Header Ads



தசாப்தங்கள் பல கடந்தாலும், மக்கள் மனதில் பிரேமதாச - முஜிபுர் ரஹ்மான் Mp


மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினம் இன்றாகும்.அவர் தொடர்பான வரலாற்றை இந் நாட்டு மக்கள் அறித்ததே. சமகால விவகாரங்களுடன் தொடர்புபடுத்தி அவரை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.அதையொட்டிய ஓர் ஆக்கம்.

மறைந்த முன்னால் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 

(1924 -1993) இலங்கையின் மூன்றாவது (இரண்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட) ஜனாதிபதியாக கடமையாற்றியவர். அதற்கு முன், ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கத்தில் 1978 பெப்ரவரி 6 முதல் 1989 ஜனவரி 1 வரை அவர் பிரதமராக பணியாற்றினார். அடிமட்ட அரசியல் பங்கேற்புடன் பல்வேறு சவால்களை கடந்து சாதாரண ஓர் பிரஜை ஜனாதிபதியாகிய வரலாற்றிற்கு உரிமை கொண்டாடும் ரணசிங்க பிரேமதாச சிவில் சமூகத்திற்கும்,கட்சி அரசியலுக்கும்,கட்சி அரசியலினூடாக நாட்டின் நிலைபேறான அபிவிருத்திக்கும் பெரும் பங்காற்றியவர்.பல்வேறு கட்சி உள்ளக சவால்கள்,அவதூறுகள் நாடு அப்போது முகம் கொடுத்த இரு பெரும் உள்ளக கலவரங்கள்,அதனால் ஏற்ப்பட்ட சமூக பாதிப்புகள்,பெருளாதார ஏற்றத்தாழ்வுகள்,சர்வதேச இராஜதந்திரம் என்பற்றை தனது விவேகமான சாமர்த்திய அரசியல் தீர்க்க தரிசனத்தால் வெற்றி கொண்ட ஓர் ஆளுமையாகும்.

டட்லி சேனாநாயக்கவுடன் இனைந்து  ஐக்கிய தேசியக் கட்சியை மறுசீரமைக்கும் பெறுப்பை ஏற்ற அவர் அடிமட்ட வெகுஜன மக்கள் ஆதரவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தியவர்.அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்கு சிங்கள பௌத்த வாக்குகளை பெற்றுக் கொடுத்தவர்.அது வரை காலமும் மேட்டுக்குடி மக்களு மாத்திரம் தான் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடமுண்டு என்ற தோற்றத்தையும் ஐக்கிய தேசியக் கட்சி ஓர் தொகுதியில் வெற்றி பெற வேண்டுமென்றால் ்அங்கு தமிழ்,முஸ்லிம் வாக்குகள் தான் தேவை என்ற தோற்றப்பாட்டையும் உடைத்து  சிங்கள வாக்குகளின் எண்ணிக்கைக் கட்டமைப்பை பலப்படுத்தியதில் பெரும் பங்காற்றியவர்.

இந்த பங்களிப்பால் தான்,அரசியல் ரீதியான குறுகிய சிங்கள தேசியவாத கருத்தோட்டங்களை விதைத்து ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சியை தோல்வியடையச் செய்தது.பண்டாரநாயாக்க விதைத்த சிங்கள தேசியவாதத்தை கிராம மட்டத்திலிருந்தே தோல்வியடைச் செய்து ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை உறுப்படுத்தியவர் ரனசிங்க பிரேமதாச ஆவார்.நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவி ஏற்ற காலம் நாட்டில் இரு வேறு பகுதிகளில் இரு வேறு கலவரங்கள் இடம் பெற்றன.இந்த இரண்டு கலவரங்களையும் முடிவிற்குக் கொண்டு வர ஜனநாயக ரீதியாக அழைப்புவிடுத்ததை இங்கு நினைவு கூறுகிறேன்.”என் இரு கண்களையும் கட்டிக் கொண்டு நீங்கள் அழைக்கும் எந்த ஓர் வனாந்திரத்திற்கும் நான் வருகிறேன்,ஆயுதம் இல்லாமல் பேசி தீர்த்துக் கொள்வோம் வாருங்கள்” என்று ஆயுதம் ஏந்திய இரு தரப்பிற்கும் அழைப்பு விடுத்ததை இங்கு ஞாபகப்படுத்துகிறேன்.மக்கள் நலனை முன்னிலைப்டுத்திய ஓர் அரசியல் தலைவர் இன்றைய அரசியல் தலைவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாகும்.இன்று நாடு பல்வேறு ஆபத்துகளை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில் அரசாங்கம் மக்கள் மீது பல்வேறு சுமைகளை நாளுக்கு நாள் ஏற்றிவருகிறது.ஆட்சியாளர்கள் மக்கள் நலனை பிற்படுத்திய சுயநல மற்றும் நட்பு வட்டார நலனை முற்படுத்தும் விதமாக செயற்படுகிறது.நான் வேறு அரசியல் கொள்கைகளைக் கொண்ட ஓர் அரசியல்வாதியாக இருந்தாலும் இன்றைய மக்கள் விரோத ஆட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அரசியல் தலைவரை பிரேமதாசவின் “மக்கள் நலன் மேம்பாட்டு”த் திட்டங்களை ஒரு முறை மதிப்பிட்டு அவர் முன்னெடுத்த “பொது நலன்களை” சமகால சமூக தேவைகளுக்கேற்ப வடிவமைத்து முன்கொண்டு செல்லுமாறு அழைப்பு விடுக்கிறேன்.தேவையுடைய மக்களுக்காக அவர் உருவாக்கிய “ஜனசவிய” இன்று பெயர் மாற்றப்பட்டுள்ள “சமூர்த்தி”யை அரசியலாக்க வேண்டாம் என்றும் குறிப்பாக “கட்சி” அரசியலுக்குள் இதனைக் கையாள வேண்டாம் என்றும் இன்றைய அரசியல் தலைவர்களிடம் இன்றைய நினைவு நாளில் வினவிக் கொள்கிறேன்.

கிராம மட்டங்களில் பிரேதேச அரசியல்வாதிகளினதோ அல்லது அதிகாரிகளினதோ பாராபட்ச கவனிப்புகள் இன்றி தேவையுடைய வரிய மக்களுக்குரிய உரிமை அது.அவர்களின் உரிமைகளை பாதுகாத்துப் பலப்படுத்துவது நம் அனைவரினதும் பெறுப்பும் கடமையுமாகும். 

குறுகிய தேசியவாதங்கள் தோற்றுப் போகும் என்பதை மறைந்த பிரேமதாசவின் வெற்றியைக் கொண்டு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.அன்று ஜனாதிபதியாகி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிரிகொத்தவில் ஆற்றிய உரை நம் அனைவருக்கும் ஞாபகமிருக்கும் என நினைக்கிறேன்.வாக்களித்த மக்களு மற்றுமன்றி அனைத்து இலங்கையர்களுக்குமான நூற்றுக்கு நூறு வீத ஜனாதிபதி என தெரிவித்து சகல மக்களுக்கும் குறிப்பாக தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்ப்படுத்தியவர்.முற்போக்காக சிந்தித்து செயலாற்றியவர். சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கையை ஏற்ப்படுத்தி தமிழ் முஸ்லிம் சமூகங்களை தேசிய அரசியல் நீரோட்டத்திற்கு அழைத்தவர் என்பதை இன்று பதிவிட விரும்புகிறேன்.இவ்வாறு சென்றால் கூடிய விரைவில் தமிழ் சமூகங்களின் மனங்களை ஜனநாயக ரீதியாக வென்று விடுவார் என்ற அச்சம் காரணமாகவே விடுதலைப் புலிகள் அவரை இலக்கு வைத்துக் கொன்றனர்.

இன்றைய அரசியல் தலைவர்கள் ஒரு தலைபட்சமாக பெரும்பான்மைவாதத்தை வெளிப்படையாகவே கான்பித்து தனது ஆரம்ப அதிகார நாளிலயே சிறுபான்மை சமூகங்களை தேசிய நீரோட்டத்திலிருந்து தூரமாக்கும் துரதிஷ்டவசமான குறுகிய அரசியல் பார்வை கொண்ட ஆட்சியாளர்களுக்கு பிரேமதாசவின் சிரிகொத்த உரையை முன்னுதாரணமாக கொள்ளுமாறு தற்போதைய ஆளும் தலைவர்களை கோட்டுக் கொள்கிறேன்.

ஏழை மக்கள் குறித்த விசாலமான கனவென்றை கொண்டிருந்த அவர் அந்த மக்கள் பிரிவினரை பலப்படுத்துவதன் மூலம் நாட்டை துரிதமாக முன்னேக்கி கொண்டு செல்ல முடியும் என்று நம்பியவர்.பலமான மத்திய தர வர்க்கம் ஒன்றை உருவாக்கும் இலக்கில் குறியாக செயற்ப்பட்டார்.கட்சி அரசியலுக்கு வலுவூட்டியவர். ரணசிங்க பிரேமதாசவின் மறைவிற்கு பின்னர் மீண்டும் தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியால் சிங்கள பௌத்த வாக்குகளை தக்க வைக்க முடியவில்லை.மக்கள் சார் ஜனரஞ்சக தலைவராக என்றும் மக்கள் மனங்களில் இடம் பிடித்த அவரை நினைவு படுத்துவதில் அகமகிழ்வடைகிறேன்.

இன்று நாடு அந்நியசெலாவனி பற்றாக்குறையால் தள்ளாடுகிறது.வரிய குடும்ப இளையோர் யுவதிகளுக்கு தொழில் வழங்கி அவர்களுக்கு ஓர் அபிமானத்தை ஏற்ப்படுத்தி இன்றும் நாட்டின் ஏற்றுமதிப் பெருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பெரும் பங்காற்றும் ஆடைத் தொழிற்சாலை பற்றி நோக்கும் போது ரணசிங்க பிரேமதாசவின் தூரநோக்கின் ஆழம் புலப்படுகிறது.இலங்கையின் ஏற்றுமதிப் பெருளாதாரத்தின் முதுகொலும்பு ஆடைத் தொழிற்ச்சாலைகள் என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

மக்களுக்கு சமீபமான அரசியல் தலைவராக இருந்தார்.முற்போக்கான தேசியவாதத்தை பலமாக நம்பியவர்.தமிழ் ஆயுத குழுக்களின் தாக்குதல்கள் அதிகரித்த போது கிழக்கு முஸ்லிம்களுக்கு உடனடியாக உதவ அரச நிர்வாக கட்டமைப்பை பனித்ததோடு அப்பிரதேச மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தவும் முன்நின்றார்.அவர் உருவாக்கியகம் உதாவ,ஜனசவிய,  கிராமோதய வேலைத்திட்டம்,நடமாடும். சேவைகள்,செவன அரமுதல,உனபம்பு வெட, எனும் வேலைத் திட்டம்,மாவதே அபி,செனவ மாபிய கெபகரு,உள்ளிட்ட இன்னும் பல மக்கள் நலன் நோன்பல் திட்டத்தை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.அரசாங்கத்திற்கு பல்வேறு சவால்கள் இருந்த போதும் மக்கள் சார்ந்து செயற்பட்ட ஓர் உன்மையான அரசியல்வாதி.அரசாங்க கட்டமைப்பில் உள்ள சகல முறைமைகளினூடாகவும்  மக்களைப் வலுப்படுத்தியவர்.அரசாங்கம் தொடர்பான நம்பிக்கையை மக்களிடம் ஏற்ப்படுத்தியவர்.

தன்னிடமிருந்த பௌத்த செல்வாக்கைக் கொண்டு சிறுபான்மை சமூகங்களை ஓரம் கட்டவோ,அடக்குமுறைக்குட்படுத்தவே,அவர்களுடைய அடிப்படை உரிமைகளை பலவீனப்படுத்தவோ முற்படாத ஓர் தலைவர்.இந்த நம்பிக்கை தான் ஓர் ஜனாதிபதியால் வழங்க முடியுமான உயர்ந்த விழுமியமாக இருக்கும்.சகல மக்களிடமும் நம்பிக்கையை ஏற்ப்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய அயராது உழைத்தவர்.தனது ஓய்வு நாட்களில் கூட குக்கிராமங்களில் ஏதாவது ஓர் கம் உதாவ நிகழ்ச்சித் திட்டத்தில் இருப்பார்.ஏழைகளின் துயரங்களை துடைக்க அயராது  உழைத்தவர்.ஆட்சியில் இருக்கும் வளங்களைக் கொண்டு தனதும் தனது குடும்பத்தினதும் பெருளாதார நலன்களை பெருக்கவில்லை.தனது நட்பு வட்டார பெருளாதார நலன்களையும் பெருக்கவில்லை.

இருந்ததை மக்களுக்குக் கொடுத்தார்.சாதாரண மக்களிக்கும் அபிமானத்தை ஏற்படுத்தினார்.தனது எதிரிகளையும் நண்பராக்கும் பொது உறவு நுட்பம் அவரிடமிருந்தது. பாகுபாடுகளை கழைவதில் மார்டின் லூதர் கிங்கின் கொள்கைகளை தனது கொள்கையாக எடுத்து செயற்ப்பட்டார். கட்சி அரசியலுக்கும்,நாட்டின் தேச நிர்மானத்திற்கும்,நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கும்,பெருளாதார மேம்பாட்டுற்கும் பிரேமதாசவின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.பிரேமதாச உருவாக்கிய கட்சிக் கட்டமைப்பையும்,வாக்காளர் கட்டமைப்பையும் முன்கொண்டு செல்ல முடியாத ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்வியை தான் மூன்று தசாப்பதங்களாக காண்கிறோம்.

இன்றும் சில அரசியல் கட்சிகளுக்குள் குடும்ப வாதம்,கோத்திர குல வேறுபாடுகள் பார்க்கப்படுகிறது.இந்த குறுகிய பார்வைகளால் சில இரண்டாம் மூன்றாம் கட்ட தலைமைகளுக்குக் கூட இடமளிக்க முடியாத அளவு இன்று கடசி அரசியல் சென்றுள்ள துரதிஷ்டமான நிலையைப் பார்க்கிறோம்.எவ்வளவு தான் குல கோத்திர வேறுபாடுகள் காரணமாக பிற நபர்களுக்கு தலைமைத்துவத்தை வழங்க மறுத்தாலும் பல தசாப்பத காலமாக  மேட்டுக்குடித் தலைவரால் இந் நாட்டின் அதிகாரத்தை பெற முடியவில்லை என்பது யதார்த்தமாகும். குல கோத்திர வேறுபாடுகள் இருந்தாலும் பிரேமதாசவின் வெற்றியை மிஞ்சிய ஓர் அடைவை மேட்டுக்குடி வர்க்கத்தால் அடையமுடியவில்லை. பிரேமதாசவின் வெகுஜன மக்கள் ஆதரவிற்கும் நாட்டின் அபிவிருத்திக்கு அவர் கொண்டிருந்த தூரநோக்கிற்கும் குலம் ஓர் தடை அல்ல என்பதை இங்கு நினைவூட்டுகிறேன்.

தசாப்தங்கள் பல கடந்தாலும் என்றும் மக்கள் மனதில் பிரேமதாச இடம் பிடிப்பார். (முஜிபுர் ரஹ்மான்)

No comments

Powered by Blogger.