Header Ads



யெமன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக, ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் நியமனம்


ஓமான் நாட்டுக்கான தற்போதைய இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் யெமன் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராகவும் நியமிக்கப் பட்டுள்ளார். 

இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள் இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோதாபாய ராஜபக்ஸ அவர்களால் வழங்கப்பட்ட தனது உத்தியோகபூர்வ நியமன ஆவணங்களை யெமன் நாட்டு ஜனாதிபதி அப்துல் றப்புஹ் மன்சூர் அல்ஹாதி அவர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளித்தார். சவூதி அரேபியாவின் தலைநகர் றியாதில் அமைந்துள்ள யெமன் நாட்டு ஜனாதிபதியின் தற்காலிக  அரச மாளிகையில் இடம் பெற்ற இந்த இராஜரீக வைபவத்தில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் தனது பாரியார் அஸ்மியா அமீர் அஜ்வத் சகிதம் கலந்து கொண்டார். அவுஸ்திரேலியா, நியூசீலாந்து, இந்தோனேசியா, துருக்கி மற்றும் மொரிடானியா ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களும் தங்களின் நியமன ஆவணங்களை ஜனாதிபதி அல் ஹாதியிடம் இவ்வைபவத்தின் போது கையளித்தனர். 

இந்நிகழ்வில் யெமன் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மட் அவாட் பின் முபாரக், ஜனாதிபதி உபசரிப்புத் தலமை அதிகாரி முஹம்மத்  ஹஜ் மஹ்பூத் மற்றும் யெமன் அரச உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

யெமன் நாட்டு ஜனாதிபதி அல்ஹாதி அவர்களைப் பிரத்தியேகமாகச் சந்தித்து உரையாடிய இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத், ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் வாழ்த்துச் செய்திகளை யெமன் நாட்டு ஜனாதிபதிக்கு தெரிவித்ததுடன் இலங்கைக்கும் யெமனுக்குமிடையில் வரலாற்றில் மிக நீண்ட காலமாக நிலவிவரும் உறவுகளை மேம்படுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். 

யெமன் நாட்டுக்கான இலங்கையின் புதிய தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை வரவேற்ற யெமன் ஜனாதிபதி அல்ஹாதி அவர்கள் இருதரப்பு உறவுகளை மேலும் வளர்ப்பதில் தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தூதூவரின் பணிகள் வெற்றிகரமாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். 

இவ்வைபவத்தின் போது, இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் யெமன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் அஹ்மட் அவாட் பின் முபாரக் மற்றும் யெமன் குடியரசின் ஆலோசனை சபைத் தலைவர் Dr. அஹ்மத் உபைத் அவர்களையும் சந்தித்து இருதரப்பு உறவுகளை மேலும் ஊக்குவிப்பது தொடர்பில் கலந்துரையாடினார். 

தூதுவர் அமீர் அஜ்வத் ஓமானுக்கான இலங்கைத் தூதுவராக நியமனம் பெற முன்னர் சிங்கப்பூர் மற்றும் புரூணை தாருஸ்ஸலாம் ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பதில் உயர் ஸ்தானகராகவும் இலங்கை வெளி விவகார அமைச்சின் கிழக்காசிய மற்றும் பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றினார். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை நிரந்தர வதிவிடத் தூதரகத்தின் மனித உரிமை விவகாரங்களுக்கான ஆலோசகராகவும் மற்றும் ஐ. நா. மனித உரிமை கவுன்சிலில் உள்ள (UN Human Rights Council) ஆசிய நாடுகள் குழுவின் மனித உரிமை விவகாரங்களுக்கான பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார். சவூதி அரேபியாவின் றியாதில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் இந்தியாவின் சென்னையிலுள்ள இலங்கைத் துனண உயர் ஸ்தானிகராலயத்திலும் இவர் உயர் இராஜதந்திர பதவிகளை வகித்துள்ளார். 

இலங்கை வெளிநாட்டு சேவையின் மூத்த இராஜதந்திரியான இவர் இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைப்பட்டதாரியும் (BA), கொழும்புப் பல்கலைக்கழகத்தில் சட்டமானி  (LLB) மற்றும் சட்ட முதுமானி(LL.M) பட்டங்களையும் பெற்றுள்ளார். தூதுவர் அமீர்அஜ்வத் அவர்கள் இலங்கை உயர் நீதிமன்றத்தின் சட்டத்தரணியும் மற்றும் நளீமியாவின் பட்டதாரியுமாவார்.  தகவல் :  மனாஸ் ஹுசைன் 

No comments

Powered by Blogger.