடங்களில் அடக்கம் செய்வதற்கான கோரிக்கையினை அதனுடன் சம்பந்தப்பட்ட உரிய தரப்பினருக்கு தாம் உடனடியாக அறிவிப்பதாக அவர் உறுதியளித்தார்.

சூடுபத்தினசேனை பிரதேசத்தில் கொரோனாவினால் மரணமடைவோரின் சடலங்களை அடக்கம் செய்யும் அடக்கஸ்தலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 12 ஏக்கர் பாதுகாப்பு வலயம் காணிகளைத் தவிர, ஏனைய காணிகளில் விவசாய நடவடிக்கைகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மக்கள் மேற்கொள்வதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜயசூரிய குறிப்பிட்டார்.

நாடு கொவிட் பாதிப்பினால் மிக நெருக்கடியான சூழ்நிலையில் சிக்கியுள்ளதனால், இந்த நிலையிலிருந்து நாட்டையும், மக்களையும் மீட்டெடுக்கும் தேசியத் திட்டத்திற்கான மகத்தான பங்களிப்பை வழங்கும் பொருட்டு திருகோணமலையில் அடையாளம் காணப்பட்டுள்ள இடத்தில் கொரோனாவினால் மரணமடைவோரின் உடல்களை அடக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வது எனவும், மாற்று இடத்தில் காணிக்கான அனுமதி கிடைக்கும் வரை தற்போதுள்ள பாதுகாப்பு வலயமாகவுள்ள பிரதேசத்தில் சிறிதளவான காணியில் நல்லடக்கம் செய்வதற்கு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலாளரிடம் அங்கீகாரம் பெறுவதெனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

-எஸ்.எம்.எம்.முர்ஷித்-

1 கருத்துரைகள்:

Allahuma Agfirlahum varhamhum

Post a Comment