Header Ads



ஏகப்பட்ட 'ஹிசாலினிகளும்' பேசப்படாத சங்கதிகளும்


இந்தக் கட்டுரையை எங்கிருந்து, எவ்விதம் ஆரம்பிப்பது எனப் புரியவில்லை. எவ்வாறிருப்பினும், ஹிசாலினி என்ற இளம் மொட்டு தீயில் கருகிய விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை வலியுறுத்துகின்ற அதேநேரத்தில். பொதுவெளியில் பேசப்படாத விடயங்களை இன்னுமொரு கோணத்தில் நோக்க இக்கட்டுரை விளைகின்றது.  கடந்த சில வருடங்களாக தனக்கான நீதியைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் றிசாட் பதியுதீன் என்ற முஸ்லிம் அரசியல் தலைவர் ஒருவரது குடும்பத்துடனும், வாழ்க்கையைத் தேடி கொழும்புக்குப் போன ஒரு ஏழைப் பெண் பிள்ளையின் மரணத்திற்கும் இடையிலான ஒரு விவகாரமாக ஹிசாலினியி;ன் மரணம் மாறியிருக்கின்றது. 

ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும். யார் செய்தாலும் பிழை பிழைதான் என்ற அடிப்படையில், அவரை சிதைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். றிசாட் எம்.பி.யின் வீட்டில் அது நடந்திருந்தாலும் அதற்கு முன்னரே கசக்கப்பட்டிருந்தாலும் எல்லாக் கயவர்களும் சட்டத்தின் பிடிக்குள் இறுக்கப்பட வேண்டும். அதுபோல, நாட்டிலுள்ள எல்லா 'ஹிசாலினிகளுக்கும்' நீதி நிலைநாட்டப்பட வேண்டும். பகுத்தறிவுள்ள, தங்களது குடும்பத்திலும் பெண்பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்ற உணர்வுள்ள எந்த ஒரு நபருக்கும் இதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு 'அநியாயம்' என்று வருகின்ற போது, அதற்கு மதமோ அல்லது இனமோ தடையாக இருக்க முடியாது. எனவே, ஹிசாலினி விடயத்தில் எல்லா சமூகங்களுக்கும் பாரிய பொறுப்பிருக்கின்றது என்பதை கவனிக்க வேண்டும். 

அந்த வகையில், ஹிசாலினிக்கு நீதி வேண்டும் என்பதற்காக அரசியல்வாதிகளும் சமூக செயற்பாட்டாளர்களும் இயக்கங்களும் குரல் எழுப்புகின்றமை வரவேற்கத்தக்கதே. ஒரு ஏழை யுவதிக்காக இன்று நாடே குரல் கொடுப்பது சிறப்பானது. ஆனாhலும், இந்த விடயம் அளவுக்கதிகமாக ஊதிப் பெருப்பிக்கப்பட்டுள்ளதாகவும், பக்குவமற்ற விதத்தில் கையாளப்படுவதாகவும் தோன்றுகின்றது. இந்த சந்தப்பத்தைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடுவதற்கும், பகடைக்காயாக ஹிசாலினி விவகாரத்தை பயன்படுத்துவதற்கும் யாராவது முனைகின்றார்களா? இதனால் இரு இனங்களுக்கான உறவில் கீறல் விழுந்து விடுமா? என்ற சந்தேகம் ஏற்படத் தொடங்கியுள்ளது. 

16 வயதேயான ஒரு பிள்ளையின் மரணத்தின் மீது நீதியை வலியுறுத்துவது எல்லோரது தார்மீகக் கடமையாகும். அதைச் செய்யாவிட்டால், நாளை இது நமது பிள்ளைகளுக்கும், சகோதரிகளுக்கும் நடக்கலாம்;. கற்பழிப்பு, கருக்கலைப்புக்கள், தற்கொலைகள் என நிறைய அவலங்களைச் சந்திக்க நேரிடலாம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், இலங்கையில் ஒரு யுவதி அல்லது சிறுமி இவ்விதம் இறப்பது இதுவே முதற் தடவையல்ல. கற்பளிப்பும், பாலியல் வன்புணர்வு, பாலியல் சுரண்டல்கள் இடம்பெறுவதும் புதியதல்ல. ஏன் கூட்டு வன்புணர்வுகளும் நாட்டில் சகஜமாகிக் கொண்டு வருகின்றது. ஆயினும், அதற்கெல்லாம் நடக்காத அளவுக்கு பெருவீச்சிலான ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் நீதிக் கோரிக்கைகளும் இந்த விவகாரத்தில் மட்டும் எழுவது தற்செயலானதுதானா? என்ற கேள்வி நியாயமாக சிந்திப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.  

தடுப்புக்காவலில் உள்ள றிசாட் பதியுதீன் எம்.பி.யின் வீட்டில் பணிபுரிந்த ஹிசாலினி உடலில் தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் ஆரம்பத்தில் சில நாட்களாக பெரிய அளவில் பேசப்படவில்லை. அவர் மரணிப்பதற்கு முன்னர் 'தானே தற்கொலை செய்து கொண்டதாக' கூறியதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.  இந்நிலையில், அவர் சிறுமியாக இருக்கும் போது பணிக்கு இணைத்துக் கொள்ளப்பட்டமை தவறு என்ற கோணத்திலேயே இவ்விவகாரம் ஆரம்பத்தில் சூடுபிடிக்கத் தொடங்கியது, பின்னர் 16 வயதாகிய பின்னரே பணிக்கு வந்ததாக தெரியவந்தது, 

அதன்பிறகு பின்னர் ஹிசாலினியை றிசாட்டின் வீட்டார் தாக்கியதாகவும் அவரது தாயார் றிசாட்டின் மனைவியுடன் இதுபற்றிப் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆதன் பின்னரே அவருக்கு அங்கு எதுவோ நடந்திருக்கின்றது என்ற கோணத்தில் போராட்டங்கள் வலுவடைந்தன.  ஹிசாலினி விவகாரத்தில் றிசாட் பதியுதீனின் குடும்பம் தவறு செய்திருந்தால் அந்த வழக்கில் இருந்து எவ்வகையிலும் அவர்களால் தப்பிக்க முடியாது என்பதை நாடே அறியும். தனக்காகவே நீதியைப் பெற்றுக் கொள்ள முடியாமல் மாதக் கணக்காக ஓடிக் கொண்டிருக்கும் றிசாட்டினால் ஹிசாலினிக்கு எதிராக நீதியைத் திருப்பிவிட முடியாது. அதற்கு அரசாங்கம் விடவும் மாட்டாது.  இந்த யதார்த்தங்கள் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் இவ்விவகாரம் இன்று கையாளப்படும் விதமும் இதற்காக கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகத்தையே மீண்டும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பாங்கிலான விமர்சனங்களும் முஸ்லிம்களுக்கு ஒருவித மனக் கிலேசத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. 

அதேபோன்று மரண விசாரணையில் சந்தேகம் இருப்பதாக கூறுவதற்கு பெற்றோருக்கு உரிமையுண்டு, ஆனால், 'முஸ்லிம் வைத்தியர் என்பதால் சந்தேகம்' என்ற பாங்கில் கூறுவது டாக்டர் ஷாபி விவகாரத்தை நினைவுபடுத்துவதாகவும் அமைந்துள்ளது. இந்தப் பின்னணியில், ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று எண்ணுகின்ற மக்களது உணர்வுகள் வேறு நோக்கங்களுக்கான, அரசியல் காரணங்களுக்காக சூட்சுமமான முறையில் பயன்படுத்துகின்றதா என்ற சந்தேகம் எழாமல் இல்லை.  அதற்காக ஹிசாலினிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அழுத்தங்களையும் நீதிக்கான போராட்டங்களையும் இக்கட்டுரை கேலிக்குள்ளாக்கவில்லை. மாறாக, இத்தனை காலமும் நடந்த நூற்றுக்கணக்கான சம்பங்களை விட வேறுவிதமாக இவ்விவகாரம் கையாளப்படுவது சந்தேகங்களை உண்டுபண்ணுகின்றது. 

இலங்கையில் 45 ஆயிரம் சிறுவர் தொழிலாளர்கள் உள்ளனர். சிறுவர் விடுதிகள் மாத்திரம் 13000 உள்ளன. இந்நிலையில் சிறுவர், சிறுமியர் துஷ்பிரயோகங்கள், பெண்கள் மற்றும் ஆண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் இடம்பெறுவதும் புதிதல்ல. பாடசாலை மாணவிகள் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவங்கள், குடும்பத்திற்குள் துஷ்பிரயோகம் இடம்பெற்ற சம்பவங்களை நாம் பல தடைவ கேள்விப்பட்டுள்ளோம். ஏன் சொந்த மகளை தாயாக்கிய ஒருசில தந்தைகளையும், புனிதஸ்தலங்களில் கூட பாலியல் சீண்டல் செய்த கயவர்களையும் கண்டிருக்கின்றோம். அதுபோல, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட வித்தியாக்கள், வெளிநாடுகளில் நீதி மறுக்கப்பட்ட றிசானாக்கள், சீருடைதாரிகளால் சிதைக்கப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமிகள், என ஏராளமான கண்ணீர்க் கதைகள் இருக்கின்றன. 

ஏன், ஹிசாலினி விவகாரத்திற்குப் பிறகு கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் இலங்கையில் பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் உச்சக்கட்டமாக மலையகத்தில் 13 வயது சிறுமி ஒருவர் பலரால் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளார்.  வீட்டுப் பணிப் பெண்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அவலங்கள் நடப்பதில்லை. மாறாக. சொந்த வீடுகளில், பக்கத்து வீடுகளிலும்; இது நடக்கின்றது. பல்தேசியக் கம்பனிகள், நிறுவனங்களில் கூட நடக்கின்றது. இவற்றுள் பெரும்பாலான சம்பவங்கள் வெளி வருவதில்லை என்பதே யதார்த்தமாகும்.  

இன்று ஹிசாலினிக்காக குரல் கொடுப்பது சிறப்பானதே. ஆனால், இவ்வளவு காலமும் இந்த பாலியல் அத்துமீறல்களை தடுக்க இலங்கைச் சமூகமாக நாம் எல்லோரும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றோம் என்ற கேள்வியை எமக்குள் எழுப்ப வேண்டியுள்ளது. இன்று மலையக சிறுமிக்காக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள், அச்சிறுமிகள் ஏன் சிறுவயதில் தொழிலுக்குப் போகின்றார்கள் என்பதை அறிந்து அதற்கான திட்டங்களை வகுத்திருக்கின்றார்களா? எதுவுமே இல்லை. இந்த தருணத்திலாவது அதற்கான திட்டங்களை மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்கமும் முன்வைக்க வேண்டும். 

மாறாக, ஒரு குறிப்பிட்ட காலத்தில் கதைத்து விட்டு மறந்து விடக் கூடாது. உதாரணமாக, ஹிசாலினி விவகாரத்திற்கு முன்னர், பெரிய புள்ளிகளுடன் தொடர்புபட்ட 15 வயது சிறுமி இணையத்தில் விற்ற விவகாரம் இப்போது அடங்கிப் போயிருக்கின்றமை கவனிப்பிற்குரியது.  உண்மையில், ஹிசாலினி என்ற 16 வயதுப் பெண் பிள்ளைக்கு அநியாயம் நடந்திருக்கின்றது. இவ் விடயத்தில் இரு தரப்புக்கள் உள்ளனவே தவிர முஸ்லிம்கள், தமிழர்கள் என்று இதனைப் பார்க்க வேண்டியதில்லை. ஆனால், இதனை மையமாக வைத்து முஸ்லிம் சமூகத்தையும்,  இஸ்லாமிய மார்க்கத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் பாங்கிலான நடவடிக்கைகள் முகம் சுழிக்கச் செய்வதாக அமைந்துள்ளன.

இன்னும் நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையில் நீதி விசாரணைகள் குறித்த ஆயிரம் கேள்விகள் இருந்தாலும், நீதித்துறையை நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. யதார்த்தம் இப்படியிருக்க, சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி சில ஊடகங்களிலும் றிசாட் குடும்பம் பற்றியும் ஹிசாலினி பற்றியும் பரஸ்பரம் அடிப்படையற்ற அபத்தமான கதைகள் உலாவருகின்றன. இவை தவிர்க்கப்பட வேண்டியவை.  அதற்காக, றிசாட் வீட்டில் 'எதுவுமே நடக்கவில்லை' என்றோ அல்லது 'ஹிசாலினி தரப்பில் தவறுகள் இல்லை' என்றோ இக் கட்டுரை வாதாட வரவில்லை. யாரையும் 'நல்லவர்' 'கெட்டவர்' என முத்திரை குத்துவது நமது நோக்கமும் அல்ல. 

மாறாக, இந்த விவகாரத்தை இன்னும் புத்திசாலித்தனமாக கையாள வேண்டும். இதனை அடிப்படையாக வைத்து தமிழ்-முஸ்லிம் சமூகங்களிடையே மனக் கசப்பு ஏற்பட வழிவகுத்துவிடக் கூடாது என்பதையே வலியுறுத்துகின்றது. ஆகவே எல்லா ஹிசாலினிகள், வித்தியாக்கள், கிருஷாந்திகள், றிசானாக்களுக்காகவும் நீதி கிடைப்பதற்கு எல்லோரும் தொடர்ச்சியாக போராட வேண்டும். அதுபோல, மலையக சிறுவர்கள் உள்ளடங்கலாக நாடெங்கும் வறுமையில் வாடும் குடும்பங்கள் விடயத்தில் 'பழி' சொல்வதற்கு முன்னதாக அவர்கள் வாழ்வதற்கு 'வழி' சொல்லும் திட்டங்களையும் உருவாக்கவேண்டியுள்ளது.  வெறும் கோஷங்கள், ஆர்ப்பாட்டங்களோடு இதனை மறந்து விட்டால், எதிர்காலத்தில் இன்னும் பல ஹிசாலினிகளுக்காக நாம் ஒப்பாரி வைக்க வேண்டிய நிலைமை உருவாகலாம்;. 

ஏ.எல்.நிப்றாஸ் 

3 comments:

  1. Well said brother. May Allah Bless you.

    ReplyDelete
  2. இது என்ன அநியாயம். குருடன் யானையைப்பற்றி வர்ணிப்பது போன்ற ஒரு கட்டுரையை இந்த இணையத்தளம் வெளியிடுவது அதற்கு இழுக்கக்காதா.
    பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்த நூற்றாண்டின் மனித அவலம் என்பதில் மாற்றுக்கருத்துக்கிடமில்லை. ஆனால் குருட்டுத்தனமாக எதையும் உளறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    இக்கால கட்டத்தில் ஒரு மனிதனின் செயற்பாடுகளைக் கண்டறிய தொலைபேசி இலக்கம் மற்றும், ஐபீ முகவரி என்பவற்றைப் பரிசீலித்தாலே போதுமானதாகும். அது பற்றிய எந்தவித அறிக்கையுமின்றி இப்படி கதையளப்பதை குருட்டுத்தனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்ருதான் சொல்வது.

    ReplyDelete

Powered by Blogger.