Header Ads



முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பிய, முற்போக்கு அரசியல் தலைமையை இழந்திருக்கிறோம்


மிகவும் நெருக்கடியான கால கட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷை மற்றும் உரிமைகளுக்காக ஓங்கி குரல் எழுப்பி வந்த இனவாதமற்ற முற்போக்கு
சிந்தனை கொண்ட அரசியல் தலைமையொன்றை இழந்திருப்பது பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் நீண்ட நெடிய அரசியல் பரம்பரைப் பின்னணியைக் கொண்டவர். படித்தவர், பண்பானவர், வேஷம் போடாத நாட்டுப்பற்றாளர், அரசியல் வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடித்து வந்த முன்மாதிரியான ஓர் அரசியல் தலைவர், சிறுபான்மையினரை அரவணைக்கும் மன வலிமை பெற்றிருந்தவர். அதனால் பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு மத்தியிலும் சிறுபான்மையினரின் அபிலாஷைகளை மதித்து, அவர்களது உரிமைகளுக்காக எப்போதும் குரல் எழுப்பி வந்துள்ளார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு, 1994ஆம் ஆண்டு தொடக்கம் தொலைத்தொடர்பு, நகர அபிவிருத்தி, நிர்மாணம், பொது வசதிகள், துறைமுழக்கம், கப்பல்துறை, வெளி விவகாரம், ஊடகம், நிதி அமைச்சு என்று பல்வேறு முக்கிய அமைச்சுப் பதவிகளை வகித்து, நாட்டுக்கு உன்னத சேவையாற்றிய மங்கள சமரவீர அவர்கள், எப்போதுமே தேசிய ஐக்கியம், இன ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமையளித்து செயற்பட்டு வந்துள்ளார். 

நாட்டில் பேரினவாதம் தலைவிரித்தாடிய சூழ்நிலைகளின்போது முஸ்லிம்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்காக அவரது குரல் ஓங்கி ஒலித்திருந்தது. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்கள் மீது பேரின வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தபோது அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அவர் முன்னின்றார்.

அதன் பின்னர் கொவிட்-19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டபோது முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுக்கு மதிப்பளித்து, அரசாங்க உயர்மட்டத்தினரையும் பேரினவாத அரக்கர்களையும் எதிர்த்து, ஜனாஸா நல்லடக்கத்திற்காக ஓங்கி குரல் கொடுத்திருந்தார். கொவிட் தொற்றினால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டு, முஸ்லிம் குழந்தையொன்று எரிக்கப்பட்டபோது எமது சமூகத்தினருடன் சேர்ந்து அவரும் அழுதார். ஜனாஸா எரிப்புக்கெதிரான போராட்டங்களுக்கும் ஆதரவு வழங்கியிருந்தார். 

தவிரவும், அவர் வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்திருந்த காலப்பகுதிகளில் கிடைக்கப் பெற்றிருந்த வெளிநாட்டு இராஜதந்திர தொடர்புகளைப் பயன்படுத்தி, ஜனாஸா எரிப்புக்கெதிராக சர்வதேசத்தின் அழுத்தங்களை குவிக்கச் செய்திருந்தார். இதனால் இனவாதிகளினால் இவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தார்.

நாட்டில் இனவாதம் மேலோங்கியிருக்கின்ற இன்றைய அரசியல் கலாசாரத்தில் வெறுப்பும் விரக்தியுமுற்று அண்மைக்காலமாக கட்சி அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் கூட முஸ்லிம்களுக்கான ஆதரவை ஊடகங்கள் வாயிலாக அவர் வெளிப்படுத்தத் தவறவில்லை.

இவ்வாறு முஸ்லிம் சமூகத்தின் நலன்களில் மிகவும் கரிசனையுடன் செயற்பட்ட இனவாதம், மதவாதமற்ற மங்கள் சமரவீர அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்திருப்பதானது பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவரது திடீர் மறைவு எம்மால் ஜீரணிக்க முடியாத ஒரு துன்பியல் நிகழ்வாக நோக்கப்படுகிறது. நாடு ஒரு சிறந்த தலைவரை இழந்திருக்கிறது. அது எமது சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரது ஆத்மா சாந்தியட்டும். அவரது பிரிவால் துயருற்றிருக்கும், அத்தனை உள்ளங்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Aslam S.Moulana

2 comments:

  1. இந்த நாட்டில் எஞ்சி இருந்த மனித சிங்கள அரசியல் வாதிகளையும் இந்த நாடு இழப்பது இனி வரும் காலத்தில் இலங்கையில் மிருகங்கள் ஆட்சி செய்யுமோ?

    ReplyDelete
  2. Oru Muslim awadhu Dhauwa saidhu hidhayath kudukka ninaikkawillaye.

    ReplyDelete

Powered by Blogger.