Header Ads



80,000 மில்லியன் ரூபாயை கிடைக்க வழிசெய்வேன் - ஜனாதிபதி உறுதியளிப்பு, தீர்மானத்தில் இருந்து பின்வாங்காதீர்கள் என பிரதிநிதிகள் ஒரே குரலில் தெரிவிப்பு


சேதனப் பசளையைப் பயன்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட தீர்மானத்திலிருந்து ஒருபோதும் பின்வாங்க வேண்டாம் என்று, நாடளாவிய ரீதியில் உள்ள 11 இலட்சம் விவசாயிகள் சார்பில், மாவட்ட விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பண்டைய விவசாய முறைமைகளுக்கு மீண்டும் திரும்பி, மக்களுக்கு நச்சுத்தன்மையற்ற உணவை வழங்குவதே தங்களின் முக்கியமான கடமையும் பொறுப்புமாகும்  என்றும், விவசாயப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனவே, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறைக்காக, ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுள்ள தீர்மானத்துக்குப் பராட்டுத் தெரிவித்த விவசாயிகள், யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போல, ஓர் அணியின் கீழ் இருந்து சேதனப் பசளை சவாலை வெற்றிகொள்வதற்கு ஜனாதிபதி அவர்களுக்கு ஒத்துழைப்பதாக உறுதியளித்தனர்.

இன்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இலங்கைத் தேசிய விவசாயிகள் சம்மேளனத்தின் மாவட்ட விவசாயப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே, அவர்கள் இது பற்றித் தெரிவித்தனர். இந்தச் சம்மேளனம், 11 இலட்சம் விவசாயிகள், 17,000 விவசாயச் சங்கங்கள் மற்றும் 563 விவசாயச் சேவை மையங்களை உள்ளடக்கியதாகும்.

சேதனப் பசளையை அறிமுகப்படுத்தியதன் பின்னர் அரசாங்கம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி, விசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் விளக்கினார்.

சிலர், இதைப் பின்னோக்கிச் செல்லும் முயற்சியாகச் சுட்டிக்காட்ட முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும், முழு உலகிலும் ஒரு புதிய போக்காக இருக்கும் சேதனப் பசளையைப் பயன்படுத்தி, நாட்டை விவசாயப் பொருளாதாரத்தின் புதிய பாதைக்குக் கொண்டுசெல்வதாக ஜனாதிபதி அவர்கள் எடுத்துரைத்தார். இத்திட்டத்துக்கு எதிராகப் பேசும் பலர், அதிக விலைக்கு சேதனப் பசளையைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பழங்களைப் பயன்படுத்துகின்றனர். எனினும், இரசாயன உரங்களின் பயன்பாட்டால் பாதிக்கப்படும் விவசாயிகள் குறித்து அவர்கள் கவனம் செலுத்துவதில்லை.

எதிர்காலச் சந்ததியினரைத் தொற்றா நோய்களிலிருந்து காப்பாற்றுவதற்காக, வருடாந்தம் இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்காகச் செலவிடப்படும் 80,000 மில்லியன் ரூபாயை, நாட்டின் அப்பாவி விவசாயிகளுக்குக் கிடைக்க வழிசெய்வதாக, ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தைத் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நடைமுறைப்படுத்த, இரசாயன உரங்களை வழங்கியதைப் போலவே, களைக் கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட தேவையான அளவு சேதன உரங்களை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மேலும், தேவையான உரங்களை உள்நாட்டில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு உள்நாட்டுத் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்குக் கிடைக்கும். விவசாயிகளாலும், தங்களுக்குத் தேவையான சேதன உரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதற்காகச் செலவிடப்படும் பணத்தை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

விவசாயிகளுக்கு இதுவரை கிடைத்த வருமானம் குறைவடைவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன், வருமானம் குறையுமானால், அரசாங்கம் அந்தத் தொகையை வழங்கும் என்றும், விவசாயிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாக இடமளிக்கப்பட மாட்டாது என்றும், ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்தார்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த விவசாயிகளுக்கான “விவாயக் காப்புறுதித் திட்டம்”, இன்று முதல் மீண்டும் நடைமுறைக்கு வரும் வகையில், அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகேயினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

“விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது” என்று, அமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். புதிதாக 105 நெல் களஞ்சியசாலைகளை நிர்மாணிக்கவும் விவசாய வங்கிகளுக்கு நிதி உதவி வழங்கவும், விவசாயத் தரவுத்தளத்தை விரைவாக இற்றைப்படுத்தவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குளங்கள், கால்வாய்களை புனரமைப்புச் செய்யும் ஒப்பந்தங்களைச் செய்யும் போது, இது வரையில் விவசாயச் சங்கங்களுக்கு  ரூ. 20 இலட்சமாக மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஒப்பந்தத் தொகையை ரூ. 100 லட்சமாக அதிகரிக்கவும் ஜனாதிபதி அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார். பொருளாதார மத்திய நிலையங்களில் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் நேரடியாக விவசாயிகள் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை விரிவுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு 2021.07.01

1 comment:

  1. அழகாக எழுதி வாசித்துக்காட்டி மக்களை ஏமாற்றிய காலம் இப்போது மலையேறிவிட்டது என்பதை புரிந்துகொள்வதை முற்றாக மறுக்கும் ஒரு பயங்கரமான காலகட்டத்தில் எமது நாடு மக்கள் இழுத்துச் செல்லப்படுகின்றார்கள் என்பதை நினைக்கும் போது!!!

    ReplyDelete

Powered by Blogger.