Header Ads



பார்சிலோனா அணியை விட்டு விலகவேண்டும் என்று சொல்லப்பட்டபோது, என் ரத்தமே உறைந்தது போலிருந்தது - மெஸ்ஸி கண்ணீரோடு வெளியேறினார்


அர்ஜெண்டினா கால்பந்தாட்ட வீரரான லயோனல் மெஸ்ஸி சுமார் 20 ஆண்டு காலம் இணைந்து பயணித்த பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பில் இருந்து கண்ணீரோடு விடைபெற்றார்.

பார்சிலோனா கிளப் அணியில் தொடர்வதற்கு தன்னால் ஆன அனைத்தையும் செய்ததாக ஸ்பெயின் நாட்டின், பார்சிலோனா நகரின் கேம்ப் நௌ ஸ்டேடியத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

நிதி நெருக்கடியில் தள்ளாடிவரும் பார்சினோனா கிளப், தங்கள் அணி வீரர்களுக்கான சம்பள உச்சவரப்பை வெகுவாகக் குறைத்துவிட்டது. அதற்கு உட்பட்டு மெஸ்ஸியுடன் புதிய ஒப்பந்தத்தை போட முடியவில்லை என்பதால் அவரை தக்கவைத்துக்கொள்ள முடியாது என்று அந்த கிளப் நிர்வாகம் வியாழக்கிழமை அறிவித்தது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பிரிவுபசார நிகழ்வில் அவர் கண்ணீரோடு பேசியபோது அவரது குடும்பத்தினர், நண்பர்கள் சிலர் அங்கே இருந்தனர்.

ஏன் அவர் பார்சிலோனா கிளப்பிலேயே இருக்கக்கூடாது என்று கேட்கப்பட்டபோது, கிளப் பெரிய கடனில் சிக்கியிருப்பதாக தலைவர் தெரிவித்தார். எனவே தொடர்ந்து அங்கேயே இருந்து சம்பளம் வாங்குவது சிக்கலை அதிகரிக்கும். எனவே அது சாத்தியமில்லை என்று அவர் கூறினார்.

"நான் பார்சிலோனா அணியை விட்டு விலகவேண்டும் என்று சொல்லப்பட்டபோது என் ரத்தமே குளிரில் உறைந்தது போலிருந்தது. அதை ஏற்றுக்கொள்வது இப்போதுவரை கடினமாக இருக்கிறது. வீட்டுக்குப் போனபிறகும் நான் மோசமாகவே உணர்வேன்" என்றார் மெஸ்ஸி.

தமது வாழ்வின் மிகக் கடினமான கட்டம் இது என்று கூறிய அவர், புதிய அத்தியாயம் இனி தொடங்கும் என்றும் கூறினார்.

அடுத்து எங்கே போகிறார்?

பார்சிலோனா அணியுடனான மெஸ்ஸியின் வரலாற்று உறவு முடிவுக்கு வருகிற நிலையில் அவர் அடுத்து எந்த அணிக்கு போகப் போகிறார் என்ற கேள்வி ஆர்வத்தோடு எழுப்பப்படுகிறது.

செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து அவர் நேரடியாக எதையும் கூறவில்லை.

ஆனால், அவர் பார்சிலோனாவின் எதிராளி அணியான பி.எஸ்.ஜி. அணியுடன் இணையப் போவதாக பேச்சுகள் அடிபட்டுக்கொண்டே இருக்கின்றன. இது பற்றி அவரிடம் கேட்டபோது, அதற்கு சாத்தியம் இருப்பதாக கூறினார் மெஸ்ஸி. ஆனால், இதுவரை எவருடனும் ஒப்பந்தம் இறுதியாகவில்லை என்று கூறிய அவர், தமது விலகல் குறித்த செய்தி வெளியானதில் இருந்து பலர் தம்மை தொடர்புகொண்டு பேசியிருப்பதாகக் கூறினார்.

மீண்டும் வருவேன்

"நல்லவிதமான காலங்களும் இருந்தன. மோசமான காலங்களும் இருந்தன. ஆனால், ஆட்கள் காட்டிய அன்பு எப்போதும் ஒன்றாகவே இருந்தது. மீண்டும் பார்சிலோனா கிளப்புக்கு எந்த நேரம் வேண்டுமானாலும் திரும்ப வர முடியும் என்று நம்புகிறேன். உலகத்திலேயே இந்த கிளப்தான் சிறந்ததாக திகழ்வதற்கு என்னால் முடிந்த சிலதை இந்த அணிக்கு கொண்டுவர முடியும் என்றும் நம்புகிறேன். பல விஷயங்களை கூற விரும்புகிறேன். ஆனால், இப்போது என்னால் இது மட்டுமே சொல்ல முடிகிறது. வேறு பேசுவதற்கு சொற்கள் வரவில்லை. எல்லோருக்கும் நன்றி" என்று கூறினார் அவர்.

சர்வதேசப் போட்டிகளில் அர்ஜெண்டினா அணி கேப்டனாகவும் ஆடுகிறார் மெஸ்ஸி .

No comments

Powered by Blogger.