July 06, 2021

உழ்ஹிய்யா சுன்னா, வறுமைக்குட்பட்டவர்களை காப்பாற்றுவது பர்ளு..!! (அடகுக் கடை முன், நிற்கும் உம்மத்து)


- இனாஸ் -

அடகுக் கடை முன்னால் உம்மத்தினர் வரிசையாக, தினமும் ஆட்டோ ஓடி வயிற்றுப் பிழைப்பு நடாத்தும் குடும்பஸ்தர்கள் பலர் ஒழிந்து ஒழிந்து வாழ்கின்றனர்.  அல்லது அவர்களின் வாழ்வாதாரணமான ஆட்டோவை ஒழித்து வைத்துள்ளனர். பினான்ஸ் கம்பனிக்கு பயந்து.

6 மாதம் சலுகை காலம் கொடுப்பதாக கூறிவிட்டு அந்த 6 மாதத்தையும் கூடிய வட்டியுடன் பின்னால் வரும் 6 மாதங்களுடன் சேர்த்துள்ளார்கள் அந்தக் கயவர்கள். கிடைப்பதில் கொஞ்சத்தையாவது அந்தந்த மாதங்களில் கொஞ்சமாவது தவணை கட்டியவர்கள் தப்பித்துவிட்டார்கள்.

இன்னும் பலரின் ஆட்டோக்களை பினான்ஸ்காரன் ஈவிரக்கமின்றி தூக்கிச் சென்றுள்ளான். இன்னும் பலர் தொழில்களிலிருந்தே தூக்கப்பட்டுள்ளனர். நாள் சம்பளம் எடுப்பவர்களின் நிலை சொல்வி வேலையில்லை. தொழிலாளிகளை இப்படி திடீரென்று தொழிலால் விரட்ட வேண்டாம் என்று கெஞ்சி அறிக்கை விடுகிறார் நாட்டின் பிரதமர். 

நிலைமை வர வர மோசமாகிக்கொண்டே போகிறது. நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக அல்ல நாடு முழுதும் வறுமை தலைவிரித்தாடுகிறது. தன்னைத்தானே மாய்த்துக்கொண்டு வறுமையிலிருந்து விடுதலை பெற சன்மார்க்கத்தில் அனுமதியிருந்திருந்தால்

பலரும் வறுமையிலிருந்து விடுதலை பெற தன்னைத்தானே மாய்த்துக்கொள்வதனையே சிறந்த தீர்வாக ஏற்றிருப்பார்கள். அப்படி செய்தால் நிரந்தர நரகம் என்பதனை பயந்து தான் குறைந்த தீமையான அடகுக் கடைகளை நோக்கி படையெடுக்கின்றனர் நம் உம்மத்தவர்கள்.  

இன்னும் சில நாட்களில் ஹஜ்ஜூப் பெருநாள் வருகிறது.   நாங்கள் முஸ்லிம்களாக பிறக்க காரணமான நபி இப்றாஹீம் அலை அவர்களின் இணையில்லா தியாகங்களை  நினைவு கூறும் உன்னதப் பெருநாள்.  அவ்வுன்னத நாளின் முக்கிய சுன்னாக்களில் ஒன்று தான் குர்பான் கொடுப்பது. 

எப்படியும் இம்முறை குர்பான் பிராணி லட்ச ரூபாவை தாண்ட வாய்ப்பிருக்கிறது. கோடிகளில் வந்தாலும் சுன்னாவை விட்டுவிட முடியாதே. உலோபித் தனம் பாராது கட்டாயம் அந்த சுன்னாவை நாம் உயிர்ப்பித்துத் தான் ஆக வேண்டும்.

சுன்னாவையும் உயிர்ப்பிக்க வேண்டும், வறுமையின் பிடியில் சிக்குண்டு சீரழிந்துகொண்டிருக்கும்  நம்மவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற வாஜிபான பணியும் நடந்தேற வேண்டும்.

உழ்ஹிய்யா சுன்னா, வறுமையிலிருந்து மக்களை காப்பாற்றுவது வாஜிப்,  இன்னுமொரு லொக்டவுன் வராது என்று யாராலும் அடித்துக் கூற முடியாது. இப்படியான தருணத்தில் எமது வளங்களை திட்டமிட்டு பயன்படுத்துவது சமூகத்தை பலவாறான ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றும்.

சில வருடங்களில் பஞ்சம் ஒன்று வரும் என்பதனை அறிந்த யூஸூப் அலை, மன்னரிடம் உரிய அமைச்சர் பதவியை கேட்டெடுத்து  வரவிருக்கும் பஞ்சத்திலிருந்து நாட்டு மக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று அழகிய முறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி 

நாட்டையும் நாட்டு மக்களையும் சிறப்பான முறையில் பஞ்சத்திலிருந்து காப்பாற்றினார்.

யூஸூப் அலை அவர்கள் நபியாக இருந்தும் வானத்திலிருந்து அற்புதமான முறையில் உணவு இறக்குமாறு துஆ கேட்கவில்லை. 

அல்லாஹ் அவருக்கு அருளிய ஞானத்தை வைத்து அறிவை வைத்து திட்டமிட்டு நாட்டை நோக்கி வந்த பஞ்சத்துக்கு வெற்றிகரமாக முகம் கொடுத்தார். இப்போது நம் சமூகத்தை வறுமையின் பிடியிலிருந்து காப்பாற்றத் தேவையானது பொருளாதார பலம். 

வருகின்ற ஹஜ்ஜூப் பெருநாளில் கண்ட நிண்டவாறு உழ்ஹிய்யா அறுத்து பணத்தையும் வளத்தையும் வீணடிக்காமல்  திட்டமிட்டு பயன்படுத்துவது நமது கடமை. அது தான் யூஸூப் அலை அவர்களின் வரலாற்றிலிருந்து நாம் எடுக்க வேண்டிய படிப்பினை.

வழமையாக நம் மஸ்ஜித்களில் 50 உழ்ஹிய்யாக்கள் அறுப்பதாக இருந்தால் இம்முறை சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஒரு ஜந்து உழ்ஹிய்யாக்கள் மட்டும் அறுங்கள். 

மீதியை வறுமையாளர்களை காப்பாற்றல் என்ற வாஜிபான பணிக்கு ஒதுக்குங்கள். அல்லாஹ் நிச்சயம் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான்.  

உழ்ஹிய்யாவென்ற சுன்னாவை விட பல மடங்கு நன்மையையும் பரகத்தையும் உங்களுக்கு வழங்குவான்.

பல மஸ்ஜித்கள் ஏற்கனவே இப்படியான சிறந்த முடிவுக்கு வந்துள்ளதாக கேள்விப்பட்டேன். அல்லாஹ் அவர்களுக்கு பரக்கத் செய்ய துஆ கேட்போம்.

புகாரியில் வரும் ஜூரைஜ் என்னும் வணக்கவாளியின் வரலாற்றை கேள்விபட்டிருப்பீர்கள், 

ஜூரைஜ் என்ற வணக்கவாளி சுன்னத்தான் தொழுகையில் தொழுதுகொண்டிருக்கும் போது அவரின் தாயார் பல முறை அழைத்தும் ஜூரைஜ் தாயின் அழைப்புக்கு பதில் கொடுக்காமல்,  சுன்னத்தான தொழுகையை தொடர்ந்தார். 

அப்போது அப்பெண் ‘இறைவா! விபச்சாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் மரணிக்கக் கூடாது” என்று கோபமாக பிரார்த்தித்தார்.

அதன் பின் நடந்தவற்றை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.  ஜூரைஜ்  தாயின் கோபத்துடன் கூடிய பிரார்த்தனை காரணமாக பல சிக்கல்களுக்கு முகம்கொடுத்து பிரச்சினையிலிருந்து மீண்டார்.

இந்த சம்பவத்தை கூறிவிட்டு நபிகளார் இவ்வாறு கூறினார்.  ஜூரைஜ் ஒரு அறிவுள்ளவராக இருந்திருந்தால்,  தாயின் அழைப்புக்கு பதில் சொல்வது  சுன்னத்தான் தொழுகையை விட முக்கியம்  என்பதனை விளங்கியிருப்பார் என்றார்.

உழ்ஹிய்யா சுன்னா,  வறுமைக்குட்பட்டவர்களை வறுமையிலிருந்து காப்பாற்றுவது பர்ளு,  இறுதியாக நாமும் நபிகளார் சொன்னது போன்று  நமது சமூகத்தவர்கள் அறிவுள்ளவர்களாக இருந்தால்............ இந்த ஹஜ்ஜூப் பெருநாளுக்கு??????

0 கருத்துரைகள்:

Post a Comment