Header Ads



"தன் தாய் இறந்ததுகூட, என் அப்பாவி மகள்களுக்குத் தெரியாது" - ஒரு கணவனின் உருக்கம்


இந்தியாவின் மிக மோசமான இரண்டாவது கொரோனா அலை ஆயிரக்கணக்கான குடும்பங்களை சொல்லமுடியாத துயருக்குள் ஆழ்த்தி இருக்கிறது.

இது அல்தூஃப் ஷம்சியின் வலி நிறைந்த கதை.

கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில், நாங்கள் ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக இருந்தோம். என் மனைவி ரெஹாப்பும் நானும் எங்கள் மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். எங்கள் மகப்பேறு மருத்துவர் ஏப்ரல் 22ஆம் தேதிக்கு முன் மருத்துவமனைக்கு வருமாறு அறிவுறுத்தியிருந்தார். ரெஹாப் 38ஆவது கர்ப்ப வார காலத்தில் இருந்ததால், அடுத்த நாள் குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் திட்டம் இருந்தது.

மருத்துவ நெறிமுறைகளின்படி அவர் கோவிட் பரிசோதனை செய்து கொண்டார். முடிவு பாசிட்டிவ்வாக இருந்தது. கொரோனா பாசிட்டிவ் நோயாளிகளை மருத்துவமனை அனுமதிக்காது என்பது எங்களுக்குத் தெரியும். ரெஹாப்புக்கு இன்னும் கொஞ்சம் கால அவகாசம் இருப்பதால் எங்கள் மகப்பேறு மருத்துவர் பிரசவத்தை ஒத்திவைக்க பரிந்துரைத்தார். அதோடு ரெஹாப்பின் கொரோனா சிகிச்சையில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தினார். சில நாட்களுக்குப் பிறகு, ரெஹாப்புக்கு காய்ச்சல் அதிகரித்தது, ஏப்ரல் 28 அன்று, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அவளை ஒரு கொரோனா மருத்துவமனையில் அனுமதித்தோம்.

ரெஹாப் வீரியமிக்க மருந்துகளை உட்கொள்வதால் குழந்தையை இழக்க நேரிடும் என மருத்துவர் கூறினார். மாலையில், ரெஹாப்பின் நிலை மோசமடைந்து, ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சையில் வைக்கப்பட்டார். மருத்துவர்கள் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து வெளியே எடுக்க முடிவு செய்தனர். மருத்துவமனை எங்களிடம் சில ஆவணங்களில் கையெழுத்து பெற்றுக் கொண்டது. அதில் ரெஹாபுக்கு இரத்தப்போக்கு மூலம் மரணம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறி இருந்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு ரெஹாப்புக்கு செயற்கை சுவாசம் பொருத்த வேண்டிய தேவை எழலாம் என்பதால், மற்றொரு மருத்துவமனையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு படுக்கையைக் கண்டுபிடிக்கும்படி மருத்துவமனை கூறியது. இந்த இறுக்கமான கால கட்டத்தில், எங்களுக்கு இரு குழந்தைகள் உடனிருப்பதையே மறந்துவிட்டேன். என் மனதில் இருந்த ஒரே விஷயம் ரெஹாப்பை காப்பாற்றுவதுதான்.

அறுவை சிகிச்சைக்கு நான் மனதளவில் என்னை தயார்படுத்திக் கொண்டிருந்த போது, மற்றொரு கெட்ட செய்தி வந்தது. டெல்லியில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த என் தந்தையின் உடல் நிலையும் மோசமடைந்து கொண்டிருந்தது. என் அம்மாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, லேசான ஆக்ஸிஜன் உதவியுடன் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தன் கணவரும், மருமகளும் உயிருக்கு போராடுகிறார்கள் என்பது கூட தெரியாது.

என் உலகம் எல்லாமே சீர்குலைந்து போவதன் விளிம்பில் இருப்பதாகத் தோன்றியது. ஒரு ஐ.சி.யூ படுக்கைக்கான தேடலின் மத்தியில், அவர்கள் குணமடைய வேண்டும் என நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். ஏப்ரல் 29 அன்று, எனக்கு பெண் குழந்தை பிறந்தாள். வேறு எந்த மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் எனக்கு இடம் கிடைக்காததால், அவர் இருந்த மருத்துவமனையே ரெஹாப்பை ஒரு தற்காலிக தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றியது.

அப்போது மருத்துவமனையில் போதுமான செவிலியர்கள் இல்லை, நானும் அப்போது கொரோனாவால் பாதிக்கபட்டிருந்தேன். இருப்பினும் நான் ரெஹாப்பின் படுக்கைக்கு அருகில் இருக்க முடிவு செய்தேன். அவளுடைய மருந்துகளைப் பற்றி நான் தொடர்ந்து செவிலியர்களுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. அவளை வேறு இடத்திற்கு மாற்றும் படி செவிலியர்கள் என்னிடம் கூறிக் கொண்டே இருந்தனர். எனக்குத் தெரிந்த அனைவரையும் வென்டிலேட்டருடன் கூடிய ஒரு படுக்கைக்காக தொடர்பு கொண்டேன்.

கடைசியாக, ஒரு தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கையைக் கண்டேன், ஆனால் அவளை இடம்மாற்றுவதற்கு தேவையான வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. அவளுக்கு சிகிச்சையளிக்கும்படி நான் மருத்துவமனையிடம் கெஞ்சினேன், அவளைக் காப்பாற்ற அவர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தார்கள்.

மே 1ஆம் தேதியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். பல மருத்துவமனைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதாக புகாரளித்தன. ரெஹாப் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையின் ஊழியர்கள் கூட ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாகவும், விரைவில் ஆக்சிஜன் தீரும் நிலை இருப்பதாகவும், ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்பாடு செய்யும்படி என்னிடம் கூறினர்

அன்று மாலை, என் தந்தையின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவமனையிலிருந்து எனக்கு அழைப்பு வந்தது. நான் அங்கு செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார். நான் உணர்ச்சியற்றவனாக இருந்தேன். என் தந்தையின் உடலைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ஆக்சிஜனுக்காக ரெஹாப் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையிடமிருந்து SOS செய்திகளைப் படித்தேன். என் தாயாரின் உடல் நிலையும் சரியாக இல்லை, என் ஏழு மற்றும் ஐந்து வயதான இரண்டு மகள்களும் தங்கள் புதிய உடன்பிறப்புடன் அம்மா (ரெஹாப்) ஏன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை என கேட்டனர்.

42 ஆண்டுகளாக தன் வாழ்கைப் பயணத்தில் ஒன்றாக இருந்த அவரது கணவர் இறந்துவிட்டார் என்று என் அம்மாவிடம் கூறும் கடினமான பணியில் நான் இருந்தேன். அவர் குடும்பத்தின் பாதுகாவலராக இருந்தார். அவருடைய மரணம் என்னை மிகவும் பாதித்தது. என் தந்தையை நல்லடக்கம் செய்துவிட்டு, ரெஹாப்பை மீண்டும் காணச் சென்ற போது, அவளது நிலை மோசமடைந்து கொண்டிருந்தது.

அடுத்த 11 நாட்கள், நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையில் நான் ஊசலாடிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும், ரெஹாப்பின் உடல் நிலை சற்றே மேம்பட்டிருப்பதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவரின் உடல்நிலை தொடர்ந்து அபாயகட்டத்திலேயே இருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது சிறுநீரகங்களுக்கு சிகிச்சை தேவைப்பட்டது, அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டது. ரெஹாப்பின் ஆக்சிஜன் செறிவு மேம்படத் தொடங்கியதும், என்னை வார்டை விட்டு வெளியேறும்படி கூறினார்கள். வென்டிலேட்டரில் இருந்து அவளை வெளியே எடுக்க அவர்கள் திட்டமிட்டபோது இரண்டு நாட்களுக்குப் பிறகு தான் நான் அவளைப் பார்க்க முடியும் என என்னிடம் கூறப்பட்டது.

அன்று இரவு 8 மணியளவில், ரெஹாப்பின் உடல் நிலை சீராக இருப்பதாக, அவளுடன் இருக்க நான் நியமித்த தனியார் செவிலியர் என்னிடம் கூறினார். நான் என் அம்மாவும் மகள்களும் எப்படி இருக்கிறார்கள் என பார்க்க வீட்டிற்கு சென்றேன். இரவு 11 மணியளவில், மருத்துவமனை என்னை உடனடியாக வரும்படி கேட்டுக் கொண்டது. நான் மருத்துவமனைக்கு விரைந்த போது, ரெஹாப்பின் உயிர் பிரிந்துவிட்டது. அவளுக்கு "இருதய பிரச்னை" இருந்ததாக மருத்துவமனை ஊழியர்கள் என்னிடம் கூறினார்கள். நான் முற்றிலும் உடைந்துபோனேன். நான் பலமாக இருக்க முயற்சித்தேன், என் குடும்பத்தை கவனித்துக் கொண்டேன், அடுத்த நாள் என் மனைவியைப் பார்த்து அவளுடன் பேசுவேன் என நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அப்போது சரிவின் விளிம்பில் இருந்த எனது உலகம் சிதைந்து போனது.

அம்மா (ரெஹாப்) வீட்டுக்கு வரமாட்டாள் என்பதை என் மகள்களிடம் நான் எப்படி சொல்லப் போகிறேன்? என்கிற சிந்தனை தான் என்னுள் ஓடிக் கொண்டிருந்தது. நான் இன்னமும் அவர்களிடம் அதை சொல்லவில்லை. இந்த விஷயத்தை எப்படிச் சொல்வது என எனக்குத் தெரியவில்லை. என் மகள்கள், தன் தாயைக் குறித்து ஒவ்வொரு நாளும் என்னிடம் கேட்கிறார்கள், அவள் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறாள் என நான் கூறி வருகிறேன். என் புதிய குழந்தையை கவனித்துக் கொள்ள என் சகோதரி உதவுகிறார்


5 comments:

Powered by Blogger.