June 10, 2021

ஒரேயொரு கப்பலினால் ஒரே இரவில் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்த மீனவர்கள்


கடந்த மாத தொடக்கத்தில், பொருள்களைக் கொண்டு வந்த ஒரு சரக்குக் கப்பல் இலங்கைக் கடற்கரையில் தீப்பிடித்தது - இதனால் ஏற்பட்டிருக்கும் சுற்றுச்சூழல் பேரழிவின் தாக்கத்தை இந்தத் தீவு இன்னும் பல தசாப்தங்கள் தாங்க வேண்டியிருக்கும்.

சில நாட்களாக அது இலங்கைக் கடற்கரையில் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தது. இதனால் ஏற்பட்ட கரும் புகை மண்டலம் பல மைல்களுக்கு அப்பாலும் பரவியது. ஆனால் எக்ஸ்-பிரஸ் பர்ல் என்ற இந்தக் கப்பல் இப்போது பாதி மூழ்கிய நிலையில் இலங்கை கரையோரத்தில் அமைதியாக இருக்கிறது. அதன் அடிப்பகுதி, ஆழமற்ற கடல் படுகையில் அழுந்தியுள்ளது.

இப்போது தீப்பிழம்புகள் அணைந்திருந்தாலும் - பிரச்னைகள் இப்போது தான் தொடங்கியுள்ளன.

"நாங்கள் சிறிய மீனவர்கள், நாங்கள் தினமும் கடலுக்குச் செல்கிறோம். நாங்கள் கடலுக்குச் சென்றால் தான் எங்களுக்கு வருமானம். இல்லையெனில் எங்கள் குடும்பம் முழுவதும் பட்டினி கிடக்க வேண்டியது தான்" என்று ஓர் உள்ளூர் மீனவர் டேனிஷ் ரோட்ரிகோ பிபிசியிடம் தெரிவித்தார்.

கோடிக்கணக்கில் பிளாஸ்டிக் துகள்கள்

இந்தப் பேரழிவுச் சம்பவத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. சிறிய உருண்டை பிளாஸ்டிக் துணுக்குகள் கண்ணுக்குத் தெரிந்தவரை கடல்பரப்பில் பரவியுள்ளன.

இந்த பிளாஸ்டிக் துகள்கள், நர்டில்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன, பெரும்பாலான பிளாஸ்டிக் பொருட்களைத் தயாரிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

"அந்தக் கப்பலில் சுமார் 46 வகை வேதிப் பொருள்கள் இருந்தன. ஆனால் இதுவரை அதிகம் கண்ணுக்குத் தெரியும் பாதிப்பு இந்த ப்ளாஸ்டிக் உருண்டைகள்தான்." என்று இலங்கையின் சுற்றுச்சூழல் ஆர்வலரும் தலைநகர் கொழும்பில் உள்ள சுற்றுச்சூழல் நீதி மையத்தின் நிறுவனருமான ஹேமந்தா விதானகே பிபிசியிடம் தெரிவித்தார்.

மே மாதத்தின் பிற்பகுதியில் இருந்து, எக்ஸ்-பிரஸ் பர்ல் கப்பலில் இருந்து கசிந்த இந்தத் உருண்டைகள், நெகம்போ கடற்கரைகளில் வந்து படிந்தன. அங்குள்ள மீன்கள் வயிறு வீங்கியும் அவற்றின் உடல்களில் இந்த ப்ளாஸ்டிக் குண்டுகள் ஒட்டிக்கொண்டும் காணப்பட்டன.

பிளாஸ்டிக் மட்குவதற்கு 500 முதல் 1000 ஆண்டுகள் வரை ஆகலாம், மேலும் கடல் நீரோட்டங்களால் இலங்கையைச் சுற்றியுள்ள கரையோரங்களுக்கும், கப்பல் எரிந்த இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரைகளுக்கும் இவை கொண்டு செல்லப்படலாம்.

"இந்த பிளாஸ்டிக் உருண்டைகள், நாம் உண்ணும் மீன்களுக்குள் இருந்தால், அவை வழக்கமாக மீனின் செரிமான மண்டலத்தில் இருக்கும். ஆனால் ஒரு சில வகைகளைத் தவிர பொதுவாக நாம் முழு மீன்களை உட்கொள்வதில்லை. ப்ளாஸ்டிக் பெல்லட்டுகள் குறித்துப் பொதுவாக அதிக பரபரப்பு தொற்றிக்கொள்கிறது. பிளாஸ்டிக் உட்கொண்ட மீன்களை மனிதர்கள் சாப்பிடுவதால் தீங்கு விளையும் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சி.எஸ்.ஐ.ஆர்.ஓ பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலம் என்ற அமைப்பைச் சேர்ந்த பிரிட்டா டெனிஸ் ஹார்டஸ்டி.

குடும்பமே பசியால் வாடும்

ஆனால் நீர்கொழும்பு மீனவர்கள் மீனின் உடலுக்குள் இருப்பது என்ன என்பது பற்றிக் கவலை கொள்வதில்லை. மீன் பிடிக்க முடியாமல் போய்விடக்கூடுமோ என்பது தான் அவர்களது அச்சம்.

பாதிக்கப்பட்ட பகுதியில் மீன்பிடித்தல் இப்போது தடைசெய்யப்பட்டுள்ளது - அதாவது அவர்களில் பலர் ஒரே இரவில் வருமானத்தையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிட்டார்கள்.

"இப்பகுதியில் உள்ள பவளப்பாறைகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆபத்தான இரசாயனங்கள் காரணமாக அந்த இனப்பெருக்கம் செய்யும் இடங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன என்று அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 35 ஆண்டுகளாக மீன் பிடிக்கும் தொழில் செய்யும் டியுலின் ஃபெர்னாண்டோ, கடலில் குதித்து இறப்பதைத் தவிர வேறு வழியில்லை" என்று கூறுகிறார்.

சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பல் உரிமையாளர்களிடமிருந்து இழப்பீடு மற்றும் காப்பீட்டுப் பணத்தை அரசாங்கம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், அந்தப் பணத்தின் பெரும்பகுதி தங்களுக்கு உதவப் பயன்படும் என்று உள்ளூர்வாசிகள் நம்பவில்லை.

மீனவர்கள் மற்றும் அவர்களை சார்ந்த சமூகத்தினருக்கும் அதிக உதவி தேவை என்று மீனவர் சங்கம் பிபிசியிடம் கூறியது.

"நாங்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை. தொடர்புடைய பல தொழில்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. வலைகள், என்ஜின்கள், படகுகள், எரிபொருள் எனப் பல தேவைகள் உள்ளன. படகு வலிப்பவர்கள் உள்ளனர். மீன்பிடித் தொழிலுடன் பின்னிப்பிணைந்த ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உள்ளன" என்று குழுவின் தலைவரும் ஒரு மீனவருமான டென்சில் ஃபெர்னாண்டோ கூறுகிறார்.

பல தசாப்தங்களுக்கு நாட்டை பாதிக்கக்கூடிய மிக நீண்டகால தாக்கம், ரசாயன மாசுபாடு.

கப்பலில் நைட்ரிக் அமிலம், சோடியம் டை ஆக்சைடு, தாமிரம் மற்றும் ஈயம் ஆகிய ஆபத்தான வேதிப் பொருட்கள் உள்ளன என்று திரு விதானகே கூறுகிறார்.

தண்ணீரில் கலந்து விட்ட இந்த வேதிப் பொருள்கள் அங்குள்ள கடல் வாழ் உயிரினங்களின் வயிற்றில் நுழைகின்றன. நச்சுத்தன்மையின் விளைவாக சிறிய மீன்கள் விரைவாக இறக்கக்கூடும், ஆனால் பெரிய வகை மீன்கள் பெரும்பாலும் பிழைத்துக் கொள்ளும். ஆனால், சிறிய மீன்களை இரையாகக் கொள்வதனால், அவற்றின் உடலிலும் நச்சுத் தன்மை கலந்துவிடுகிறது.

மீன், ஆமைகள் மற்றும் டால்பின்கள் ஏற்கனவே கடற்கரைகளில் இறந்து கிடந்துள்ளன என்று திரு விதானகே கூறுகிறார். அவற்றில் சில பச்சை நிறமாக மாறியிருந்தன. உலோக, வேதி மாசு கலந்திருப்பதை இது உறுதிப்படுத்துகிறது என்றும் இவர் கூறுகிறார். BBC

0 கருத்துரைகள்:

Post a Comment