Header Ads



அக்கினியில் சங்கமமான கொரோனா உடல், உருக்கமான பதிவை வெளியிட்டுள்ள வைத்தியர்


- வி.ரி.சகாதேவராஜா -

கல்முனைப் பிராந்தியத்திலுள்ள மருதமுனை கொவிட் சிகிச்சை வைத்தியசாலையில் முதலாவது மரணம் நேற்று பதிவாகியது. 

வளத்தாப்பிட்டியைச் சேர்ந்த 63 வயதான தாயொருவரே இவ்விதம் மரணித்துள்ளார். 

அந்தத் தாயின் கணவரும் மகனும், பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இம்மரணம் குறித்த உருக்கமான அனுபவத்தை, கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் குணசிங்கம் சுகுணன் பகிர்ந்துள்ளார்.

அவரது பகிர்வு இதோ,

“சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வீட்டில் ஒரே பிள்ளையான இளைஞன் ஒருவர், மே 30ஆம் திகதி கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

 “இதனையடுத்து, அவர் பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தாயும் தந்தையும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

“மறுநாள் தாய் மற்றும் தந்தை இருவருக்குமே தொற்று அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, தந்தை மகனுடன் பாலமுனை வைத்தியசாலையிலும் தாயார் மருதமுனை கொவிட் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டார்கள்.

“தாயார் நீண்ட காலமாக நீரிழிவு, உயர் குருதியமுக்கம் மற்றும் உயர் கொழுப்பு ஆகிய நோய்களுக்காக மருந்துகளை பாவித்துக் கொண்டிருந்தார். அதே சிகிச்சைகளைத் தொடர்ந்து கொண்டு, அவரை மிக அவதானம் கூடிய கட்டிலில் அனுமதித்தோம்.

“மறுநாள் ஜுன் 1ஆம் திகதியன்று காலை சாதாரணமாக எழுந்து தனது கடமைகளை செய்த அவர், மதியம் உடலுக்கு முடியாதிருப்பதாகக் கூறினார்.

“பரிசோதனை செய்த எமது குழுவினர், சீனி அதிகமாகக் காணப்பட்டதால் அதை சரிப்படுத்த சிகிச்சைகளை மேற்கொண்டு, மாலை அவரின் உடல்நிலையை சரிப்படுத்தியிருந்தனர்.

“பகல் உணவையும் இரவு உணவையும் சாதாரணமாக எடுத்துக் கொண்ட அவர் இரவு 10.45 போல் மூச்செடுப்பதற்கு சிரமமாக இருப்பதாகத் தெரிவித்தார்.  

“மீண்டும் முழுப் பாதுகாப்பு அங்கிகளுடன் உள்நுளைந்த குழுவினரால் நீண்ட நேரம் முயற்சி செய்தும் அவரின் மரணத்தைத்தான் உறுதி செய்ய முடிந்தது.

“உடலை எரிப்பதற்கான அனுமதியை, பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் இருக்கும் கணவரும் மகனும் சில உறவினர்களும் தந்துவிட்டு, தாயாரின் உடலை ஒரு தடவையாவது காட்டுமாறு அழத் தொடங்கினார் அவரது ஒரே மகன்.

“எனக்கும் ஒருமுறை நெஞ்சு விம்மியது. கொரோனா வைத்தியசாலையில் இருக்கும் ஒருவரை வெளியே அழைத்துவர முடியாதே. இருந்தாலும், அத்தாயின் இறுதி நிமிடங்களில் மகனையும் கணவரையும் தவிர்த்துக்கொண்டு போய் எரிப்பத; மனம் இடம் கொடுக்கவில்லை.

“அந்த தாயின் உடலை, மருதமுனை வைத்தியசாலையில் இருந்து அம்பாறை எரியூட்டிக்கு கொண்டு செல்வதற்கு முன் பாலமுனை கொவிட் வைத்தியசாலையில் கணவரதும் மகனினதும் இறுதி அஞ்சலிக்காக ஐந்து நிமிடங்கள் கொண்டு செல்லுமாறு பணித்தேன். பாதுகாப்பு வழங்கிய பொலிஸ், இராணுவத்தினரும் இதற்கு இசைந்தார்கள். ஆயத்தங்களையும் செய்தோம்.

“பாலமுனையில் கணவன், மகன் இருவர்களினதும் அஞ்சலியை முடித்து, முடிந்தளவு கௌரவமாக இறுதி மரியாதை செலுத்தி, அக்கினியில்  ஐக்கியம் செய்தோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.