June 02, 2021

தறிகெட்டு ஓடும் அரசியலை, நெறிப்படுத்தாத முஸ்லிம் சமூகம்


- மொஹமட் பாதுஷா -   

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு ஆனதாக மாறியிருக்கின்ற முஸ்லிம் அரசியலை, முஸ்லிம் சமூகத்துக்கான அரசியலாகக் கட்டமைப்பதில், புத்திஜீவிகள், சிவில் சமூகத்தின் வகிபாகம் இன்னும் சரியாக உணரப்படவில்லை.    முஸ்லிம்களுக்குள் இருக்கின்ற இலட்சக்கணக்கான படித்தவர்கள், பல்கலைக்கழக சமூகம், புத்திஜீவிகள் போன்றோர், ஒரு சாக்கடையைக் கடந்து போவதுபோல, அரசியலை கடந்து செல்கின்றார்களே தவிர, அரசியலையோ  இன, மத விவகாரங்களையோ, முறையாக வழிப்படுத்துவதற்கான காத்திரமான முயற்சிகளை காண முடியாதுள்ளது.   

அரசியலை நெறிப்படுத்துவதற்கோ தட்டிக் கேட்பதற்கோ, ஆள் இல்லாத கரணத்தால் 20 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம் அரசியல் என்பது, முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் என்ற வழித்தடத்தை விட்டு, வேறொரு பாதையில் தறிகெட்டு ஓடிக் கொண்டிருக்கிறது.     இந்தப் பின்புலத்தோடு, முஸ்லிம்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்றுப்பிழைக்கும் அரசியலே ஒரு ‘ட்ரென்ட்’ ஆகியிருக்கின்றது. தமது இருப்புக்காக, இலாபத்துக்கான அவர்கள் எந்த எல்லை வரைக்கும் செல்வார்கள் என்பதும் இரகசியமல்ல.   

உண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் அதிபுத்திசாலிகள் அல்லர். அரசியல் தலைவர்களும் அவ்விதமே. இது பெரும்பான்மை,  சிறுபான்மை அரசியல்வாதிகளுக்கான பொதுப் பண்பாகும்.   இலங்கை அரசியலில் செயற்பாட்டு அரசியலில் உள்ள அரசியல்வாதிகளைப் பார்த்தால், அவர்களின் (அவ)இலட்சணங்கள் புரியும். பட்டதாரி ஒருவரே சரியான தொழிலொன்றைப் பெற்றுக் கொள்ளப் படாதபாடுபட வேண்டியுள்ள தேசத்தில், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எம்.பிக்களில் கணிசமானோர் பட்டதாரிகள் அல்லர்.   

கணிசமானோருக்கு க.பொ.த உயர்தர, சாதாரண தர தகுதிகளே இல்லை என்ற தகவல்களும் வெளியாகியிருந்தன. இதுதவிர, ஊழல் பெருச்சாளிகள், சண்டியர்கள், தவறான வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டவர்கள், மக்கள் பிரதிநிதித்துவத்தின் பெறுமதி தெரியாதவர்கள், பணம் உழைப்பதற்காகவே எம்.பியாக வருபவர்கள் எனப் பல ரகமானோர் உள்ளனர்.   

விரல்விட்டு எண்ணக்கூடிய துறைசார் நிபுணர்கள், மக்கள் சேகவர்களும் நமது அரசியலில் உள்ளனர் என்பதை மறுக்க முடியாது. ஆனாலும், மேற்குறிப்பிட்ட ரகமானவர்களே பெருமளவுக்கு உள்ளனர். முஸ்லிம் அரசியலில் 99 சதவீதமானோர் இந்த வகைக்குள்ளே உள்ளடங்குகின்றனர் எனலாம். எனவே வழிப்படுத்தல் இங்கு அவசியமாகின்றது.   அந்த வகையில், சிங்களவர்களை மையப்படுத்திய பெருந்தேசிய அரசியலையும், தமிழர் அரசியலையும் அந்தந்த சமூகங்கள் சார்ந்த அறிவார்ந்த சமூகம், ஏதோ ஒரு விதத்தில் நெறிப்படுத்துகின்ற பணியைச் செய்கின்றன. இந்தப் பண்பை மாத்திரம், முஸ்லிம் அரசியலில் காண முடியாதுள்ளது.   

உலக அரசியலிலும் சரி, தேசிய அரசியலிலும் சரி படித்தவர்கள், மாணவர்களின் பங்கு மிக முக்கியமானது. இலங்கையில் பெருந்தேசிய அரசியல் பெருவெளியில், பல்கலைக்கழக மாணவர்களைப் பக்கபலமாக வைத்துக் கொண்டு, அரசியல் முன்னெடுப்புகள் இன்றுவரை மேற்கொள்ளப்படுகின்றன.   பௌத்த தேசியவாத மைய அரசியலை, ஓர் அறிவார்ந்த சமூகம், துறைசார்ந்த புத்திஜீவிகள் தேவையான போது, தட்டிக் கேட்கவும் தட்டிக் கொடுக்கவும் முன்வருகின்றனர். தேவை ஏற்பட்டால் வீதிக்கு இறங்கவும் அவர்கள் தயங்குவதில்லை.   

இவ்வாறே, தமிழர் அரசியலில் பல்கலைக்கழக சமூகம்,  படித்த மக்கள் பிரிவினர் கணிசமான பங்களிப்பைச் செய்திருக்கின்றனர். களத்தில் நின்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கருத்தியலை விதைத்தவர்கள்,  புலம்பெயர் செயற்பாட்டாளர்களைப் போல கிட்டத்தட்ட சமஅளவான பங்களிப்பை கல்விச் சமூகம் வழங்கியிருக்கின்றது.   இது விடயத்தில், முஸ்லிம் சமூகம் அதளபாதாளத்தில் கிடக்கின்றது என்றுதான் கூற வேண்டியிருக்கின்றது.    முஸ்லிம் சமூகத்திலுள்ள ஏனைய படித்த தரப்பினர், புத்திஜீவிகளின் நிலையும் இதுதான். சிலருக்குப் படிப்பு என்பது கொழுத்த சீதனத்தோடு முடிந்து விடுகின்றது. வேறு சிலருக்கு, பதவி உயர்வுகளுக்காகத் தேவைப்படுகின்றது.    அதனையும் தாண்டி, ஒரு சில புத்திஜீவிகள் சமூகத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டாலும், இப்போதிருக்கின்ற சீரழிந்த சமூகக் கட்டமைப்பில், அவர்களது முயற்சிகள் வீணாகிப் போவதைக் காணலாம்.   

படித்தவர்களின் நிலையே இப்படி என்றால்.... பணம் கொடுத்து கலாநிதிப் பட்டம் வாங்குவோர், பொன்னாடைக்காக அலைந்து திரியும் கூட்டம், சமூக சேவகர்கள் என்று பெயர் சூட்டிக்கொள்ளும் புகழ்விரும்பிகள், கள்ளச் சான்றிதழ் பட்டதாரிகள் முதல் இலவசக் கல்வியின் புனிதத்தைக் கெடுத்து, அதனை வியாபாரமாக மாற்றியுள்ள பேர்வழிகள் போன்ற வகுதிக்குள் உள்ளடங்குவோர் மேற்சொன்ன பணியைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.   

எது எவ்வாறாயினும், முஸ்லிம் அரசியலை முறையாகக் கட்டமைத்து, அதனை மக்களுக்கான அரசியலாக வழிப்படுத்த வேண்டிய ஒரு பிரகடனப்படுத்தப்படாத பொறுப்பு, படித்த சிவில் சமூகத்துக்கு இருக்கின்றது.    வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சேவை நோக்குள்ள ஆசிரியர்களை உள்ளடக்கிய படித்த சமூகம், கல்வியியலாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், சட்டத்தரணிகள், மார்க்க அறிஞர்கள், உலமா சபையினர், செயற்பாட்டாளர்கள், ஊடகத் துறையினர் என, பொறுப்புவாய்ந்த சிவில் தரப்பினரின் பட்டில் நீளமானது.   

இந்தத் தரப்பினர் இரண்டு விதமாக முஸ்லிம் அரசியலை, சமூகம் சார்ந்த அரசியல் வழித்தடத்துக்கு நெறிப்படுத்த முடியும். ஒன்று, அரசியல்வாதியை அல்லது மக்கள் பிரதிநிதிக்கு ஆலோசனை கூறி வழிப்படுத்தல்.   இரண்டாவது, சமூகத்துக்குள் இருந்து கொண்டு, சிவில் அமைப்பாக மக்களைத் தெளிவூட்டுவதும் எம்.பிக்களுக்கு அழுத்தம் கொடுப்பதுமான நகர்வுகளில் ஈடுபடலாம்.   

ஓர் அரசியல்வாதி என்பவர், சகலகலா வல்லவராக, பெரும் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும் என்பதில்லை. எல்லா விவகாரங்களிலும் ஒரே நேரத்தில் சமஅளவான கவனம் செலுத்துவதும் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும்.   எனவே, அவர்கள் தம்மைச் சுற்றிப் படித்த சிவில் சமூகத்தை, தம்மை நெறிப்படுத்தக் கூடிய ஆளுமைகளை வைத்திருக்க முடியும். அதுதான் உலக வழக்கமாகும். எம்.எச்.எம்.அஷ்ரப் போன்ற ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகள், சிறந்த ஆலோசகர்களை தம்மோடு வைத்திருந்தார்கள். அது நல்ல பலாபலன்களைக் கொடுத்திருக்கின்றது.

ஆனால், இன்றிருக்கின்ற மேதாவித்தனமான முஸ்லிம் அரசியல்வாதிகள், தம்முடன் அறிவுரைஞர்களை வைத்திருப்பதைப் பெரும்பாலும் காண முடியாது. மாறாக, ‘ஜால்ரா’ கூட்டத்தையும் ‘பேஸ்புக்’ போராளிகளையும் வேலைவெட்டி இல்லாத சின்னப் பெடியன்களையுமே தம்முடன் வைத்துக் கொள்கின்றனர்.   முஸ்லிம் தலைவர்களும் தளபதிகளும் தமக்கு எல்லாம் தெரியும் என நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது, அவ்வாறு காண்பிக்க முயல்கின்றார்கள். சிவில் சமூகம் தலையிடுவதை அவர்கள் விரும்பவில்லை.  தம்மை விடப் புத்திசாலியோ எதிர்த்துக் கேள்வி கேட்பவனோ தனது சுற்றுவட்டாரத்தில் இருக்கக் கூடாது என்பதில், அவர்கள் மிகக் கவனமாக இருக்கின்றனர்.   

சில நிறுவனங்களில் மேலதிகாரிகளுக்கு கீழே பணிபுரிகின்ற திறமையான, மேலதிகாரியை விட, அதிக தகைமையுள்ள பணியாளர்கள் துரத்தப்படுவது போல, அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை குறுக்குவெட்டாக நோக்குகின்ற தனிநபர்கள் ஓரங்கட்டப்படுவது வழக்கமானது.    நடுத்தர, கீழ்மட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் கூட, அறிவார்ந்த ரீதியில் அரசியலை அணுவதற்கு அக்கறையற்று இருக்கின்றனர் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். யாராவது படித்தவர்கள், புத்திஜீவிகள் கூறுகின்ற அறிவுரைகளை கேட்பதை விட கட்சிப் பாடல்களுக்கும், தலைவர்களின் வீராவேச பேச்சுகளுக்கும் மயங்குகின்ற மக்கள் கூட்டமே அதிகம் எனலாம்.   

இந்த நிலை மாற வேண்டும்! முஸ்லிம்களின் அரசியல் உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் நெறிப்படுத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.    முதலாவதாக, இதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற தெளிவான மனநிலைக்கு முஸ்லிம் சமூகம் வந்தாக வேண்டும். அதன்பிறகே, அதனை எவ்வாறு செய்வது என்பது பற்றிச் சிந்திக்க முடியும். 

2 கருத்துரைகள்:

இந்த கட்டுரை இலங்கை முஸ்லிம்கள் அனைவருக்கும் வெளிப்படுத்த பட வேண்டும் (படித்தவர்கள் பொது விடயங்களை விட்டது மட்டுமல்ல விற்று விட்டனர் _தமது பிழைப்பை தக்க வைத்துக் கொள்ள தற்போதய படித்த மட்டம் முன்னுரிமை அளித்து வருகிறது ஆனால் பொது விடயம் வரும்போது பேசாமல் பாமரமக்களிடம் விற்று விட்டு இலாபத்தில் மட்டும் பங்கு எடுத்து கொண்டு செல்கிறது.)

"Politics is the last resort of the scoundrel." So said the famous Sir George Bernard Shaw.

He certainly hit the nail on its head. Not only in Sri Lanka, the world over, we see politicians proving the words of Sir G.B.S. So, the question is, should we spend any time and effort in trying to change the scoundrels? The answer is obvious.

So, the next question is, what should we do?

Shouldn't we, Muslims, live our lives as Muslims? Are we living our lives as Muslims, never mind whether we are qualified in various disciplines or are products of Madrasahs and give bayans on Fridays in Masjids or just traders or office workers or skilled or unskilled workers?

A Muslim, by definition, is one who submits to the Will of Allah (Swt).
How many of us know or care about the Will of Allah (Swt) for us to consider submitting to His Will?

Our first and most important task is to live like Muslims, the way we should. For that, we must learn and properly understand Islam, so that we become Exemplary Muslims and NOT Namesake Muslims that we are today, not just in Sri Lanka, but the world over.

Let me conclude with the example of early Muslim visitors to Indonesia about 500 years back when Indonesia was a 100% pagan country. The early Muslim visitors to Indonesia were traders who practised Islam in their trade and daily lives. Their prices were not high compared to the non-Muslim traders and When they sold their goods, if the goods had any defects, they told the buyers about the defects first which was something new to the Indonesians who were curious to find out why the Muslim traders were pointing out the defects first and asked them why. The reply was that "we are Muslims by Faith and we must be truthful and honest according to our Faith." From then on, it was a matter of the Indonesians beginning to learn about Islam and embracing Islam. So much so, a country which was 100% pagan became almost 100% Muslim in course of time.

So, the ONLY solution to our plight, not just in Sri Lanka, but the world over, is for us to cease to be namesake Muslims and become Real, Practicing Muslims. As Namesake Muslims, we are conveying the WRONG Message of Islam and creating bitterness among non-Muslims about us.

So, Lets begin to change ourselves from now on, Insha Allah.


Post a Comment