Header Ads



வியாழேந்திரனின் வீட்டு CCTV கமெரா, சிக்கல் கொடுப்பது ஏன்...?


இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் மணல் லொறியின் சாரதியான மகாலிங்கம் பாலசுந்தரம்  ஜூன் 21ஆம் திகதி மாலை 5.30 மணியளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல கோணங்களிலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என பாதுகாப்புத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணல் லொறியின் சாரதியை ஏற்றிவந்த ஓட்டோ சாரதியே கண்கண்ட சாட்சியாக உள்ளார். மெய்ப்பாதுகாவலரிடம் ஒப்புதல் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சரும் ஊடகங்களுக்கு அறிக்கை விட்டிருந்தார்.

இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்கு அண்மையில் வீடுகள் எவையும் இல்லை. ஆகையால் அவருடைய (இராஜாங்க அமைச்சர்) வீட்டில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி கமெராவில் பதியப்பட்டிருக்கும் காட்சிகளே முக்கிய சாட்சிகளாகவிருந்தன. எனினும் அந்த சி.சி.டி.வி கமெராக்களுக்கான பாகங்கள் கழற்றப்பட்டுள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பிலும் சி.ஐ.டியினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அறியமுடிகின்றது. சி.சி.டி.வி கமெராவின்  காணொளிகளை சேகரிக்கும் ‘டிவிஆர்’ ஒரு மாதத்துக்கு முன்னரே பழுதடைந்துவிட்டது. அந்தப் பாகம் கழற்றப்பட்டு  திருத்துவதற்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக வாக்குமூலங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனினும் ‘டிவிஆர்’ ரிலுள்ள வண்தட்டை விசாரணைகளை முன்னெடுக்கும் பிரிவினர் பெற்றுச் சென்றுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஆதாரங்களில் சில முறைப்படி கொடுக்கப்படவும் இல்லை அதேபோல பெற்றுக்கொண்டமைக்கு உரிய பதிவுகளும் இல்லையென உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவையெல்லாம் இவ்வாறிருக்க கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக சில மெய்ப்பாதுகாவலரை மட்டுமே தனது பாதுகாப்புக்கு வைத்துக்கொண்ட இராஜாங்க அமைச்சர்  ஏனையோரை சம்பவம் இடம்பெற்ற சில நாள்களுக்கு முன்னரே அனுப்பிவைத்துவிட்டார் எனவும் விசாரணைகளின் ஊடாக அறியமுடிந்துள்ளது.

இவ்வாறான குழப்பகரமான நிலைமைகளுக்கு மத்தியிலேயே  துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பிலான விசாரணைகளை பல கோணங்களிலும் விசாரணைப் பிரிவினர் முடுக்கிவிட்டுள்ளனர் என அறியமுடிகின்றது.

(தமிழ்மிரர்)

No comments

Powered by Blogger.