Header Ads



முஸ்லிம்கள் பொதுச் சட்டத்தின் கீழும் திருமணம் செய்யலாம் - அலி சப்ரியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி


முஸ்லிம்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் கீழல்லாது, தங்களது திருமணத்தை பொது திருமண பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்துகொள்வதற்கு விரும்புவார்களாயின் அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு இவ்வாரம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதனடிப்படையில் முஸ்லிம்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தின் கீழ் அல்லாது பொது விவாக சட்டத்தின் கீழ் தங்களது விவாகங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு குடியியல் சட்டக்கோவை மற்றும் குடியியல் நடவடிக்கை முறை சட்டக்கோவையின் திருத்தங்களை செய்வதற்கு நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி இவ்வாரம் அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பித்திருந்தார். அவர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எமது நாட்டின் அரசியலமைப்பின் 12 ஆம் சரத்தின்படி, இனம், மதம்,மொழி,சாதி,பால் அரசியல் கொள்கைகள் அல்லது பிறப்பிடம் போன்ற காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காக பிரஜைகளை ஓரங்கட்டலாகாது என தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்றாலும் முஸ்லிம் சமூகத்தை ஆளும் முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தில் முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டும் சில ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதால் அவ்வாறான ஏற்பாடுகளை நீக்குவதற்கான அவசியத்தை பல்வேறு முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் மற்றும் சட்டத்துறை புத்திஜீவிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்த நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கை பிரஜைகளின் திருமணமும், விவாகரத்தும் நிர்வகிக்கப்படும் பொதுச் சட்டத்தின் கீழ் முஸ்லிம்களின் திருமணத்தையும், விவாகரத்தையும் நிர்வகிக்கும் மாற்று வழிகளை அவர்களுக்கு வழங்குவது சிறந்தது என நீதியமைச்சரினால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம்கள் திருமணப் பதிவு கட்‌டளைச் சட்டத்தின் பொது விவாக முறைமையின் கீழ் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புவார்களாயின் அவர்களுக்கு குறித்த கட்டளைச்சட்டத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் வகையில் குடியியல் சட்டக்கோவை மற்றும் குடியியல் நடைமுறைச் சட்டக்கோவையில் உள்வாங்கப்பட்டுள்ள திருமணம் தொடர்பான நடைமுறையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எனவே இத் திருத்தங்கள் சட்டமாக்கப்பட்டு அமுலுக்கு வந்ததன் பின்பு முஸ்லிம்கள் பொதுச் சட்டத்தின் கீழும் திருமணம் செய்து கொள்ள முடியும். -Vidivelli

5 comments:

  1. தற்போது நாட்டில் உள்ள மிக முக்கியமானதொரு பிரச்சினை எந்த சட்டத்தில் முஸ்லிம்கள் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது என நீதிஅமைச்சர் அவர்களுடைய கருத்தா அல்லது அவ்வாறு செயற்படுமாறு சக்திகள் அவர் தூண்டப்படுகின்றாரா என்பது பொது மக்களுக்கு இன்னமும் விளங்கவில்லை.

    ReplyDelete
  2. விரும்பியவர்கள் பொதுச்சட்டத்தின் கீழ் திருமணம் செய்யலாம் என்பது சிறந்த யோசனையே.

    ReplyDelete
  3. முஸ்லிம்களின் மிகமுக்கிய முதல்தர ஒரு பிரச்சினயை கண்டுபிடித்து விட்டார் இந்த அதிமேதகு அமைச்சர் . தட்டிக்கேட்டுவிட்டார் தலைவர் .முஸ்லிம்களுக்கு கிடைத்த மாபெரும் பொக்கிக்ஷம் இந்த தலைவர் .

    ReplyDelete
  4. அதுசரி இந்தப்பிரச்சினை ஏதாவதொரு முஸ்லிம் திருமணத்தில் வந்ததுண்டா இதுவரைக்கும் .

    ReplyDelete

Powered by Blogger.