Header Ads



இப்பொழுது சந்தோசமா..? பிரதமரிடம் கேள்வியெழுப்பிய பெண் எம்.பி.


பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களே இப்பொழுது உங்களுக்கு சந்தோசமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி கவிரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக அவர் இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இன்று வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகரித்துள்ளது. பெரிய வெங்காயம் 130 ரூபா, உருளைக் கிழங்கு 170 ரூபா, நாடு அரிசி 100 முதல் 120 ரூபா வரையில், சம்பா 150 ரூபா, கீரி சம்பா 200 ரூபாவிற்கும் அதிகம். பருப்பு 230, உப்பு 65 ரூபா, கோதுமை மா 120 ரூபா, பால் மாவின் விலை 1200 ரூபாவாக உயர்த்தப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளது.

கௌரவத்திற்குரிய பிரதமர் இந்த நாடாளுமன்றின் எங்காவது இருப்பார் என நினைக்கின்றேன். அவர் தேர்தல் மேடைகளில் மக்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். பெரிய வெங்காயம் எப்படி? அண்மையில் உருளைக்கிழங்கு சாப்பிட்டீர்களா? சின்ன வெங்காயம் எப்படி? இப்பொழுது சுகமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

நாம் மக்களிடமல்ல நாம் பிரதமராகிய உங்களிடம் கேட்கின்றோம். தற்பொழுது பெரிய வெங்காயத்தின் விலை எப்படி என்று? அண்மையில் உருளைக்கிழங்கு சாப்பிட்டீர்களா? பருப்பு விலை எப்படி? நீங்கள் சுகமாக இருப்பீர்கள் என்றாலும் மக்கள் சுகமாக இல்லை கௌரவ பிரதமர் அவர்களே?இறுதியாக நாட்டு மக்களை இந்த பொறியில் சிக்க வைத்த உங்களுக்கு இப்பொழுது சந்தோசமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் தற்பொழுது காணிகள் கொள்ளையிடப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தின் ஆசியுடன் காணிகள் கொள்ளையிடப்படும் நிலைமை காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நெல், தேயிலை, கிழங்கு, மரக்கறி விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்படும் இயற்கை பசளை திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இயற்கை பசளையின் தரம் பற்றி கேள்வி எழுவதாகத் தெரிவித்துள்ளார். தரிசு நிலங்களை செழிக்கச் செய்வதாக ஆட்சி பீடம் ஏறிய அரசாங்கம் விவசாய நிலங்களையும் அழித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அரிசியில் தன்னிறைவை ஏற்படுத்துவதாக உறுதிமொழி வழங்கிய அரசாங்கம் தற்பொழுது ஒரு லட்சம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நல்ல கேள்வி நல்லா இன்னும் கொஞ்சம் உறைக்கிற மாதிரி கேளுங்கள் அக்கா நாட்டு மக்களின் தேவைக்கான அரிசியை சொந்த நாட்டில் உற்பத்தி செய்ய வக்கில்லாத அரசு மக்களின் சாதாரண தேவை யான மஞ்சள் இறக்குமதியை தடை செய்த அரசு இன்று அரிசியை இறக்குமதி செய்யப் பட இருக்கிறது வெட்கம்

    ReplyDelete

Powered by Blogger.