Header Ads



புத்தளம் நகரசபை புதிய தலைவர்..? ஹக்கீம் ஊடகங்களுக்குத் தெரிவித்தவை


புத்தளம் நகரசபை புதிய தலைவர்  தெரிவு தொடர்பில்  முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அண்மையில்  ஊடகங்களுக்குத்  தெரிவித்தவை, வேறு கேள்விகளுக்கும் பதிலளித்துள்ளார்.

புத்தளம் நகர சபையில் மூன்று தடவைகள் தவிசாளராக பதவி வகித்த கே.ஏ.பாயிஸ்  சில நாட்களுக்கு முன்னர் எம்மை விட்டு திடீரென மறைந்து போன நிலையில், புத்தளம் நகர சபையின் தவிசாளர் பதவி வெற்றிடத்தை நிரப்புவது சம்பந்தமாக அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்களோடும், கட்சியின் புத்தளம் நகர சபையின் உறுப்பினர்களோடும் கலந்தாலோசனையொன்றை கட்சியின் தலைமையும், செயலாளரும்  இணைந்து நடத்தியிருக்கின்றோம்.

அதன்படி, சுமுகமான ஒரு தீர்வை எட்டி, வெற்றிடமாக இருக்கின்ற புத்தளம் நகர சபை தவிசாளர் பதவிக்கு தற்போதைய நகர சபை உறுப்பினரான கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற ரபீக்கை நியமிப்பது என்ற தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம். இது சம்பந்தமாக தேர்தல் ஆணையாளர் வெற்றிடத்தை வர்த்தமானியில் வெளியிட்டதன் பின்னர், அதற்கான தெரிவு திகதியை தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்தவுடனேயே இவ்விடயம் தொடர்பில் உறுப்பினர் ரபீக்கின் பெயரை கட்சியின் சார்பில்  ஏனைய உறுப்பினர்கள் ஏகமனதாக முன்மொழிவதாக ஒரு தீர்மானத்தை கட்சி உறுப்பினர்களும், கட்சி தலைமையும் சேர்ந்து எடுத்திருக்கின்றது.

புத்தளம் நகர சபையில் மூன்று தடவைகள் தவிசாளராக இருந்து , புத்தளம் நகர சபை பிரதேசத்தில் பாரிய சேவையை செய்திருக்கின்ற  கே.ஏ.பாயிஸின் திடீர் மறைவு ஏற்படுத்தியிருக்கின்ற வெற்றிடம் இலகுவாக யாராலும் நிரப்பிவிடக் கூடியதல்ல. இருந்தாலும், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையாக, பிளவுகள் இன்றி, எவ்வித சிக்கல்களும் இல்லாமல் தலைமைத்துவத்தோடு சேர்ந்து ஒருமித்த முடிவாக ரபீக்கை அதற்காக முன்னிலைப்படுத்துவது  தொடர்பில் எடுத்திருக்கின்ற இந்த முடிவு எங்கள் அனைவருக்கும் ஆறுதல் அளிக்கின்றது.

கேள்வி :-அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துறைமுக நகர அபிவிருத்தி சட்டமூலம் சம்பந்தமான வாக்கெடுப்பில் கலந்துகொள்வதிலிருந்து நீங்களும், உங்களது கட்சி உறுப்பினர்களும் தவிர்ந்து கொண்டமைக்கான காரணம் என்ன?

பதில் :- கட்சியின் அரசியல் உச்சபீடம் இவ்விடயம் தொடர்பில்  ஆராய்ந்து, கட்சியின் பாராளுமன்றக் குழு, கட்சியின் தலைவரோடு சேர்ந்து ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும் ; தலைமை ஒருபுறமும், உறுப்பினர்கள் மறுபுறமுமாக வாக்களிப்பது என்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று தீர்மானம் எடுத்திருந்தது.

குறிப்பாக, இந்த துறைமுக நகர அபிவிருத்தி சம்பந்தமான சட்டமூலத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள், அதில் அரசாங்கத்தினால் விடப்பட்ட பிழைகளை மிகத் தெளிவாக நான் பாராளுமன்றத்தில் என்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தேன்.

எதிர்கட்சியின் சார்பில் முன்வைத்திருக்கின்ற திருத்தங்களை உள்வாங்குவதன் மூலம் ஏகமனதாக இந்த சட்டமூலத்தை நிறைவேறுவதற்கு அரசாங்கம் இணங்க வேண்டும். அதன் மூலம் தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கூறியிருந்தோம். கட்சியுடைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் கிடையாது. நாங்கள் இரண்டு கட்சிகளும் ஒருமித்த முடிவை எடுப்பதன் மூலம் தான் துறைமுக நகர அபிவிருத்தியும், அதனுடைய பொருளாதார எதிர்பார்ப்புக்களும் சர்வதேச ரீதியாக சாத்தியமாகும் என்பதே எங்களது நிலைப்பாடாகும்.

ஆனால், துர்திர்ஷ்டவசமாக அரசாங்கம் அதனைத்  தவிர்த்துக் கொண்டிருக்கின்றது. இனிமேலாவாது, நாங்கள் முன்மொழிகின்ற திருத்தங்களை அரசாங்கம் உள்வாங்கி நடந்துகொள்ள வேண்டுமென்பது எங்களுடைய எதிர்பார்ப்பாகும். இந்த அடிப்படையில் கட்சியின் உறுப்பினர்கள் பிளவுபட்டு வாக்களிக்காமல் கட்சி தலைமையுடன் ஒருங்கிணைந்து, வாக்களிக்கும் விடயத்தில் இருந்து தவிர்ந்து இருந்தோம். இது யாரையும் எதிர்த்தோ, யாருக்கும் ஆதரவாகவோ எடுக்கப்பட்ட முடிவல்ல.

கேள்வி :- புத்தளத்தில் முஸ்லிம் காங்கிரஸின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு எப்படியிருக்கப் போகின்றது?

பதில் :- கட்சியின் சார்பில் ஒருவரை அவ்வெற்றிடத்திற்கு நியமிப்பது தொடர்பான விடயத்திலும், தேர்தல் ஆணையாளர் வர்த்தமானியில் கட்சியிடம் பெயரை பிரேரிக்குமாறு அறிவித்தவுடனேயே அந்த தீர்மானத்தை அறிவிப்போம். இவ்விடயம் தொடர்பில் பூர்வாங்க கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தோம். தவிசாளர் வாக்கெடுப்பிற்கு முன்பாக அந்த வெற்றிடம் நிச்சயமாக நிரப்பப்படும். இதைத் தவிர புத்தளம் மாவட்டத்தின் அரசியல் பதவிகள் சம்பந்தமாக மறைந்த பாயிஸின் இழப்பைத் தொடர்ந்து , கட்சியின் சார்பில் பரந்துபட்ட கலந்துரையாடல்களை நடத்தி மிக விரைவில் வெற்றிடங்களை நிரப்புவோம்.

கேள்வி :- தேர்தல் முறைமையில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகின்றது. அதை முஸ்லிம் காங்கிரஸ் எப்படி பார்க்கின்றது?

பதில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் தேர்தல் முறை மாற்றங்கள் சம்பந்தமாக எங்களுடைய சிபாரிசுகளை செய்ய இருக்கின்றோம். குறிப்பாக, மீண்டுமொரு முறை தொகுதிவாரி தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அரசாங்க தரப்பு  தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருக்கின்றது. முஸ்லிம் காங்கிரஸை பொறுத்தமட்டில், விகிதாசார தேர்தல் முறைமையின் மூலம் முழு மாவட்டத்திலும் இருக்கின்ற மக்கள் வாக்களித்து உறுப்பினர்களை தெரிவு செய்யும் வாய்ப்பு இலங்கையில் சிதறி வாழுகின்ற முஸ்லிம்களுக்கு தங்களது பிரதிநிதித்துவத்தை பாதுகாத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கின்றது.

 அரசாங்கமோ, வேறு எவருமோ முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை குறைப்பதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. அந்த அடிப்படையில் புதிய தேர்தல் சீர்த்திருத்தங்களை கருத்திற்கொண்டு இந்த புத்தளம் மாவட்டத்தில் சகல பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்கள் வாக்களித்ததன் மூலம் இம்முறை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரொருவரை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பங்களிப்பு வெகுவாக இருந்ததை யாராலும் மறுக்க முடியாது.

இந்தப் பின்னணியில் புத்தளம் மாவட்டத்தின் அரசியல் தலைமையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னின்று வழிநடத்துவதற்கான வகையில் உரிய முன்மொழிவுகளை நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலந்துரையாடி அறிவிக்க இருக்கின்றோம்.

கேள்வி :- கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டதைப் போல எதிர்காலத்தில் வரப்போகும் தேர்தல்களிலும் அவ்வாறு கூட்டணியாக இணைந்து போட்டியிடுவீர்களா?

பதில் :- கூட்டணி அரசியல் என்பதில் ஒவ்வொரு தேர்தல்களிலும் தேவைக்கேற்ற விதத்தில் தான் அத்தகைய தீர்மானத்தை எட்டுகின்றோம். தேவையில்லாமல் கூட்டணி அமைப்பது எங்களுடைய நோக்கம் அல்ல. பாராளுமன்ற தேர்தலில் வரலாற்று ரீதியாக புத்தளம் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுவந்த காரணத்தினால் மாத்திரம் தான் இதனை மேற்கொண்டிருந்தோம். முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான முயற்சியில் முஸ்லிம் காங்கிரஸ் எடுக்கின்ற நல்ல எத்தனங்களுக்கு ஏனைய தரப்புகளிடமிருந்து சரியான பதில் கிடைக்குமாக இருந்தால் நாங்கள் அதனை மீண்டும் பரீசிலித்துப்  பார்க்கலாம். ஆனால், அதுதான் நியதி என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றார்.  

புத்தளத்தில் நடந்த இந்தச் சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் கலந்து கொண்டார்.

2 comments:

  1. Oru Thelliwaana Mana noyaali - Rauff Hakeem

    ReplyDelete
  2. முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு மட்டுமே படம் காட்டும். சாதனைகள் அனைத்தும் அஷ்ரப் அவர்களுடன் புதையுண்டு போயிற்று.

    ReplyDelete

Powered by Blogger.