Header Ads



தனது நியாயத்தை தெரிவிக்க, பாராளுமன்றத்தில் றிசாத்திற்கு இடையூறு - பேச இடமளிக்க சபாநாயகரும் மறுப்பு


தனக்கெதிராக மேற்கொண்டுவரும் விசாரணை தொடர்பாக சபையில் தெரிவிக்க முற்பட்ட ரிஷாத் பதியுதீனுக்கு சபையில் ஆளும் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சபாநாயகரும் ஆளும் தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.

பாராளுமன்றத்தில் நேற்று -17- இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொற்று (கொவிட்19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ரிஷாத் பதியுதீன், எந்த குற்றச்சாட்டு இல்லாமல் நான் கடந்த 116 நாட்களாக தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றேன். 

இதுதொடர்பாக ஜனாதிபதி சபையில் இருக்கும்போது நான் தெரிவித்த பின்னர் விரைவாக என்னை கோட்டை நீதிமன்றில் ஆஜர்படுத்தி, தற்போது சிறையில் அடைத்திருக்கின்றார்கள்.

அத்துடன் எனது வீட்டில் பணிபுரிந்துவந்த ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சோடித்து தெரிவிக்கப்பட்டதால் தற்போது எனது மனைவி, மனைவின் தாய், தந்தை மற்றும் சகோதரன் சிறையில் இருக்கின்றார்கள். 

எனது மைத்துனர், 5 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக தெரிவித்து பாலியல் குற்றச்சாட்டொன்றுக்காக சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார். 

இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ள மாத்தறை பொலிஸ் அதிகாரியான வருணி போகாவத்த என்பவரை நியமித்திருக்கின்றார்கள். இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரி தொடர்பில் ஏற்கனவே அக்குரஸ்ஸ பிரதேச சபை தலைவர் சிறுபிள்ளை ஒருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தினார் என்ற பொய் குற்றச்சாட்டுக்காக உயர் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறான பொலிஸ் அதிகாரியைத்தான் எனது வீட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமித்திருக்கின்றார்கள் என்றார்.

இதன்போது எழுந்த சபைமுதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன, நீதிமன்றில் விசாரிக்கப்பட்டுவரும் விடயங்களை சபையில் தெரிவிக்கவேண்டாம். 

பாராளுமன்றத்தின் கெளரவத்தை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செயற்படவேண்டும். அவ்வாறு தெரிவிப்பதாக இருந்தால். சபாநாயகரிடம் பூரண அனுமதி பெற்றே கதைக்கவேண்டும் என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த ஆளும் கட்சி பிரதம கொறடா ஜாேன்ஸ்டன் பெர்ணான்டோ, நீதிமன்றில் தெரிவிக்கவேண்டிய விடயங்களை சபையில் தெரிவிப்பதற்கு இடமளிக்க முடியாது. செய்வதெல்லாம் செய்துவிட்டு  நிரபராதிபோல் இங்கு கருத்து தெரிவிக்கின்றார். இதற்கு இடமளிக்கக் கூடாது என்றார்.

அதனைத்தொடர்ந்து எழுந்த எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல, ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 

பீ. அறிக்கை மாத்திரே சம்ர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது. பீ. அறிக்கை தொடர்பாக சபையில் கதைக்க முடியும். இதற்கு முன்னாள் சபாநாயகர்கள் இடமளித்திருக்கின்றார்கள். அதனால் அவரது நியாயத்தை தெரிவிப்பதற்கு இடமளிக்கவேண்டும் என்றார்

என்றாலும் ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரித்ததால், சபாநாயகர், தற்போது அதற்கு இடமளிக்க நேரம் இல்லை. வேறு தினமொன்றில் கதைக்கலாம் என தெரிவித்து, ரிஷாத் பதியுதீனுக்கு பேசுவதற்கு இடமளிக்க மறுத்துவிட்டார்.

ரிஷாத் பதியுதீன் கடந்த பாராளுமன்ற அமர்வின்போதும் தனது நியாயத்தை தெரிவிப்பதற்கு முற்பட்டபோதும் ஆளும் தரப்பினரின் எதிர்ப்பு காரணமாக சபாநாயகர் அவருக்கு தொடர்ந்து பேசுவதற்கு இடமளிக்க மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 (வீரகேசரி)

No comments

Powered by Blogger.