Header Ads



மாற்றுத்திறனாளிகள் முகங்கொடுக்கும் சவால்கள் குறித்து, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் அவதானம்


மாற்றுத்திறனாளிகள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் அவர்களின் உரிமைகளை சட்டக் கட்டமைப்பின் கீழ் பலப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சுதர்ஷனி பர்னாந்துபுள்ளே தலைமையிலான பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.

ஒன்லைன் முறையின் கீழ் நடத்தப்பட்ட இந்தக் கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, கலாநிதி ஹரினி அமரசூரிய, மஞ்சுலா திஸாநாயக, டயனா கமகே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றிய செயலாளரும், பாராளுமன்ற பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, மாற்றுத்திறனாளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் பலவும் கலந்துகொண்டன.

தற்பொழுது நிலவும் கொவிட் சூழலுக்கு மத்தியில் அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற முக்கிய தீர்மானங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உரிய முறையில் மாற்றுத்திறனானிகளுடன் தொடர்பாடலுக்கு உட்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. மாற்றுத்திறனாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் தமது கவலைகள் மற்றும் தேவைகள் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர். மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளை சமூகத்துக்குள் உறுதிப்படுத்துவது, இதற்கான சட்டரீதியான கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு விரைவான நடவடிக்கைகளை எடுப்பதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான சமூகத்தின் அக்கறை மிகவும் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும், இதற்காக ஒன்றிணைந்து செயற்படுவது அனைவரினதும் பொறுப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இதற்கமைய இவ்விவகாரத்தை சகல பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்து எதிர்காலத்தில் சட்டக் கட்டமைப்பொன்றை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். அத்துடன், மாற்றுத்திறனாளிகளை இனிமேல் ஊனமுற்றவர்கள் எனக் குறிப்பிடக்கூடாது என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

No comments

Powered by Blogger.