Header Ads



பவள விழாக் காணும், அக்கரைப்பற்று மத்திய கல்லூரி


ஒரு பாடசாலையின் வரலாறும் அது தன்னகத்தே கொண்டிருக்கின்ற தொன்மையும், வெறுமனே கட்டிடங்களுடனும்; பாடப் புத்தகங்களுடனும் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. அந்தப் பாடசாலையில் கல்விகற்ற மாணவர்கள் உள்ளடங்கலாக அதனோடு தொடர்புடைய எல்லோருடைய வாழ்க்கையோடும் பின்னிப் பிணைந்த ஒன்றாகும். 

ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வியறிவு ஊட்டி அவர்களது வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமன்றி, எண்ணிலடங்கா அனுபவங்களையும் ஆளுமைகளையும் கற்றுக் கொடுக்கின்ற கல்விக் கூடமாகவே பாடசாலைகள் காணப்படுகின்றன. அப்பேர்ப்பட்ட ஒரு பாடசாலையாக திகழும் அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை 2021 ஜூன் 10ஆம் திகதி பவள விழாக் காண்கின்றது. 

கிழக்கு மாகாணத்தில் முதலாவது முஸ்லிம் தேசிய பாடசாலை என்ற பெருமை உள்ளடங்கலாக பல பெருமைகளைப் பெறுகின்ற அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியானது, இதுவரை 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கல்வி புகட்டி, அவர்களை பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளாக உருவாக்கியுள்ளது. 

அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் 'உப்புக்;குதம்' என்றழைக்கப்பட்ட (தற்போது மாவட்ட வைத்தியசாலை அமைந்துள்ள) இடத்தில் 1946 ஜூன் 10ஆம் திகதி 'அக்கரைப்பற்று ஆங்கில கனிஷ்ட பாடசாலை' என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கில மொழிமூலமான இப்பாடசாலைக்கு தமிழ் பேசும் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்;, மர்ஹூம் எம்.எஸ்.அலாவுதீன் முதல் மாணவர் ஆவார். 

பின்னர் இடப்பற்றாக்குறை காரணமாக, 1953 ஜனவரி 1ஆம் திகதி அக்கரைப்பற்றின் மேற்குப்புறமாக காணப்பட்ட 'நரிப்பிட்டி' என்ற நிலப்பரப்பிற்கு மாற்றப்பட்டது. அப்போது அதிபராக இருந்த வீ. நாகையா மாஸ்டர் தலைமையில் மாணவர்கள் மேசை, கதிரைகளை தலையில் சுமந்து கொண்டு வந்து, புதிய இடத்தில் கற்றலை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. 

மிஷனரி பாடசாலைகள் கோலோச்சிய அக் காலப்பகுதியி;ல் இப்பாடசாலையை உருவாக்குவதற்காக பாடுபட்ட பலரது பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அப்போது பிரதேச காரியாதிகாரியாக கடமையாற்றிய சுபைர் மொஹிதீனை சந்தித்து இவ்விடயத்தை எடுத்துக்கூறி பாடசாலை உருவாக வித்திட்ட ஊர் முக்கியஸ்தர்களான எம்.ஐ.எம்.மொஹிதீன், எம்.எச்.எம்.முஸ்தபா உடையார், எம்.கே. உமர்லெப்பை விதானை, ஏ.எல்.அகமட் முகிடீன் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். 

அதேபோன்று, இப்பாடசாலையின் நீடித்த ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக அயராது உழைத்த சமூக ஆர்வலர்களான ஏ.எம்.இஸ்மாயில் (சங்கீத மாஸ்டர்), முகைதீன் கங்காணியார், இலவக்கனி புலவர், மரைக்கார் தம்பி, முகம்மது இஸ்மாயில் ஓடாவியார், சாலி ஓடாவியார், சீனி முகம்மது மரைக்கார் ஆகியோரும் என்றென்றைக்கும் நன்றியுடன் நினைவு கூரப்படுகின்றனர். 

புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட இப்பாடசாலை 1958 இல் சிரேஷ்ட ஆங்கிலப் பாடசாலையாகவும், 1963இல் முஸ்லிம் மகா வித்தியாலயமாகவும், 1979 முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயமாகவும் பரிணாம வளர்ச்சி கண்டது. பொன்விழாக் காண்பதற்கு சில வருடங்கள் முன்னதாக அதாவது 1992ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் திகதி, அடிப்படைத் தகுதி தராதரங்களின் அடிப்படையில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. 

இப்பாடசாலையில் இதுவரை கடமையாற்றிய அதிபர்கள் - எஸ்.ஏ.ஹூசைன், எஸ்.எம்.லீனா, எஸ். சிவகுருநாதன், எம்.சாஹூல் ஹமீட், வீ. நாகையா, ரீ. இப்றாலெப்பை, எம்.பி.முகம்மட் தம்பி, எம்.ஏ.உமர்லெப்பை, எம்.ஏ.காதர் மொஹிதீன், எம்.ஐ.எம்.நஹீம், எம்.ஏ.மொஹிடீன் பாவா, எம்.ஏ.எம். மொஹிடீன், எம்.ஐ.உதுமாலெப்பை (முன்னாள் எம்.பி.), எம்.ஏ.சாலிமு, எம்.ஐ.ஜூனைதீன், எம்.ஏ.உதுமாலெப்பை (கொத்தணி அதிபர்) ஏ.அப்துல் அஸீஸ், ஏ.ஆதம்லெப்பை, ஏ.எல்.எம்.சக்கரியா, எம்.ஐ.எம்.அமீருதீன், எம்.ஐ.எம்.சஹாப்தீன், எம்.எம்.எம்.மீராசாகிப், யூ.எல். மன்சூர் ஆகியோர் ஆவர்.  தற்போது இக்கல்லூரியின் அதிபராக ஏ.பி. முஜீன் கடமையாற்றுகின்றார். 

'உலக இரட்சக நாயனே, அன்பாளனே அருளாளனே,..' என்று ஆரம்பிக்கும் இக்கல்லூரியின் கீதத்தை இயற்றியவர் ஓய்வுபெற் ஆசிரியர் மக்கத்தார் ஏ.மஜீத் ஆவார். அதற்கிணங்கவும், 'ஓதி உணர்;ந்து ஒழுகு' என்ற தாரக மந்திரத்திற்கு இணங்கவும் இப்பாடசாலை 75 ஆண்டுகள் பயணித்திருக்கின்றது எனலாம். இன்று நெருக்கடியான சூழலிலும் நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக கற்றல் நடைபெறுவதை பாடசாலைச் சமூகம் உறுதிப்படுத்துகின்றது. 

இப்பாடசாலையில் முஸ்லிம் மாணவர்களைப் போலவே தமிழ் மாணவர்களும் கணிசமாக கற்றுள்ளனர். இக்கல்லூரியின் வளர்ச்சியில் முஸ்லிம் அதிபர் ஆசிரியர்களைப் போலவே தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருக்கின்றார்கள் என்பது பதிவு செய்யப்பட வேண்டியது. 

அக்கரைப்பற்று மத்திய கல்லூரிக்கு பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமானது இப்பாடசாலைக்கு கிடைத்த அர்ப்பணிப்புமிக்க ஆசான்களும் பாடசாலையை நேசிக்கும் மாணவர்கள், நலன்விரும்பிகளும் ஆவர். அடுத்தது, பாடவிதான கற்பித்தலுக்கு மேலதிகமாக இணைப்பாடவிதான விடயங்கள், தொழில்நுட்ப கற்கை மற்றும் '13 வருட' தொடர்கல்வித் திட்டம்; ஆகியவற்றையும் சமகாலத்தில் மாணவர்களுக்கு வழங்கும் பாடசாலையாக காணப்படுகின்றமையாகும். 

ஒவ்வொரு ஆண்டும் கணிசமான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகின்ற சமகாலத்தில் தமிழ் மொழித்தினம், ஆங்கில மொழித்தினம், விவாதப் போட்டிகள், விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்களை ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வெற்றிவாகை சூடிய வரலாறு இக்கல்லூரிக்கு இருக்கின்றது. பாடசாலைச் சமூகத்திற்கு மேலதிகமாக, பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர் சங்கம், அதனது வெளிநாட்டுக் கிளைகள், நலன் விரும்பிகள், நன்கொடையாளர்கள் என பல தரப்பினரும் இப்பாடசாலையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ளனர். அரசியல்வாதிகள் என்ற வகையில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா பாடசாலையின் அபிவிருத்திக்கு அதிக பங்களிப்புச் செய்துள்ளார். முன்னாள் எம்.பி;க்களான எம்.ஐ.எம்.மஜீட், எம்;.ஐ.உதுமாலெப்பை, போன்றோரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

75 வருடங்களுக்கு முன், ஐம்பதுக்கும் குறைவான மாணவர்களுடனும் மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, பலரது கூட்டு அர்ப்பணிப்பினால் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு 'ஏ.பி. சுப்பர் கிரேட்' தராதரமுடைய தேசிய பாடசாலையாக இன்று மிளிர்கின்றது. 

தற்போது 2200 இற்கும் மேற்பட்ட மாணவர்களையும் 151 ஆசிரியர்களையும் கொண்டியங்குகின்ற இப்பாடசாலை மேலும் சிறப்பான அடைவுகளைப் பெறுவதுடன் இன்னும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்; எமக்குள்ளது. 

-  ஏ.எல்.நிப்றாஸ் - (பழைய மாணவன்)

No comments

Powered by Blogger.